உள்ளூர் செய்திகள்

அருட்செல்வர், ஏ.பி.நாகராஜன்! (7)

ஒரு திரைப்படம் துவங்குவதற்கு முன், அது சொல்ல வரும் கருத்தை, கதையை, படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு சொல்லும் முறை, சில இயக்குனர்களிடம் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான், ஏ.பி.என்.,தன் திரைப்பட நிறுவனமான, 'விஜயலெட்சுமி பிக்சர்ஸ்'சின் முத்திரையாக, படம் ஆரம்பிப்பதற்கு முன், பெண் கடவுளான, விஜயலெட்சுமியின் திருவுருவப் படத்தை திரையில் இடம்பெற செய்வார்.அதையடுத்து, அவரது உயிர்ப்பான குரலில், திரைப்படம் குறித்த கதையை சுருக்கமாகச் சொல்லி, ரசிகர்களுக்கு பணிவுடன் சமர்பிப்பார். அவரின் இந்த பாங்கு ரசிகர்களை மிகவும் கவரும். நவராத்திரி திரைப்படத்தைப் பற்றி ரசிகர்களுக்கு, அறிமுகம் செய்வது மிகவும் சுவையானது. அப்படத்தை பின்வருமாறு அவர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவார்...'பேரன்புமிக்க ரசிகப் பெருமக்களுக்கு, எங்களது வணக்கம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒன்பது வகையான குணங்கள் இருப்பதாக கூறுகின்றனர், மனித அறிவியல் ஆய்வாளர்கள். அதைத்தான் நாம், நவரசம் என்று அழைக்கிறோம்.'அந்த, ஒன்பது வகை குணங்களையும், ஒன்பது பாத்திரங்களாக்கி, ஒன்பது பாத்திரங்களிலும், சிவாஜி கணேசனை நடிக்க வைத்து அதை, நவராத்திரி என்ற பெயரில் திரைப்படமாக்கி உங்கள் முன், பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம்...' என்று கூறுவார். அதுவே, அத்திரைப்படத்தைப் பற்றிய அவரது அறிமுகம். உயிர் துடிப்பான அவரது குரலால் சொல்லப்படும் அந்த அறிமுகம், எதிர்பார்ப்பை கொடுத்து, நம்மை எல்லாம் மகிழ்விக்கும்.நவராத்திரி திரைப்படத்திற்கு பாட்டு எழுதும் நேரத்தில், திரைத்துறை கவிஞர்களில் மிகவும் உயர்ந்த இடத்தில் இருந்தார், கண்ணதாசன். படத்துக்குரிய மொத்தப் பாடல்களையும் தானே எழுதுவது, அதற்கு குறிப்பிட்ட தொகையை முன்கூட்டியே மொத்தமாகப் பெற்றுக் கொள்வது என்ற நிலையில் இருந்தார்.ஆனால், நவராத்திரி படத்திற்குப் பாடல் எழுதிக் கொடுங்கள் என்று, கண்ணதாசனிடம் கேட்க சென்றபோது, நாகராஜன் கையில் குறைவான தொகையே இருந்தது. 'இதை முன் பணமாக பெற்று, பாடல்களை எழுதித் தாருங்கள். படம் வெற்றி அடைந்தும், நீங்கள் எதிர்பார்த்த தொகையை விட, ஒரு பங்கு மேலேயே தருகிறேன்...' என்று, உறுதிமொழி அளித்தார், நாகராஜன். நாகராஜனின் நிதி நிலைமையை புரிந்து, அவர் கொடுத்த தொகையை வாங்கிக் கொண்டார், கண்ணதாசன். அப்படத்திற்கு மிகச் சிறப்பான பாடல்களை எழுதிக் கொடுத்தார்.'சொல்லவா கதை சொல்லவா, இரவினில் ஆட்டம் பகலினில் துாக்கம், போட்டது மொளச்சதடி கண்ணம்மா, நவராத்திரி சுபராத்ரி, ராஜாத்தி ராஜ மஹா ராஜன் வந்தேனே...' என, அத்தனை பாடல்களும் சிறப்பாக அமைந்து, படத்தின் வெற்றிக்கு, கை கொடுத்தன.நவராத்திரி படத்தை பற்றி கூறுகையில், நடிகை சாவித்ரியை பற்றியும் கூற வேண்டும். நடிகர்களில் சிவாஜி கணேசன் எப்படி தலை சிறந்தவரோ, அதற்கு சற்றும் குறையாதவர், நடிகை சாவித்ரி.சிவாஜி, நவராத்திரி படத்தில், ஒன்பது வேடத்தில் நடித்தார் என்றால், அந்த ஒன்பது வேடத்திலும் ஈடு கொடுத்து, அவருடன் நடித்த பெருமை, சாவித்ரியையே சாரும். சிவாஜி நடித்த ஒன்பது வேடங்களில், குடிகாரர் வேடம் ஒன்று. அவர், சாவித்ரியிடம் தவறாக நடக்க முயற்சிப்பார். அப்போது, சிவாஜியிடமிருந்து தப்பிக்க, அவரது கன்னத்தில் அறைய வேண்டும், சாவித்ரி.சிவாஜி கன்னத்தில், கொஞ்சம் அழுத்தமாக அறையவே, ஆடிக்கொண்டிருந்த ஒரு பல், அடியைத் தாங்காமல் விழுந்து விட்டதாம். சிவாஜிக்கும் மருத்துவரிடம் போகும் செலவு மிச்சமானது.நவராத்திரி படத்தில், சிவாஜி, உயர் போலீஸ் அதிகாரியாக வருவார். அதே நேரத்தில், அவர் ஒரு வேட்டைக்காரர். புலி, ஊருக்குள் புகுந்து தொல்லை கொடுக்கும். அதை வேட்டையாட செல்வார், சிவாஜி. அக்காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.புலி பாய்வதை படம் பிடித்த உடனே, ஒளிப்பதிவுக் கருவி வைத்திருக்கும் அறையின் கதவை மூடி விட வேண்டும். கதவை மூடும் பொறுப்பு, ஒருவரிடம் ஒப்படைக்கப் பட்டது. அவர் பொறுப்பற்ற முறையில் இருந்ததால், பாய்ந்த புலி, நாகராஜன் தோள் மீதும், ஒளிப்பதிவாளரின் முதுகு மீதும் கால் வைத்து ஓடியது. அதனால், நாகராஜன் தோள் மீது இருந்த சதை பெயர்ந்து, பெரிய ரத்தக்காயமே ஏற்பட்டது.ரஷ்யாவில் நடந்த திரைப்பட விழாவில், நவராத்திரி சிறந்த படமாக தேர்ந்தெடுத்து, இயக்குனர் ஏ.பி.நாகராஜனை பாராட்ட அழைப்பு விடுத்தது, ரஷ்யா. ஆனால்...— தொடரும்நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.சிவாஜி கணேசனுக்கு, ‛செவாலியர்' பட்டத்தை வாங்கிக் கொடுத்த திரைப்படம், நவராத்திரி. பிரான்ஸ் நாட்டினரால், உலகத்தின் மிகச்சிறந்த கலைஞர்களுக்கு வழங்கப்பெறும் விருது, செவாலியர்.அந்த விருதுக்காக கலைஞர்களை தேர்ந்தெடுப்பதற்கு, அவர்கள் நடித்த பல சிறந்த திரைப்படங்களை அக்குழுவுக்கு அனுப்ப வேண்டும். அதை, அக்குழுவின் உறுப்பினர்கள் பார்வையிடுவர். அதில் பெரும்பான்மையினரின் ஆதரவு வாக்குகளை பெற்றவருக்கே அந்த விருது வழங்கப்படும்.இதற்காக, உலகின் பல நாடுகளில் இருந்தும், பல மொழிகளில் இருந்தும் திரைப்படங்கள் வந்து குவியும். அந்த விருதுக்காக, சிவாஜிகணேசன் நடித்த, பல திரைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், நவராத்திரி படமும் ஒன்று.படத்தை பார்த்த குழுவினர், நவராத்திரி படத்தில், நவரசங்களைக் காட்டும் ஒன்பது பாத்திரங்களிலும், சிவாஜி என்ற ஒரே நடிகர்தான் நடித்தார் என்று கூறியபோது, நம்ப மறுத்தனர். ஒவ்வொரு பாத்திரத்திலும் ஒவ்வொரு நடிகர் தான் நடித்திருக்கிறார் என்றே நினைத்தனராம். ஆதாரத்தோடு சொன்ன பின், ஒத்துக்கொண்டனராம்.ஒரு பாத்திரத்தில் ஒருவர் சிறப்பாக நடிக்கலாம். ஆனால், ஒன்பது பாத்திரத்திலும் ஒருவரே இவ்வளவு சிறப்பாக நடிக்க முடிந்ததைக் கண்டு, அவர்களே மிரண்டு போயுள்ளனர். கார்த்திகேயன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !