உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா - கேஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசிக்கும் புகைப்பட கலைஞர் - சாண்டி என்று பெயர். லென்ஸ் மாமாவின் தொழில்முறை நண்பரும் கூட. சமீபத்தில், சென்னை வந்திருந்தார்.'மணி... லண்டனிலிருந்து வந்திருக்கும் சாண்டியை, வரும் ஞாயிறன்று சந்திக்க போறோம்; தயாராக இரு. நானே வந்து, உன்னை அழைத்துச் செல்கிறேன்...' என்றார், லென்ஸ் மாமா.'நான் எதற்கு மாமா, நீங்க மட்டும் போயிட்டு வாங்களேன்...' என்றேன்.'உனக்கும், அவரை தெரியும் தானே! மேலும், நீதான் இப்ப நல்லா இங்கிலீஷ் பேசறியே... ஏதாவது விஷயம் கிடைக்கும்...' என்று எதையெதையோ கூறி, சம்மதிக்க வைத்தார்.ஞாயிறு முற்பகல், 11:00 மணி அளவில், அரைக்கால் பேன்ட், டீ - ஷர்ட், ஷூ, குளிர் கண்ணாடி மற்றும் தொப்பி என, படு ஸ்டைலாக காரில் வந்தார், மாமா.லண்டன்வாசியை சந்திப்பதற்கு ஏற்ப வந்திருக்கிறார் என நினைத்து, காரில் ஏறி, அவர் அருகில் அமர்ந்தேன்.ஹோட்டலை அடைந்ததும், எங்களை அடையாளம் தெரிந்து, சாண்டி தங்கியிருக்கும் இரண்டாவது மாடியிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார், அன்பர் ஒருவர்.அவர் யாரென்று விசாரிக்க, சாண்டிக்காக ஹோட்டல் நிர்வாகம் நியமித்த, 'கைடு' மற்றும் மொழி பெயர்ப்பாளர் என்றனர்.'பிசினஸ்' விஷயமாகவோ, சுற்றுலா பயணியாகவோ, இந்தியாவுக்கு வந்து தங்கும் வெளிநாட்டினருக்கு தேவைப்பட்டால், இவரை போன்ற, 'கைடு'களை ஹோட்டல் நிர்வாகம் நியமிப்பது வழக்கம்; அப்படிப்பட்ட ஒருவர் தான் இவர்.கம்மிங் பேக் டு த பாயின்ட்...சாண்டி தங்கியிருந்த அறை விசாலமாக, சகல வசதிகளுடன் இருந்தது. அறைக்குள் மேற்கத்திய இசை மிதமாக ஒலித்துக் கொண்டிருக்க, எங்களை சந்தோஷமாக கை குலுக்கி வரவேற்றார், சாண்டி.அறையின் ஓரத்திலிருந்த பிரிஜ்ஜை திறந்து, அயர்லாந்து நாட்டின் ஸ்பெஷல் சரக்கான, ஜெமிசன் பாட்டில் ஒன்றை எடுத்து வந்து லென்ஸ் மாமாவிடம் கொடுத்தார், சாண்டி. மாமாவின் முகம், ஆயிரம் வாட்ஸ் பல்பு ஒளிர்வது போல், பிரகாசமானது.அறையின் பால்கனியில், குட்டி மேஜை ஒன்றும், நான்கு சேர்களும் இருந்ததை சுட்டிக்காட்டி, 'அங்கேயே அமர்ந்து பேசலாமே...' என்றார், மாமா.இந்தியா வந்த நோக்கம் மற்றும் தொழில் பற்றி சாண்டியிடம் விசாரித்தேன். பதிலளித்தபடியே, இரண்டு பூப்போட்ட கிளாஸ்களை எடுத்து வந்து வைத்தார், சாண்டி.பால்கனியிலிருந்து கீழே பார்க்கும்போது, ஹோட்டலின் நீச்சல் குளம் தெரிந்தது. வெளிநாட்டினர் சிலர் அதில் நீச்சலடித்தபடி, கத்தரி வெயிலின் தாக்கத்தை சமாளித்துக் கொண்டிருந்தனர்.'கைடு'ம் என்னைப் போல், சைவ பட்சினி என்று அறிந்து மகிழ்ந்து, அவருடன் பேச ஆரம்பித்தேன்.மாமாவுக்கும், சாண்டிக்கும் அசைவ சைடு - டிஷ் வர, எங்களுக்கு, பேபி கார்ன் ப்ரை, பனீர் டீக்கா, பிரெஞ்ச் ப்ரை போன்ற நொறுக்ஸ் மற்றும் லெமன் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார், ஹோட்டல் ஊழியர். தீனிகளை கொறித்தபடியே, 'உங்களுக்கு நீச்சல் தெரியுமா?' என்றார், 'கைடு!''ஆம்' என்பதற்கு அடையாளமாக தலை அசைத்தேன்.'நீச்சல் தெரிந்திருப்பது மிக மிக அவசியம். நம்மூரில் நிறைய பேருக்கு நீச்சல் தெரிவதில்லை. ஆனால், வெளிநாடுகளில் ஆறு மாத குழந்தைக்கு கூட, நீச்சல் பயிற்சி தந்து விடுவர். நான், சிறிது காலம் நீச்சல் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளேன். நீச்சல் நமக்கு பல நன்மைகள் செய்கிறது...' என்று பட்டியலிட ஆரம்பித்தார்:அழகாவும், சுறுசுறுப்பாவும் இருக்கணும்ன்னு நினைக்கிறவங்க, நீச்சல் பழகலாம். நீச்சல் அடிக்கிறப்போ, உடம்புக்கு நல்ல பயிற்சி கிடைக்கும்.முக்கியமா, உடம்புல ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதுக்கு இது ரொம்ப உதவி செய்கிறது.நம் உடம்புல எந்த பகுதியிலாவது ரத்தம் சரியா பாயாம இருந்தா, அதனால, சில கோளாறுகள் வரும்.அப்படிப்பட்ட கோளாறெல்லாம் வராம இருக்கறதுக்கு, நீச்சல் பயிற்சி ரொம்ப நல்லது. ஆண் - பெண் ரெண்டு பேருக்குமே உடற்கட்டு நல்லா அமையறதுக்கு இது ரொம்ப உதவியா இருக்கும்.உடம்பு வலியா இருந்தாலும் சரி, முதுகு வலியா இருந்தாலும் சரி, கொஞ்ச நேரம் தண்ணீரில் இறங்கி, நீச்சல் அடித்தால், வலி பறந்து போயிடும்.வயிற்றுக்கோளாறு மற்றும் மலச்சிக்கல் சரியாகும். கொஞ்ச நேரம் நீச்சலடிச்சா, நல்லா பசி எடுக்க ஆரம்பிச்சுடும். என்ன காரணம்ன்னு நினைக்கறீங்க?வயத்துல தண்ணி அழுத்தும் போது, செரிமான உறுப்புகள்லாம் நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சுடும்.தண்ணீர், நம் தோல் மேல தொடர்ந்து ஒரு அழுத்தத்தை கொடுக்கறதுனால, தோலுக்கே ஒரு பளபளப்பு கிடைக்குதுன்னு சொல்றாங்க. அப்புறம் என்ன, இவ்வளவு சவுகரியம் இருக்கறப்போ, அந்த பயிற்சியை என்னத்துக்கு விட்டு வைக்கணும். துணிஞ்சு தண்ணீரில் இறங்க வேண்டியது தானே!- என்று கூறி முடித்தார், அவர்.அதுவரை, தங்கள் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த மாமா, நாங்கள் பேசியதை அரைகுறையாக காதில் வாங்கி, 'ஏம்பா மணி... தமிழ் படங்களில் சிவாஜி கணேசன் பல படங்களில், 'ஹீரோயின்' அல்லது உடன் நடிக்கும் நடிகருடன், நீச்சல் குளத்தில் நீச்சலடித்தபடி பாட்டு பாடுவதை பார்த்திருக்கிறேன். 'ஆனால், எம்.ஜி.ஆர்., எந்த படத்திலாவது நீச்சல் குளத்தில் நீந்தியபடி பாட்டு பாடியுள்ளாரா?' என்று சம்பந்தமில்லாமல் கேட்டார்.எனக்கு பதில் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரிந்தால், லென்ஸ் மாமாவின் சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன்.பின்குறிப்பு: அருமையான அறுசுவை உணவு வர, மூக்கு முட்ட சாப்பிட்டு, ஒரு துாக்கம் போட்டு, சாண்டியிடம் விடைபெற்று திரும்பினோம்.இருட்டு நேரம் காட்டு வழியா போய்க்கிட்டிருந்தான், ஒருத்தன். அங்கே, பேய் - பிசாசு நடமாட்டம் இருக்கிறதா வதந்தி. பயந்துகிட்டே வேகமா போனான். காடு முடிஞ்சு, மெயின் ரோட்டுக்கு வந்து சேர்ந்தான்.ஒரு பஸ் நின்னுக்கிட்டிருக்கிறது இருட்டுல, லேசா தெரிந்தது. ஓடிப்போய் ஏறி உள்ளே உட்கார்ந்து கிட்டான். உள்ளே, டிரைவர், கண்டக்டர் இல்லை. பயணியர் கூட யாரும் இல்லைன்னு, அப்புறம் தான் தெரியுது.இவனுக்கு பேய் பயம் அதிகமாயிட்டுது. இந்த நேரம் பார்த்து, அந்த பஸ், தானா நகர ஆரம்பித்தது. டிரைவர், 'சீட்' காலியா இருக்கு. ஆனா, பஸ் நகருது. இவன் உடம்பு பூரா நடுங்க ஆரம்பிச்சுட்டுது.கத்தலாம்ன்னு பார்த்தான். அந்த நேரம் பார்த்து, அவன் தோள்ல ஒரு கை அழுத்தியது. திடுக்கிட்டுத் திரும்பி பார்க்க, அங்கே டிரைவர் நின்றிருந்தார்.இவனைப் பார்த்து, 'யோவ், ஏற்கனவே, பஸ், 'பிரேக் டவுன்!' நாங்கள்லாம் இறங்கி நின்னு தள்ளிக்கிட்டிருக்கோம். நீ மட்டும், 'ஜாலி'யா ஏறி உட்கார்ந்துட்டியா? இறங்கி வாய்யா தள்ளலாம்...' என்றார், டிரைவர்.- -எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !