உள்ளூர் செய்திகள்

குற்றம் குற்றமே! (23)

முன்கதைச் சுருக்கம்: தனஞ்ஜெயனின் அக்கா சாந்தியை, தான் திருமணம் செய்து கொள்வதாக, குமார் கூறியதும், அனைவரும் ஆச்சரியமடைந்தனர். கார்த்திகாவும் மிகவும் மகிழ்ந்து, தன் கம்பெனி ஒன்றில் அவனை, ஜெனரல் மேனேஜராக பதவி அளிப்பதாகவும் உறுதி அளித்தாள். கார்த்திகாவின் பெருந்தன்மையை அறிந்த, தனஞ்ஜெயனின் அம்மா, இனி குடும்பமே அவளுக்கும், அவள் அப்பாவுக்கும் உறுதுணையாக நிற்போம் என, உறுதி அளிீ்த்தார். குமார் - சாந்தி நிச்சயதார்த்த புகைப்படத்தை தாமோதருக்கும், அவர் மகன் விவேக்குக்கும் அனுப்பி வைத்தான், தனஞ்ஜெயன். இதைப் பார்த்தவர்கள், கிருஷ்ணராஜ் மகனை கண்டுபிடிக்க, தனஞ்ஜெயனை முந்திக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தனர். தன் மகனை விரைவில் கண்டுபிடித்து விட்டால், மகன், மகள் பெயரில் சொத்துகளை எழுதி வைத்துவிட்டு, போலீசில் சரணடைய விரும்புவதாக கூறினார், கிருஷ்ணராஜ். மகனை கண்டுபிடித்து, சொத்துக்களை பிரித்துக் கொடுத்து விட்ட பின், போலீசில் சரணடைய போவதாக கூறி, கண் கலங்கினார், கிருஷ்ணராஜ். கடிகாரமும், அவர் கருத்தை ஆமோதிப்பது போல அடித்து ஓய்ந்தது. கிருஷ்ணராஜ் தன் கண்களில் திரண்ட கண்ணீரை சுண்டிவிட்டுக் கொண்டார். அவரைப் பார்க்க பரிதாபமாக மட்டுமின்றி, நெகிழ்வாகவும் இருந்தது.''அப்பா அழாதீங்க. இனி, எல்லாமே நல்லபடியா தான் நடக்கும்,'' என்று அவர் அருகில் நெருக்கமாய் அமர்ந்து, அவர் தோளைப் பற்றினாள், கார்த்திகா. ''கார்த்தி... வேண்டாம், என்னைத் தொடாத. என் வியாதி என்னோட போகட்டும். நான் இறந்த பிறகு, இந்த படுக்கை, கட்டில் என, எல்லாத்தையும் எரிச்சுடுங்க. இந்த மாதிரி ஒரு வியாதி, என் எதிரியான அந்த தாமோதருக்கு கூட வரக் கூடாது,'' என்று கூச்சத்தோடு பேசினார், கிருஷ்ணராஜ். ''அப்பா, 'லெப்ரசி' தொற்று நோய் கிடையாதுப்பா. நீங்க, அனாவசியமா பயப்படாதீங்க. அதே போல, நீங்க நிச்சயம் சாக மாட்டீங்க. இங்க எல்லா பிரச்னைகளும் தீர்ந்த நிலையில, உங்களை அமெரிக்கா கூட்டிகிட்டு போய் சிகிச்சை அளித்து, முழுமையா நான் குணப்படுத்தி காட்டுறேன் பாருங்க,'' என்று நம்பிக்கை அளித்தாள், கார்த்திகா. 'ஆமாம் சார், நீங்க நம்பிக்கையோட இருங்க. நாங்க, உங்க மகனைப் பற்றின நல்ல செய்தியோட வரோம்...' என்று சொல்லி, தனஞ்ஜெயனும், குமாரும் புறப்பட்டனர். அறைக்கு வெளியே வந்த நிலையில், கார்த்திகா அவர்களிடம் விசாரிக்க துவங்கினாள். ''தனா, அடுத்து நீங்க எங்க போய் விசாரிக்கப் போறீங்க?'' ''சங்கரலிங்கம்கிற, 'ரிடையர்' ஆன கார்ப்பரேஷன் ஸ்வீப்பர்கிட்ட இருந்து தான், மேடம். அவர் தான், குழந்தையை குப்பை தொட்டியிலிருந்து எடுத்து போலீசுக்கு தகவல் சொன்னவர்.'' ''அவர் இப்ப எங்க இருக்காருன்னு தெரியுமா?'' ''அவர் வீட்டு முகவரியை, கார்ப்பரேஷன் ஆபீசர்கிட்டேருந்து வாங்கிட்டோம், மேடம். போய் பார்த்தா தான் தெரியும்.'' ''உங்களை நிச்சயம், அந்த தாமோதரோட ஆட்கள் பின்தொடரலாம். அவங்களால, ஆபத்தும் ஏற்படலாம். அதை எப்படி, சமாளிப்பீங்க?'' ''நல்ல கேள்வி, மேடம். நாங்க இரண்டு பேருமே எங்க உருவத்தை மாத்திக்கப் போறோம். அவ்வை சண்முகின்னு ஒரு சினிமா வந்தது தெரியும் தானே?'' ''தெரியுமே... அந்த படம், எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்ப எதுக்கு அவ்வை சண்முகி பத்தின பேச்சு?'' ''காரணமாத்தான். அதுல எப்படி, கமலஹாசன் தன்னை தலைகீழா மாத்திக்கிட்டாரோ, அப்படி நாங்க ரெண்டு பேரும், தாடி, மீசை, டர்பன், கூல்கிளாஸ்ன்னு, பஞ்சாப் சிங்கா மாறப் போறோம்.'' ''ஓ... இப்படி ஒரு ஐடியாவா? அதையும் அந்த தாமோதர் ஆட்கள் கண்டுபிடிச்சுட்டா?'' ''வாய்ப்பே இல்லை. இப்ப கூட நாங்க உங்களோட இந்த பங்களாவில் இருந்து, மெயின் கேட் வழியா வெளிய போகப் போறதில்ல. பின் பக்கமா தான் சுவர் ஏறி குதிச்சு போகப் போறோம். ''பின்புறம், காலி பிளாட் இருக்கிறதை பார்த்துட்டோம். அந்த பிளாட் வழியா அடுத்த தெரு போய், நேரா, 'மேக் - அப்' அறைக்கு தான் போகப் போறோம். உங்க அண்ணன் கிடைக்கிற வரை, நாங்க வேஷத்தை கலைக்கப் போறதே இல்லை. அதுவரை, நான், தனா சிங். இவன், குமார் சிங்...'' என்று சொல்லி சிரித்தான், தனஞ்ஜெயன். மாறு வேடத்தில், இருவரும் அந்த சங்கரலிங்கம் வீட்டை அடைந்த போது, அவருடைய மாலை போட்ட படமே, உயிரோடு இல்லாததை சொல்லி விட்டது. அவர் மகனும், மனைவியும் மட்டுமே இருந்தனர். அவர்களின் இரண்டு பெண்களும், ஹாலில் அமர்ந்து,'ஹோம் ஒர்க்' செய்து கொண்டிருந்தனர். சங்கரலிங்கம் மகன் சந்தோஷ், தனாவிடம், ''நீங்க?'' என்றான். ''உங்கப்பா சங்கரலிங்கத்தை பார்க்க வந்தோம். ஆனா, அவர் இறந்துட்டதை, இதோ இந்த மாலை போட்ட போட்டோவே சொல்லிடிச்சு. வி ஆர் வெரி சாரி.'' ''உங்களைப் பார்த்தா பஞ்சாபி போல தெரியுது. ஆனா, நல்லா தமிழ் பேசறீங்களே?'' நறுக்காக கேட்டான், சந்தோஷ். ''அது வந்து... நாங்க ரொம்ப காலமா இங்க சென்னையிலயே இருக்கோம். இங்க உள்ள ஸ்கூல்லதான் படிச்சோம். அதான்...'' என்று அழகாய் சமாளித்தான், தனா. ''சரி, எங்கப்பாவை இத்தனை ஆண்டு கழிச்சு, நீங்க எதுக்காக பார்க்க வந்தீங்க?'' ''காரணமா தான். அவர் கார்ப்பரேஷன் ஸ்வீப்பரா இருந்தப்ப, 1997 டிசம்பர் கடைசில, நுங்கம்பாக்கத்துல ஒரு குப்பைத் தொட்டியிலிருந்து, குழந்தை ஒன்றை எடுத்தாரே, அது பற்றி உங்களுக்கு எதாவது தெரியுமா?'' என்று, தனா கேட்க, சந்தோஷ் விழிகளில் விரிவு. ''அனேகமா, நீங்க அப்ப குழந்தையா இருக்கலாம். ஆமா, உங்க வயசு?'' ''அதெல்லாம் அப்புறம். அந்த குழந்தையை இப்ப எதுக்கு தேடறீங்க?'' ''காரணமா தான். அது எங்க பாஸோட குழந்தை. அன்னைக்கு அவர் ஏத்துக்கல. ஆனா, இன்னைக்கு அவர் மனம் திருந்தி, தன் பையனை ஏத்துக்க தயாராயிட்டார். அதனால தான்...'' தனாவின் பதிலைக் கேட்ட மறு நொடியே, பெரிதாய் சிரித்தான், சந்தோஷ். ''ஏன் சிரிக்கறீங்க. நான் சொல்றது நம்ப முடியலியா?'' ''நம்பறது மட்டுமில்லை, இப்படி கூட நடக்குமான்னு ஆச்சரியமாவும் இருக்கு. 27 வருஷமா வராத நல்ல புத்தி, இப்ப வந்து, அவர் தன் மகனை தேடுவதை எப்படி எடுத்துக்கிறதுன்னே தெரியல?''''நியாயமான சந்தேகம் தான். ஆனா, நாங்க சொல்றது தான் சத்தியம். உங்களுக்கு அந்த குழந்தை பற்றி எதாவது தெரியுமா?'' ''நல்லா தெரியும்...'' அழுத்தம் கொடுத்து சொன்னான், சந்தோஷ். ''தெரியுமா... ஓ காட். எங்க வேலை இவ்வளவு சுலபமா முடியும்ன்னு, நாங்க எதிர்பார்க்கவே இல்லை. ஆமா, அந்த குழந்தை, ஐ மீன் இப்ப அவன், 27 வயசு வாலிபன். அவன் இப்ப எந்த அனாதை இல்லத்தில் இருக்கான்?'' உணர்ச்சிவயப்பட்டான், தனா. ''அனாதை இல்லத்துல எல்லாம் இல்லை. நல்லபடியா வளர்ந்து ஆளாகி, கல்யாணமும் நடந்து, ரெண்டு குழந்தைகளுக்கு தகப்பனா இருக்கான்.'' ''அப்படின்னா, அந்த குழந்தையை, உங்கப்பா, குழந்தை இல்லாத ஒருத்தருக்கு தத்து கொடுத்துட்டாரா... அந்த குடும்பம் இப்ப எங்க இருக்கு?'' கேட்டான், குமார். ''இல்லை. எங்கப்பா, அந்த குழந்தையை, தனக்கு கடவுள் தந்த பரிசுன்னு நினைச்சு, தானே வளர்த்தாரு. 10 வயசாகும் போது, அவன் தனக்கு பிறக்கலேங்கிற உண்மையையும் சொல்லிட்டாரு.'' ''அப்படின்னா, பேப்பர்ல நியூஸ் வந்திருக்க முடியாதே. ஆனா, 'குப்பை போல வீசப்பட்ட ஆண் குழந்தை'ன்னு பேப்பர்ல வந்ததே. அது எப்படி?'' ''ரொம்ப கிளறாதீங்க. முதல்ல ஒரு குழந்தைகள் காப்பகத்துல சேர்த்த எங்கப்பா, அப்புறம் தானே வளர்க்கறதா சொல்லி எடுத்துகிட்டு வந்துட்டாரு.'' ''சரி, இப்ப அவன் எங்க இருக்கான்?'' ''அது இருக்கட்டும், அன்னைக்கு குப்பை தொட்டியில வீசி எறிஞ்ச அந்த மகா மனுஷன் யாரு? அதை நீங்க சொல்லவே இல்லையே.'' ''சொல்றேன். அவர் நிஜமாலுமே இப்ப மகா மனுஷன் தான். அதனால தான், தன் தவறுகளுக்கெல்லாம் பிராயச்சித்தம் தேடறாரு. நீங்க, அவன் எங்க இருக்கான்னு மட்டும் சொல்லுங்க.'' ''இன்னுமா உங்களுக்கு தெரியல... அது நான் தான்?'' என, சந்தோஷ் சொல்லவும், தனா முகத்தில் ஒருவித இன்பத் திகைப்பு.''சார், நீங்களா... நிஜமாவா... ரியலி?'' ''உங்களை நான் நம்பச் சொல்லல. வந்த மாதிரியே திரும்பி போயிடுங்க. நான் கொல வெறியில இருக்கேன்.'' ''ஏன் அப்படி சொல்றீங்க?'' ''வேற எப்படி சொல்ல, கொஞ்சம் கூட ஈவு, இரக்கம் இல்லாம, அன்னைக்கு, என்னை குப்பைத் தொட்டியில் போட்டவன் மேல, பாசமா வரும்? போங்க, போய் நான் கொல வெறியில் இருக்கிறத அவன்கிட்ட சொல்லுங்க.'' ''உங்க கோபம் நியாயமானது தான். ஆனா, அவர் அதுக்காக ரொம்பவே தண்டிக்கப்பட்டுட்டார். அவரை, நீங்க நேர்ல பார்த்தா உங்களுக்கு புரியும்.'' ''ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம். என் வரையில என்னை வளர்த்து ஆளாக்கினாரே, சங்கரலிங்கம் இவர் தான், என் உண்மையான அப்பா.''நான் ஒரு குப்பை தொட்டி குழந்தைன்னு தெரிஞ்சும் என்னை கட்டிக்கிட்டாளே என் மனைவி, இவ தான், என் வரையில தெய்வம்,'' என்றபடி சுவற்று படத்தையும், அதன் அருகில் நின்று அனைத்தையும் கேட்டபடி இருக்கும் அவன் மனைவி சுமதியையும் பார்த்தான், சந்தோஷ். ''உண்மைதாங்க. உங்க பாசமும் எனக்கு நல்லா புரியுது. உங்க கோபத்துலயும் அர்த்தமிருக்கு. அது அவ்வளவுக்கும் பிராயச்சித்தமா, உங்களை தன் சொத்துக்கெல்லாம் அதிபதியாக்க விரும்பறாரு, உங்க அப்பா. உங்க சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?'' ''வேண்டாம். அது தெரிஞ்சு எதுவும் ஆகப் போறதில்லை. நான், இப்ப பெண்டாட்டி, பிள்ளைன்னு நிம்மதியா இருக்கேன். அதை கெடுத்துடாம வந்த வழியை பார்த்துக்கிட்டு கிளம்புங்க.'' ''சார், அப்படி எல்லாம் அலட்சியமா சொல்லிடாதீங்க. இந்த வீடே, நீங்க எவ்வளவு ஏழைன்னு சொல்லாம சொல்லுது. இது கூட வாடகை வீடா தான் இருக்கணும். ஆனா, உங்களுக்காக ஒரு பங்களா காத்திருக்கு. உங்களுக்கு ஒரு தங்கையும் இருக்காங்க. பல கம்பெனிகள், அதுல நுாற்றுக்கணக்கான பேர் வேலை பார்க்கிறாங்க. ''ஒவ்வொரு மாசமும் கோடிகள்ல தான், 'டர்ன் ஓவர்!' நான், உங்களை பெத்த அப்பாவோட செகரட்ரி. எனக்கே பல லட்சங்கள்ல சம்பளம். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.'' ''சாரி, என்னால இப்ப எதையும் சொல்ல முடியாது. நீங்க உங்க போன் நம்பரை கொடுத்துட்டு போங்க யோசிக்கறேன்.''சந்தோஷ் முறுக்கிக் கொண்டு சொன்னதை கேட்ட, தனாவும், வேறு வழியின்றி தன், 'விசிட்டிங் கார்டை' கொடுத்துவிட்டு, குமாருடன் அங்கிருந்து, அரைமனதாக புறப்பட்டான். அவர்கள் விலகவும், சந்தோஷ் என்ற அவன், தன் மொபைல் போனில் எண்களைத் தட்டினான்.''சார், நீங்க சொன்ன மாதிரியே இரண்டு பேர் வந்தாங்க. நீங்க சொன்ன மாதிரியே நான் தான் அந்த குப்பை தொட்டி குழந்தைன்னு சொல்லி, கோபமா பேசி அனுப்பிட்டேன். அதே நேரம், தப்பா எதாச்சும் ஆயிடுமோன்னு பயமாவும் இருக்கு,'' என்றான். மறுமுனையில், விவேக்.''பயப்படாத சந்தோஷ். உங்கப்பா அன்னைக்கு அந்த குழந்தையை ஒரு குழந்தைகள் காப்பகத்துல சேர்த்துட்டாரு. அங்க இருந்து அதை யாராவது தத்து எடுத்து துாக்கிட்டும் போயிருக்கலாம்; அது எப்படியோ போகட்டும். நான் உன்னை நடிக்க சொன்னது எங்களுக்காக மட்டுமில்ல; உனக்காகவும் தான்.'' ''ஆமாங்க. அது எனக்கும் தெரியுது. ஸ்வீப்பர் மகன்கிறதால எனக்கு எந்த அந்தஸ்துமில்லை. நிறைய கடன் வேற. இப்படி ஒரு நிலையில தான், கடவுளை போல நீங்க வந்து, 5 லட்சம் ரூபாய் கொடுத்ததோட, நான் எப்படி நடக்கணும்ன்னு வழியும் காட்டிடீங்க. நான் இதை எப்பவும் மறக்க மாட்டேன்.'' ''நானும் மறக்க விடமாட்டேன். நான் சொல்றபடி மட்டும் கேள். அப்புறம் நீ, எங்க போறேன்னு பார்.'' ''கேட்கறேங்க. நீங்க தான் இப்ப என் கண் கண்ட கடவுள். கடவுள் சொன்னா கேட்காம இருப்போமா?'' பொங்கி வழிந்தான், சந்தோஷ். அவன் மனைவி சுமதியோ, மனதுக்குள் குமையத் துவங்கினாள். — தொடரும்இந்திரா சவுந்தர்ராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !