உள்ளூர் செய்திகள்

தனித்தன்மை என்பது...

ஊரில் இருந்த ஞானியை அணுகி, 'சுவாமி, உங்க கொள்கை என்ன?' என கேட்டனர், ஊர் மக்களில் சிலர். 'என் கொள்கை, பசி எடுத்தால் சாப்பிடறது. துாக்கம் வந்தால் துாங்கறது. அவ்வளவு தான்...' என்றார், ஞானி. ஞானி இப்படி சொன்னதும், கேள்வி கேட்டவங்களுக்கு ஆச்சரியமானது.'என்ன இது, இவர் எவ்வளவு பெரிய ஞானி. இவ்வளவு சாதாரணமா சொல்றாரே. இவர் உண்மையாத்தான் இப்படிச் சொல்றாரா அல்லது எதையாவது மூடி மறைக்கிறாரா. ஒண்ணும் புரியலையே...' என்று யோசித்தனர்.மறுபடியும், 'என்ன சுவாமி இது, இப்படி சொல்றீங்களே. பசி எடுத்தா சாப்பிடுவேன்; துாக்கம் வந்தா துாங்குவேன்னு சொல்றீங்களே. நீங்க செய்ற காரியங்களில் எந்த தனித்தன்மையும் இருக்கிறதா தெரியலையே?' என்றனர். 'ஆமாம், எந்தத் தனித்தன்மையும் கிடையாது. அதுதான் முக்கியம்...' என்றார், ஞானி. கேள்வி கேட்டவங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை.அதனால், மறுபடியும், 'என்னங்க இது, பசிச்சா சாப்பிடறது, துாக்கம் வந்தா துாங்கறது. இதை எல்லாரும் தானே செய்றாங்க...' என்றனர். 'எல்லாரும் தான் துாங்கறாங்க, சாப்பிடறாங்கன்னு சொல்றீங்க. உண்மை தான். நானும் அதைத்தானே செய்றேன். இருந்தாலும், எனக்கும், அவங்களுக்கும் வேறுபாடு உண்டு. 'நீங்க சாப்பிடறப்போ, உங்க மனசு சாப்பாட்டுல இருக்காது. நடந்த விஷயத்தையோ, நடக்கப் போற விஷயத்தையோ நினைச்சுக்கிட்டிருக்கும். 'உங்க மனசு அங்கேயும், இங்கேயும் அலைபாயும். எதை எதையோ நினைச்சுக்கிட்டு அல்லது பேசிக்கிட்டு சாப்பிடுவீங்க. இல்லேன்னா, ஏதாவது கனவு கண்டுகிட்டு இருப்பீங்க.'நான் அப்படி இல்ல. நான் சாப்பிடறப்போ, நான் அங்கே இருக்கேன். துாங்கறப்போ நீங்க துாக்கத்துல இல்லாம, கவலை, சிந்தனை, குழப்பம், கனவு இப்படி எங்கேயாவது அலையறீங்க. 'நான் அப்படி இல்ல. எதைச் செய்யுறேனோ நான் அதுவாகி விடறேன். அது என் இயல்பு. 'சாப்பிடறப்போ நான், சாப்பாடாகி விடறேன். துாங்கும்போது நான் துாக்கமாகி விடறேன். இதுதான் மத்தவங்களுக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம்...' என்று சிரித்தபடி கூறினார், ஞானி. 'செய்வதை சரியாகச் செய்வதே யோகம்' என்கிறது, கீதை. நாம் செய்யும் தொழிலில் ஒன்றிப் போகும்போது, அது தியானம் ஆகிறது. செய்யக் கூடியதும் முழுமையாக அமைகிறது. அது மட்டுமில்ல, செய்கிற தொழிலின் சுமை - துன்பம் எதுவுமே இல்லாமல் போகிறது.     பி. என். பி., அறிவோம் ஆன்மிகம்!பூஜையின் போது, ருத்ராட்ச மாலை அணிந்தபடி தான் பூஜை செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !