இது உங்கள் இடம்!
காலி மனையிலும், வருமானம் ஈட்டலாம்!உறவினர் ஒருவருக்கு, நகரின் பிரதான பகுதியில், காலி மனை இருந்தது.வெளிநாட்டில் பணிபுரியும் மகன், ஊருக்குத் திரும்பி, வீடு கட்ட, இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என்பதால், காலி மனையைச் சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பியிருந்தார்.அவரிடம், 'மனையை, காலியாக வைத்திருப்பதை விட, அதன் மூலம் வருமானம் பார்க்கும் வழியைக் கண்டுபிடியுங்கள்...' என்றேன்.சில வாரங்களுக்குப் பின், அவரைச் சந்தித்தேன்.'உங்க ஆலோசனைப்படி, காலி மனையில், 'ஷெட்' அமைத்து, பொருட்காட்சி, புத்தகக் கண்காட்சி, தள்ளுபடி விலையில் ஜவுளி வியாபாரம் செய்பவர்களுக்கு, நியாயமான வாடகைக்கு விட்டு, வருமானம் ஈட்டுகிறேன்...' என்றார். வாசகர்களே... செலவு செய்து வாங்கும் மனையை, காலியாக விட்டு வைத்து, யாராவது ஆக்கிரமித்து விடுவார்களோ என்று பயந்து கொண்டிருப்பதை விட, நிதானமாக சிந்தித்தால், நிச்சயம் பலன் பெறலாம்; மனையையும் பாதுகாக்கலாம்!-வெ. பாலமுருகன், திருச்சி.கூட்டு முயற்சி சேவை!அரசுப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றும் நண்பரைச் சந்திக்க, பள்ளிக்கு சென்றிருந்தேன். அச்சமயம், மாணவ, மாணவியர் சிலர், வெள்ளையடிக்கப்பட்டிருந்த பள்ளி சுற்றுச்சுவரில், வண்ண ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தனர்.அதுபற்றி, ஆசிரிய நண்பரிடம் விசாரித்தேன்.'சேவை மனப்பான்மை கொண்ட இப்பகுதி இளைஞர்கள், பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கும் பொருட்டு, அவர்களின் சொந்த செலவில், ஓவியர்கள் மூலம், ஓவியங்களை வரையச் செய்கின்றனர்.'பள்ளி சுற்றுச் சுவரில், திருக்குறள்களை எழுதித் தருவதாக, என்னை அணுகினர். 'ஏற்கனவே பாடப்புத்தகத்தில் இருப்பவற்றை எழுதுவதற்குப் பதிலாக, பள்ளி மாணவ, மாணவியரின், ஓவியத் திறமை மற்றும் ஆர்வம் உள்ளவர்களைக் கொண்டு, ஓவியங்களை வரைய வைத்து, அவர்களை ஊக்கப்படுத்தலாம்...' என்று, என் எண்ணத்தை தெரிவித்தேன்.'அதற்கு ஒப்புக்கொண்டனர், இளைஞர்கள். ஓவியர்களின் வழிகாட்டுதலோடு, ஓவியங்களை வரைந்து கொண்டிருக்கின்றனர்...' என்றார்.அவர்களின் கூட்டு முயற்சி சேவையை பாராட்டி, மனதார வாழ்த்தினேன்!-மலர்மணி, திருச்செங்கோடு, நாமக்கல்.சமையல் கற்கலாம் மாணவிகளே!உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சமையலறையில், அவ்வீட்டு பாட்டியைச் சுற்றி இளம் பெண்கள் பலர் (மாணவியர்) நின்றிருந்தனர். சமையலறையில், இப்படி கூட்டமாக இருக்கின்றனரே என்ன விஷயம் என, பாட்டியிடம் கேட்டேன். 'இவர்கள் இந்த தெருவை சேர்ந்த மாணவியர், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு முடித்து, வீட்டில் இருக்கின்றனர். என் சமையல் ருசியை அறிந்த, இந்த பிள்ளைகளின் அம்மாக்கள், விடுமுறை நாளில், தங்கள் மகள்களுக்கு சமையல் கற்றுக் கொடுக்கும்படி, அன்பாக வேண்டுகோள் விடுத்தனர். என்னால் தட்டமுடியவில்லை. 'தினமும், விதவிதமாய் குழம்பு வகைகள், கூட்டு, பொரியல் மற்றும் குருமா வகைகள் என, இரண்டு மணி நேரம் சொல்லித் தருகிறேன். சமையலுக்குத் தேவையானவற்றை இவர்கள், தினம் ஒருவர் வீதம் வாங்கி வந்து விடுவர். சமைத்ததை பங்கிட்டு, அவரவர் வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர்...' என்றார், பாட்டி. பாட்டியின் இச்சேவையை பாராட்டினேன். 'என் மகளுக்கு எதுவும் தெரியாது. சமையல் அறைக்கு வரமாட்டாள் ...' என்று சொல்லும் பெற்றோர்களுக்கு மத்தியில், தன் மகள் சமையலிலும் முத்திரை பதிக்க வேண்டும். சமைக்கத் தெரிய வேண்டும் என்ற அடிப்படையில் அனுப்பி வைப்பது, சிறப்பானதாகவே பட்டது. கோடை காலத்தில் மாணவியருக்கு எத்தனையோ பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஆரோக்கிய வாழ்வுக்கு சமையல் கலை முக்கியம். இது போன்ற பயிற்சிக்கும் அனுப்பி வைக்க, பெற்றோர் ஆர்வம் காட்ட வேண்டும். — சோ.ராமு, திண்டுக்கல்.