நவன்ன பர்வ திருவிழா!
மே 10 - அட்சய திரிதியைஇப்படியொரு திருவிழா பெயரை கேள்விப்பட்டது இல்லையே, என்கிறீர்களா! நாம் விசேஷமாகக் கொண்டாடும், அட்சய திரிதியை விழாவின், இன்னொரு பெயர் தான் இது. நவன்ன பர்வம் என்றால், மகிழ்ச்சிக்குரிய சந்தர்ப்பம் என பொருள்.மகாபாரதக் கதையை, 18 பர்வங்களாகப் பிரித்தார், வியாசர். பர்வம் என்றால், 'பகுதி' என்று தான் நினைத்திருப்போம்.உண்மையில், மனிதன், தன் மனதை சொத்து சுகம், பதவி ஆசை, கூடா நட்பு ஆகியவற்றிலிருந்து மீட்பதற்கான சந்தர்ப்பத்தை, மகாபாரதம் தரும் என்பதால் தான், இந்தப் பெயரை வியாசர் தேர்வு செய்திருப்பாரோ என, எண்ணத் தோன்றுகிறது. இந்த வகையில், அட்சய திரிதியை விழாவை, மகிழ்ச்சி திருவிழாவாக நாம் கருதலாம். உண்மையில், அன்று, சூரிய - சந்திரர் கூட மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இந்நாளில், இருவரது ஒளியும் சம அளவில் பிரகாசமாக இருக்குமாம்.இந்நாளில், கங்கை, யமுனை, காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட எல்லா தீர்த்தங்களிலும், புனித நீராடுவதை புண்ணியமாக கருதுகின்றனர். அவ்வாறு நீராடும் முன், ஒரு கைப்பிடி அளவு, தரமான கல் உப்பை கையில் வைத்து ஆற்றில் இறங்க வேண்டும். அதை நீரில் கரைத்து விட்டு, நீராட வேண்டும். உப்பு, ஒரு மங்கலப் பொருள். புது வீடு கிரகப்பிரவேசத்துக்கு உப்பு எடுத்து செல்வது நம்மவர் வழக்கம். உப்பிருக்கும் இடத்தில், லட்சுமி வாசம் செய்வாள். 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்று, நமக்கு உணவு கொடுத்தவர்களை மறக்கக் கூடாது என்கின்றனர்.உணவில் எத்தனையோ வகை இருந்தாலும், உப்புக்குத் தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. அட்சய திரிதியை அன்று, தங்கம் வாங்க வசதியில்லாதவர்கள், கல் உப்பு வாங்கி வீட்டில் வைக்கலாம்.அட்சய திரிதியை கொண்டாட்டத்தின் மிக முக்கிய நோக்கம், எந்த பூமியில் நாம் பிறந்தோமோ, அதற்கு மரியாதை செய்வது தான். ஏனெனில், இந்த நாள் தான், உலகத்தின் பிறந்த நாள்.உலகத்தை, கிருதயுகத்தின் அட்சய திரிதியை நாளில் தான் படைத்தார், பிரம்மா. நமக்கு இடம் தந்து வாழ்வளிக்கும் பூமியைக் காப்பது, நம் கடமை என்ற உணர்வை, அட்சய திரிதியை திருவிழா நாளில் பெற வேண்டும்.இந்நாளில், தானம் செய்வது, மிகச் சிறந்த பலனைத் தரும். தானம் கொடுப்பவரும், பெறுபவரும் சிறந்த மன நிலையில் இருக்க வேண்டும். ஏதோ கடமைக்காக தானம் செய்யக் கூடாது. அந்த தானம் எவ்வகையிலும் பலனளிக்காது. ஒரு குடும்பத்தை வாழ வைத்த திருப்தி, நமக்கே வர வேண்டும். அந்தளவுக்கு தானத்தின் தன்மை அமைய வேண்டும். மகிழ்ச்சிக்கான சந்தர்ப்பத்தை அந்த குடும்பம் பெற வேண்டும். இதற்கு, பொருளாகத் தான் கொடுக்க வேண்டும் என்பதில்லை. ஏழைப் பெண்களைத் திருமணம் செய்தல், நமக்கு தெரிந்த கல்வியை பிறருக்கு கற்றுத்தரும், வித்யா தானம் என, ஏதேனும் ஒரு வகையில் உதவலாம்.நவன்ன பர்வம் என்ற மகிழ்ச்சிக்கான சந்தர்ப்பம், அனைவருக்கும், அட்சய திரிதியை நாளில் கிடைக்கட்டும்.தி. செல்லப்பா