இது உங்கள் இடம்!
பிறந்தநாளை இப்படியும் கொண்டாடலாமே!சொந்த தொழில் செய்யும் நண்பரிடம், இளைஞர்கள், நடுத்தர வயதினர், வயதானோர் என, பலதரப்பட்டோர், 30 பேருக்கு மேல் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு ஆண்டும், தன் பிறந்தநாள் விழாவின் போது, விளம்பரமின்றி ஒரு நற்காரியத்தை செய்து வருகிறார். பிறந்தநாள் விழா என்றாலே, பார்ட்டி, ஆட்டம், பாட்டம் என்றில்லாமல், இப்படியும் பயனுள்ள வழியில் கொண்டாடலாம் என்பதை மறைமுகமாக, அடுத்தவர்களுக்கு உணர்த்துகிறார்.பணியாளர்களின் உற்சாகத்திற்காகவும், மகிழ்ச்சிக் காகவும், பிறந்தநாள், 'கேக்' வெட்டினாலும், அவர்களின் உடல் நலனுக்காக, அப்பகுதி அரசு மருத்துவமனைக்கு, அனைவரையும் அழைத்துச் செல்கிறார்.தன் சொந்த செலவில், முழு உடல் பரிசோதனைக்கான கட்டணத் தொகையை செலுத்தி, பரிசோதனை செய்ய வைக்கிறார். குறை இருப்பின், அதை சரி செய்ய ஒரு தொகையை செலுத்தி, உதவி செய்வதையும், வழக்கமாக வைத்திருக்கிறார்.'வரும் முன் காப்பதே சிறந்தது' என்ற முதுமொழிக்கேற்ப, பணியாளர்களின் உடலில், அவர்களுக்கே தெரியாமல் ஒளிந்திருக்கும் நோய்களை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, முறையான சிகிச்சையின் மூலம், பூரண நலம் பெற உதவுகிறார்.வாசகர்களே... உங்கள் பிறந்தநாள், மணநாள் போன்ற விழாவின் போது, உங்கள் பகுதியிலுள்ள வசதியற்றோர் முழு உடல் பரிசோதனையை செய்து கொள்ள உதவுவதன் மூலம், அவ்விழாக்களின் மாண்பை உயர்த்தலாமே!-பொ.தினேஷ்குமார், மறைமலைநகர், செங்கல்பட்டு.உழைத்தால் உயர்வு வரும்!உறவினர் மகன், பிளஸ் 2 முடித்து, வேலையில்லாமல் இருந்தான். அவனால், மேலே படிக்க இயலவில்லை; நன்றாக படம் வரைவான். எனக்குத் தெரிந்த, திருமண மண்டபங்களில், மேடை அலங்காரம் செய்பவரிடம், அவனை அறிமுகப்படுத்தினேன். அவனுக்கு பலவிதமான மேடை அலங்காரங்களை கற்றுக் கொடுக்க, அனைத்தையும் ஆர்வத்துடன், நுணுக்கமாக கற்றுக் கொண்டான். அதுமட்டுமின்றி, அருகில் புதிதாக திறக்கப்பட்ட திருமண மண்டபத்தின் உரிமையாளரிடமும், அவனுக்காக, சிபாரிசு செய்தார். தற்போது, நன்கு சம்பாதிக்கிறான். அவனை, 'ஆன்லைன்' வரைபட வகுப்பிலும் சேர்த்து விட்டுள்ளேன். வரைவதில் உள்ள உத்திகளை, கற்றுக் கொண்டால், அருகில் வசிக்கும் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்து, வருமானம் ஈட்டலாமே என்று, இந்த ஏற்பாட்டைச் செய்தேன். அவனும் புரிந்து, சுறுசுறுப்பாக உழைக்கிறான். 'உழைத்தால் உயர்வு வரும்' என்பது உண்மை தானே!எஸ்.கவுரி மீனாட்சி, நாகமலை, மதுரை.மனைவியை வேலை செய்ய வைக்க... தன் மனைவி வீட்டில் சோம்பேறியாகவும், வீட்டு வேலை எதுவும் செய்யாமல், சதா மொபைல் போன், 'டிவி' என்று இருப்பதாகவும், சமையலை சரிவர செய்வதில்லை என்றும் கூறினார், நண்பர்.இத்தனைக்கும் அவர், இல்லத்தரசி. அவரின் பழக்க வழக்கங்களை கேட்ட பின், நான் ஒரு, 'ஐடியா' கொடுத்தேன். அதன்படி, வீட்டிற்கு சென்று, 'நீ சமையல் செய்து, வீடியோ போட்டால் நிறைய பேர் பார்ப்பர். நிறைய, 'லைக்'குகள் வரும். இதனால், பண வரவு வருமாமே...' என்று, அள்ளிவிட்டிருக்கிறார். அதை நம்பிய அவரது மனைவி, காலையில் எழுந்து குளித்து, வீட்டு வேலைகளை முடித்து, விதவிதமாக சமைத்ததை, வீடியோ எடுத்து, போட்டார். மொபைல் போனில் வீடியோ பார்ப்பது, அவருக்கு பிடித்த வேலை என்பதால், விருப்பப்பட்டே இதை செய்துள்ளார். வீடியோவை பார்த்த உறவினர்கள் சிலர் பாராட்ட, இப்போது நண்பரின் மனைவி, வீட்டில், பிசியோ பிசி. 'இப்போது, வீட்டு வேலையும் நடக்கிறது. விதவிதமாக சாப்பிடவும் முடிகிறது. மனைவியையும் சுறுசுறுப்பாக, அழகாக பார்க்க முடிகிறது. ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்தேன்...' என்றார்.அவ்வப்போது எனக்கும் போன் செய்து, 'மனைவி ஒரு புது, 'டிஷ்' செய்திருக்கிறாள். வந்து சாப்பிட்டு பார்...' என்று அழைக்கிறார், நண்பர். வீட்டில் மனைவியிடம் வேலை வாங்க வேண்டுமா... நீங்களும், இந்த யுத்தியை கடைப்பிடித்து பாருங்களேன். தே.ராஜாசிங் ஜெயக்குமார், தஞ்சை.