அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள சகோதரிக்கு —என் வயது: 42. கணவர் வயது: 45. திருமணமாகி, 18 ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு ஒரே மகன். கல்லுாரியில் படித்து வருகிறான். கணவருக்கு இசையில் நாட்டம் அதிகம். நன்றாக பாடக் கூடியவர். மெல்லிசை நிகழ்ச்சிகளில் நிறைய பாடியுள்ளார். உறவினர் யார் வீட்டில், விசேஷம் என்றாலும், கணவரது கச்சேரி நிச்சயம் உண்டு. நான், தனியார் மழலையர் பள்ளியில், பணிபுரிகிறேன். கணவர், மாநில அரசு நிறுவனம் ஒன்றில், அதிகாரியாக பணியில் உள்ளார். சொந்த வீடு, வசதிகளுக்கு குறைவு இல்லை. கணவருக்கு ஒரு தங்கை உண்டு. திருமணமாகி, வெளியூரில் வசிக்கிறாள். மாமனார் - மாமியார் எங்களுடன் உள்ளனர். நன்றாக போய் கொண்டிருந்த குடும்பம், கணவரது திடீர் குடிப்பழக்கத்தால், நிலை குலைந்தது. தினமும் குடித்துவிட்டு தான், வீட்டுக்கு வருவார். அடி, உதைக்குப் பஞ்சமில்லை. அவரது, பெற்றோர், எவ்வளவோ கண்டித்தும், திருந்தவில்லை. அவரை பார்த்தாலே வெறுத்து ஒதுங்குகிறான், மகன். முன்பு, 'டீசன்ட்'டாக, மென்மையானவராக இருந்தவர், இப்போது முற்றிலும் மாறி விட்டார். எதற்கெடுத்தாலும், கோபப்படுவதும், யாரையும் மதிக்காமல் நடந்துகொள்வதும் அதிகரித்துள்ளது. இதனால், அக்கம் பக்கத்தினர் முன், தலைகுனிவாக உள்ளது. அலுவலகத்திலும், பணியில் நிறைய தவறுகள் செய்வதாக, அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தார். ஒருமுறை, 'மெமோ'வும் வாங்கியுள்ளாராம். இவரை, எப்படி பழைய நிலைமைக்கு கொண்டு வருவது என்பதற்கு தக்க ஆலோசனை கூறுங்கள். — இப்படிக்கு, உங்கள் சகோதரி.அன்பு சகோதரிக்கு —குடி அரக்கனால் வீழ்த்தப்பட்ட பலி ஆடுகளில் ஒருவர், உன் கணவர்.கணவரை குடிப்பழக்கத்திலிருந்து மீட்க, கீழ்க்கண்ட அம்சங்களை விவாதிப்போம்.* கணவரிடம் முதலில் தனிமையில் பேசு. 'குடிப்பழக்கம் தவறு தான். என்னை நான் திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன்...' என, கணவர் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறாரா என பார்.குடிப்பழக்கத்தை நியாயப்படுத்தி பேசினால், திருத்த வாய்ப்பே இல்லை. அவர் குடித்து விட்டு வந்து வீட்டுக்குள் நடந்து கொள்ளும் விதத்தை மொபைல் போனில், வீடியோ எடுத்து, அவர் குடிக்காத போது காட்டி, பின் அழித்து விடு. அவரும், நீயும், ஒரு வாய்வழி ஒப்பந்தம் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மாதத்தில் அவர், 30 நாள் குடிக்கிறார் என்றால், அடுத்த மாதம், 25 நாள், அதற்கடுத்த மாதம், 20 நாள் என, குறைந்துக் கொண்டே வரச் சொல்.இரவு குடிக்கும் ஆசை எழுந்தால் குடிப்பதற்கு முன், வயிறு நிறைய சாப்பிடச் சொல். நிறைந்த இரைப்பை, அன்றைக்கு ஆல்கஹாலுக்கு, 'நோ' சொல்லிவிடும். * கணவருக்கு முழு உடல் பரிசோதனை செய். குடிப்பழக்கத்தை நிறுத்த, கணவரை மன நல ஆலோசகரிடம் அழைத்து போ. * நீ, உன் மகன், நாத்தனார், மாமியார், மாமனார் மற்றும் கணவருடன் குழுவாக கூடி, கணவரின் குடிப்பழக்கத்தை படிப்படியாக குறைக்க, ஆக்கப்பூர்வமாய் பேசுங்கள்.* உன்னுடன் தனியாக விவாதிக்கவோ, குடும்பத்தாருடன் பேசவோ, மருத்துவமனைக்கு வரவோ, மன நல ஆலோசனை பெறவோ, கணவர் மறுத்தால், நீ வேறொரு முடிவை எடுக்கலாம்.கணவரின் குடிப்பழக்கத்துக்கு எதிராக, மாமனார், மாமியார், நாத்தனார் குரல் கொடுக்கின்றனர் என்றால், நீ அவர்களுடன் இணைந்து செயல்படு.அண்ணனின் குடிப்பழக்கத்தை, மகனின் குடிப்பழக்கத்தை புகுந்த வீட்டார் நியாயப்படுத்தி பேசினால், நீ, கணவரிடமிருந்து விவாகரத்து பெறலாம். புகுந்த வீட்டார் ஆதரவு இருந்தால், நீ விவாகரத்துக்கு போகாமல், கணவரை வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்கலாம். வீட்டில் உள்ள யாரும், அவருடன் பேசக் கூடாது. உங்களுக்கு தனி சமையல். அவருக்கு வேண்டியதை அவர் சமைத்துக் கொள்ளட்டும் அல்லது வெளியில் வாங்கி சாப்பிட்டு கொள்ளட்டும்.உங்கள் வீட்டில், இரண்டு படுக்கையறைகள் இருந்தால், ஒன்றில் உன் மகன் படுக்கட்டும், இன்னொன்றில் நீ படு. கணவர் எங்காவது படுத்து உருளட்டும். உறவினர்களின் நல்லது கெட்டதுகளுக்கு, கணவரை கூட்டிப் போகாதே.* ஆறு மாதம் உங்கள் புறக்கணிப்பை தாங்க மாட்டார். வீட்டு விலக்கத்தை, 'வாபஸ்' பெற சொல்லி, உங்கள் கால்களில் விழுந்து கெஞ்சி மன்றாடுவார். திருந்தினால், நீக்கத்தை பரிசீலிப்போம் என, வாக்குறுதி கொடு.* கணவரின் குடிப்பழக்கத்தை மனதில் போட்டு உழப்பிக் கொள்ளாதே. உன் சிறு சிறு சந்தோஷங்களை பூர்த்தி செய்து கொள். உன் மகனுக்கு, குடிப்பழக்கம் தொற்றி விடாமல் பார்த்துக் கொள்.— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.