உள்ளூர் செய்திகள்

குரங்கின் கர்வம்!

காடு வழியாக நடந்து போய் கொண்டிருந்தார், புத்தர். அவரை பின் தொடர்ந்தது, ஒரு குரங்கு.புத்தர் திரும்பி பார்க்கவும், குதித்து உயரே எழும்பி, ஒரு மரக்கிளையில் போய் உட்கார்ந்தது.'ஏன் இப்படி பண்ற...' என்றார், புத்தர்.'என்னை சாதாரணமா நினைக்க வேண்டாம். நான் மகா மந்தி. முடியாதுங்கிற வார்த்தையே என் அகராதியில கிடையாது. என்ன வேணும்னாலும் செய்வேன்...' என்றது.'அப்படின்னா ஒரு பந்தயம் வச்சுக்கலாமா?' 'ஓ வெச்சுக்கலாமே...' 'வேற ஒண்ணுமில்ல... இப்ப நீ மேல எழும்பி அந்த கிளையில உட்கார்ந்த மாதிரி, அங்கேயிருந்து தாவி என் உள்ளங்கையில வந்து உட்கார வேண்டும்; அவ்வளவு தான்...' என்றார்.'அப்படி உட்கார்ந்துட்டா என்ன பரிசு?' என கேட்டது.'சொர்க்கத்துல இருக்கும் மாமன்னன் மரகத சக்கரவர்த்தியை, என்னோடு வந்து இருக்கும்படி அழைத்துள்ளேன். அந்த சமயத்தில் அவருடைய அரியணை அங்கே காலியாயிடும்.'நீ, அதில் போய் உட்கார்ந்து கொள்ளலாம். பந்தயத்தில் தோற்றால், ஒரு கல்ப காலம், இந்த பூமியில் வாழ வேண்டியிருக்கும்...' என்றார், புத்தர்.'இது, எனக்கு ரொம்ப சாதாரண விஷயம். என்ன, இப்பவே தாவட்டுமா...' என்றது.குரங்கு சவுகரியமா உட்கார்றதுக்காக, உள்ளங்கையை நீட்டினார். அவருடைய கை, தாமரை இலை அளவுக்கு விரிந்தது.தாவ தயாரானது, குரங்கு.அதற்கு முன், 'இந்த கிளையிலிருந்து அந்த கிளைக்கு தாவுறது, எனக்கு ரொம்ப அற்பமான ஒரு வேலை. என் கவுரவத்துக்கு இது சரியாக இருக்காது. அதனால், இந்த கிளையிலிருந்து உயரே எழும்பி மேலுலகம் போய், அங்கே ஒரு சுற்று சுற்றி விட்டு, அங்கேயிருந்து வந்துடலாமே...' என நினைத்தது.'என்ன யோசிக்கிற?' என்றார், புத்தர்.'ஒண்ணுமில்ல, இதோ பாயறேன்...' என சொல்லி உயரே போய், கொஞ்ச நேரத்தில் வான உலகத்துக்கு போனது. அங்கே, இளஞ்சிவப்பு நிறத்தில் ஐந்து பளிங்கு துாண்கள் இருந்தன.'புத்தரிடம் போய், இந்த பளிங்கு துாண்களை பார்த்தேன்னு சொன்னால் திகைத்து போய் விடுவார். இந்த துாணில் ஏதாவது அடையாளம் செஞ்சுட்டு போகணும்...' என, அந்தரத்தில் மிதந்தபடி நினைத்தது.உடனே ஒரு துாணில், 'ஒரு மகா ஞானி இங்கே வந்துட்டு போனார்...' என எழுதி வைத்து, அப்படியே கீழே தாவி வந்தது.'எப்படி பார்த்தீங்களா... வான உலகத்துக்கு போய், அங்கே இருக்கும் ஐந்து பளிங்கு துாண்களை பார்த்துவிட்டு, அதில், நான் வந்த விபரத்தை எழுதி வைத்துவிட்டு வந்துள்ளேன்...' என்றது, குரங்கு.'அப்படியா?' என்றார், புத்தர்.'ஆமாம். சந்தேகமாக இருந்தால் வாங்க, அழைச்சுகிட்டு போய் காட்டறேன்...' என்றது. 'தேவையில்லை. அப்படியே கொஞ்சம் கீழே குனிந்து பார்...' என்றார், புத்தர்.அங்கே, புத்தரின் உள்ளங்கை தெரிந்தது; அவரின் ஒரு விரலில் அது எழுதிய வாசகம் தெரிந்தது.'அப்படின்னா, வானத்தில் நான் பார்த்தது புத்தரின் விரல்களா?' என திகைத்து, அதை புரிந்து கொண்டதும், அதன் கர்வமும் அழிந்து போனது. - பி.என்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !