உள்ளூர் செய்திகள்

அருட்செல்வர், ஏ.பி.நாகராஜன்! (6)

தமிழ் எழுத்தாளர்களின் மேல் மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தவர், நாகராஜன். எழுத்தாளர்களின் கதைகளை படமாக்க வேண்டும் என்பதில், முனைப்பு காட்டியவர்.புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், அகிலனின் இரண்டு நாவல்களை சிறப்பாக படமாக்கினார். அகிலன் எழுதி, பத்திரிகையில் வெளிவந்த, 'சினேகிதி' என்ற நாவலை, குலமகள் ராதை என்ற பெயரில் திரைப்படமாக்கினார். அதே அகிலனின், 'பாவை விளக்கு' நாவலையும், திரைப்படமாக்கினார். இரண்டு கதைகளிலும், சிவாஜி கணேசன் தான் கதாநாயகன். அவை இரண்டுமே வெற்றிப் படங்களாகியது.பாவை விளக்கு படத்தில், கதாநாயகி, எம்.என்.ராஜம், கதாநாயகன், சிவாஜியை காதலிப்பார். இருவரும், உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹாலை பார்க்க செல்வர். அந்த காதல் கோட்டையை பார்த்ததும், இருவரும், தங்களது கற்பனையில் மூழ்கி ஷாஜகானாகவும், மும்தாஜாகவும் மாறி விடுவது போல் கதை செல்லும்.இதற்காக, சிறப்பு அனுமதி பெற்று, காதல் கோட்டையான தாஜ்மஹாலிலேயே சென்று படமாக்கினார், ஏ.பி.என்., அப்போது, இருவரும் ஒரு பாடல் பாடுவது போல் காட்சி இருக்கும். அப்பாடலை மிக அற்புதமாக எழுதியிருப்பார், கவிஞர் மருதகாசி.'காவியமா நெஞ்சில் ஓவியமா அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா...' என்ற அந்த பாடலை, பின்னணி பாடகரான, சி.எஸ்.ஜெயராமன், தன் குழைவான குரலில், மிக அற்புதமாக பாடியிருப்பார். இன்று கேட்டாலும் அப்பாடல், நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்தும்.அப்பாடலின் பின்னணியில், தாஜ்மஹாலின் பெருமையை அழகாக குறிப்பிட்டிருப்பார், மருதகாசி.இத்திரைப்படத்தில், இன்னொரு அருமையான பாடல். கதையின் நாயகன், குற்றாலம், ஐந்தருவி போன்ற இயற்கை எழில் பொங்கும் இடங்களுக்கு செல்கிறான்.கதாநாயகனோ ஒரு எழுத்தாளன். அந்த இயற்கை அழகையெல்லாம் பார்த்ததும், அதன் எழிலை பாடுவான். இதுதான் திரைப்படத்தில் பாடல் இடம்பெறும் சூழ்நிலை.அப்பாடலை சிறப்பாக எழுதும் பொருட்டு, குற்றாலம், ஐந்தருவி போன்ற ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார், கவிஞர் மருதகாசி. அந்த இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை நேரில் பார்வையிட்ட பின், மருதகாசி எழுதியது தான், 'ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே...' என்ற பாடல்.வடிவுக்கு வளைகாப்பு திரைப்படம், வி.கே.ராமசாமியும், ஏ.பி.என்.,னும் சேர்ந்து தயாரித்தது. சாவித்ரியும், சிவாஜி கணேசனும் இணைந்து நடித்த திரைப்படம்.வடிவுக்கு வளைகாப்பு, பெயருக்கு ஏற்றார்போல் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, சாவித்ரிக்கு, நிஜத்தில் வளைகாப்பு நடைபெறும் சூழ்நிலை. இதன் படப்பிடிப்பு, ஸ்டுடியோவில் ஒரு தளத்தில் நடந்து கொண்டிருந்தது. மேல் தளத்திலிருந்து, வெளிச்சத்திற்காக மின் விளக்கை பிடித்துக் கொண்டிருந்த தொழிலாளி, காக்காய் வலிப்பு நோயால், மேலிருந்து கீழே, சாவித்ரி மீது விழுந்து விட்டார்.நல்லவேளை, கர்ப்பமாக இருந்த சாவித்ரிக்கும் ஒன்றும் ஆகவில்லை. அந்த தொழிலாளிக்கும் பலமாக அடிபடவில்லை. எனினும், இருவருக்கும் உரிய சிகிச்சை அளித்து, இரு கண்களை போல் பார்த்துக் கொண்டார், நாகராஜன்.சிவாஜி கணேசனின் திரைப்பட வாழ்வு பயணத்தில், இயக்குனர் ஏ.பி.நாகராஜன் இயக்கிய, நவராத்திரி திரைப்படத்துக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. சிவாஜி கணேசனை வைத்து, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற மிகச்சிறந்த தேச பக்தி திரைப்படங்களை தயாரித்த இயக்குனர், பி.ஆர்.பந்துலுவுக்கும், சிவாஜி கணேசனுக்கும், நவராத்திரி படம் வெளியீடு தொடர்பாக மோதலை உருவாக்கி, அவர்களுக்கிடையே ஒரு பிரிவை உருவாக்கியது.சிறந்த திரைப்பட இயக்குனரும், 'பத்மினி பிக்சர்ஸ்' திரைப்பட நிறுவனத்தின் மூலம் சிவாஜி கணேசனை வைத்து, பல நல்ல தமிழ் திரைப்படங்களை தயாரித்தவர், பி.ஆர்.பந்துலு. திரைப்பட துறையில், டி.ஆர்.மகாலிங்கத்தின் நிர்வாக மேலாளராக பணிபுரிந்தவர். அவர், சிவாஜியை வைத்து, முரடன் முத்து என்ற படத்தை தயாரித்தார். அந்த நேரத்திலேயே, இயக்குனர் ஏ.பி.நாகராஜனும், சிவாஜியை வைத்து, 'விஜயலட்சுமி பிக்சர்ஸ்' சார்பில், நவராத்திரி திரைப்படத்தை தயாரித்தார். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து, திரைக்கு வெளிவர தயாராய் இருந்தன.இங்குதான், சிவாஜிக்கும், இயக்குனர் பி.ஆர்.பந்துலுவுக்கும் பிரச்னை ஆரம்பமானது. அப்போது, 99 படங்களை நடித்து முடித்திருந்தார், சிவாஜி. 100வது படமாக வரும் பெருமையை, தன், முரடன் முத்து திரைப்படத்துக்கு கொடுக்க வேண்டும் என்பது, இயக்குனர் பி.ஆர்.பந்துலுவின் கோரிக்கை.ஆனால், முரடன் முத்துவை விட, நவராத்திரி திரைப்படம் சிறப்பாக அமைந்திருப்பதால், அதுவே, 100வது திரைப்படமாக வரவேண்டும் என்று, சிவாஜியும், இயக்குனர் நாகராஜனும் நினைத்தனர். தன், திரைப்படம் தான், சிவாஜியின், 100வது படமாக வரவேண்டும். அதில் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று உறுதியாக இருந்தார், பி.ஆர்.பந்துலு.ஆனால், சிவாஜியின் ஆதரவுடன், நவராத்திரி திரைப்படம், அவரது, 100வது படமாக வெளிவந்தது. அதேநேரத்தில், பி.ஆர்.பந்துலு, தன், முரடன் முத்து திரைப்படம் தான், சிவாஜியின், 100வது படம் என்ற விளம்பரத்துடன் வெளியிட்டார்.நவராத்திரி படம் வெற்றி பெற்றது; முரடன் முத்து, வெற்றி வாய்ப்பை இழந்தது.திருப்பூரை சேர்ந்தவர், பழனிச்சாமி; 'ஸ்பைடர் பனியன்' என்ற பனியன் தொழிற்சாலையை நடத்தி வந்தார். திரைப்படம் தயாரிக்க நினைத்து, 'ஸ்பைடர் பிலிம்ஸ்' என்ற திரைப்பட நிறுவனத்தை ஆரம்பித்தார்.அந்த நிறுவனத்துக்காக, நாகராஜன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான், குலமகள் ராதை. கதாநாயகன், சிவாஜி கணேசன். கதாநாயகிகள் இருவர், ஒருவர் நடிகை, சரோஜாதேவி. மற்றவர், நடிகை தேவிகா. கதை ஒரு முக்கோண காதல் கதை. —தொடரும்.நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.கார்த்திகேயன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !