இது உங்கள் இடம்!
வித்தியாசமான தானம்!வசதியான நண்பர் ஒருவர், மத்திய அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று, புறநகரில் விசாலமான வீட்டில், குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். அவருடைய வீட்டை ஒட்டி, சில ஏக்கரில், விவசாயமும் செய்து வருகிறார்.இயல்பாகவே இரக்க குணமும், சமூக அக்கறையும் கொண்ட அவர், வலிய சென்று உதவிகள் செய்வார். அதில் குறிப்பிடும்படியான ஒன்று, அவர் செய்து வரும் வித்தியாசமான தானம் தான்.சாலைகளில் சுற்றித் திரிந்து, பலருக்கும், விபத்தை ஏற்படுத்தும் மாடுகளின் உரிமையாளர்களை நேரில் சந்தித்து, 'உங்கள் மாடுகளை, ஒழுங்காக வீட்டில் கட்டி வைத்து பராமரிப்பதாக இருந்தால், என் பண்ணையிலிருந்து, தினமும் இலவசமாக புல் கட்டுகள் வழங்குகிறேன்...' என்று, உறுதியளித்தார்.அவர்கள் சம்மதிக்கவே, தினமும் வேலையாட்கள் மூலம், புல் கட்டுகளை தானம் வழங்கி, தன் வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறார். சமூக சீர்கேட்டை கண்டும், காணாமல் எனக்கென்ன என இல்லாமல், அதை களைவதற்கு முயற்சியெடுத்து, வெற்றி பெற்ற அவரை, அனைவருமே பாராட்டுகின்றனர்!— வெ.பாலமுருகன், திருச்சி.நண்பர் தங்கையின், நல்ல முடிவு!நண்பரின் தங்கை, ஆசிரியர் பயிற்சி முடித்து, 'டெட்' தேர்வு எழுதி, தேர்ச்சியும் பெற்றிருந்தாள். ஆனால், அரசுப் பணி கிடைக்கவில்லை. பல்வேறு தனியார் பள்ளிகளில், சில ஆண்டுகள் பணிபுரிந்தார். அங்கே, குறைந்தது 3,000 முதல் 7,000 ரூபாய் வரை மட்டுமே, மாத ஊதியமாகக் கிடைத்தது.இத்தனைக்கும், ஓய்வும், விடுப்பும் இன்றி, பள்ளி நேரம் போக, வீட்டிற்கு வந்தும், நள்ளிரவு வரை உழைத்து, மிகவும் சிரமப்பட்டாள். படித்த படிப்புக்கேற்ற வேலையையே ஏன் செய்ய வேண்டும் என்று யோசித்தவள், தனியார் பள்ளி ஆசிரியைத் தொழிலை விட்டாள். பூ வியாபாரியாக இருக்கும், தோழியின் தந்தையிடம் ஆலோசனை பெற்று, அதில் இறங்கினாள்.இருசக்கர வாகனத்தில் சென்று, பூ வாங்கி வந்து, அக்கம் பக்கத்து குடும்பப் பெண்களை துணைக்கு வைத்து, பூச்சரங்களாக தொடுத்தும், சிறு சிறு மாலைகளாக கட்டியும், கடை கடையாக போடத் துவங்கினாள். இதற்காக அவள் செலவிடும் தொகையை விட, இரு மடங்கு லாபம் கிடைக்கிறது. அதிக நேரம் உழைக்க வேண்டிய அவசியமும் இல்லை.நாளொன்றுக்கு, 1,000 ரூபாய்க்கு வாங்கி வரும், பூவில், அவள் லாபம் மட்டும், 2,000 ரூபாய். அதுவும், காலை, 6:00 - 10:00 மணிக்குள் கிடைத்துவிடும். சராசரியாக, மாதா மாதம், அவள் ஈட்டும் வருமானம், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல்.தயங்காமல், தன்னம்பிக்கையுடன் எடுத்த நல்ல முடிவு, இப்போது அவளது வாழ்க்கையை மேலும் உயர்த்தி வருகிறது. வேலை தேடுவோரே... உழைப்பு, ஒருபோதும் உங்களை கைவிடாது. துணிந்து, சுயதொழிலில் இறங்குங்கள்!— பொ.தினேஷ்குமார், மறைமலைநகர், செங்கல்பட்டு.அடையாளம் போடுங்கள்! புதிதாக வாடகை வீட்டிற்குப் பொருட்களை எடுத்துச் சென்றிருந்தாள், தோழி. நானும் போயிருந்தேன். வீட்டிற்குள், படங்கள், கடிகாரம், காலண்டர்கள் எங்கே மாட்டலாம் என, என்னிடம் யோசனை கேட்டாள். பணியாளரை அழைத்து, நான் சொல்லும் இடங்களில், ஆணி அடிக்க சொன்னேன். ஓரிடத்தில் ஆணியை அடித்தபோது, திடீரென்று துாக்கி வீசப்பட்டார். பதறி, அவரை எழுப்பி உட்கார வைத்து, தண்ணீர் கொடுத்தோம். 'சுவரின் அந்த இடத்தில், 'ஷாக்' அடிக்குதும்மா...' என்றார்.அவர் ஆணி அடித்த இடத்தில், மின்சார ஒயர் வழித்தடம் இருந்தது. வீடு, வாடகைக்கு விடும் முன், சுவரினுள் ஒயர் இணைப்பு இருந்தால், அடையாளம் தெரியும் வகையில், பெயின்டால் வட்டமோ அல்லது பெருக்கல் குறியோ போட்டு வைத்தால், குடியிருப்புவாசிகளுக்கு உதவியாக இருக்கும்; ஆபத்தையும் தடுக்கலாம்.— எம்.நிர்மலா, புதுச்சேரி.