உள்ளூர் செய்திகள்

அருட்செல்வர், ஏ.பி.நாகராஜன்! (9)

திருவிளையாடல் படத்தில், நக்கீரராக வேறு யாரையாவது நடிக்க வைத்து, சிறப்பாக அமையாவிட்டால், என்ன செய்வது என்று, அந்த கதாபாத்திரத்தைத் தானே ஏற்று, சிறப்பாக நடித்து கலக்கியிருப்பார், ஏ.பி.நாகராஜன். நாகராஜனுக்கு, இசை ஞானமும் உண்டு. தந்திரக் காட்சிகளை அமைப்பதிலும் வல்லவர். திருவிளையாடல் படத்தின் கடைசியில் சிவனும், சக்தியும் இணைந்து மிகப்பெரிய உருவமாக தெரிவது போன்ற காட்சியை உருவாக்குவது சிரமம் எனக் கூறினர், தொழில்நுட்ப வல்லுனர்கள். அதை எப்படி உருவாக்க வேண்டுமென்று, இரண்டு நாட்கள் அவர்களுடன் இருந்து, ஆலோசனை சொல்லி, உருவாக்க வைத்தார், ஏ.பி.என்., இதுவே, தந்திரக் காட்சிகள் எடுப்பதில் அவர் வல்லவர் என்பதற்கு, சாட்சி.படம் வெளியிடப்பட்ட திரையரங்குகளில் எல்லாம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஓடியது. புராணப் படங்களின் தயாரிப்புக்கு, தமிழ் திரையுலகில் புதிய பாதையைத் திறந்து வைத்தது; மதுரையில் வெள்ளி விழாக் கண்டது. மதுரையில் ஒரு வயதான பெண்மணி, திரையரங்கில் ஓடிய அத்தனை நாட்களும் விடாது தொடர்ந்து அப்படத்தை பார்த்துள்ளார்.படத்தின் இயக்குனர், நாகராஜனைப் பார்ப்பதற்காக சென்னை வந்து, அவரது ஆழ்வார்பேட்டை வீட்டுக்கு சென்றுள்ளார், அந்த பெண்மணி. இயக்குனர் வெளியூர் சென்றதால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஆனாலும், ரெண்டு, மூன்று நாள் தொடர்ந்து வந்தார். ஒருநாள் வீட்டிலிருந்த நாகராஜனை, அவரது அனுமதியுடன் சந்தித்தார்.கைப்பையில் இருந்து, திருவிளையாடல் படத்தை பார்ப்பதற்காக எடுத்த, 175 நுழைவுச் சீட்டுகளையும் அவரிடம் காட்டினார். கண்ணில் நீர் மல்க, 'இப்படிப்பட்ட நல்ல படத்தை எடுத்த உன்னை நேரில் பார்க்கவே, நான் மதுரையில் இருந்து வந்தேன்...' என்றாராம். அந்த அம்மாவிடம், 'உங்கள் பெயர் என்ன...' என்று கேட்டார்.லெட்சுமி என்றவுடன், கண்ணீர் விட்டு அழுது விட்டாராம். காரணம், ஏ.பி.நாகராஜனின் அம்மா பெயரும், லெட்சுமி. 'நீங்கள் அந்தப் படத்தைப் பார்த்து என்னைப் பாராட்டியது, என் அம்மாவே நேரில் வந்து பாராட்டியது போலுள்ளது...' என்றாராம். அதன்பின், அந்த அம்மாவுடன் புகைப்படம் எடுத்து, அவருக்கு செய்ய வேண்டிய மரியாதை எல்லாம் செய்து அனுப்பி வைத்துள்ளார், ஏ.பி.நாகராஜன்.திருவிளையாடல் படத்தில், ஞானப்பழத்தை கொண்டு வந்து கலகத்தைத் துவக்குவார், நாரதர். அதன் மூலம், 'அம்மையப்பன் என்றால் உலகம்; உலகம் என்றால் அம்மை - அப்பன்' என்ற தத்துவத்தை அறிய வைத்தார். எனவே, நாரதர் கலகம் நன்மையில் தான் முடிகிறது.அதே போன்று, சரஸ்வதி சபதம் கதையிலும், ஒரு கலகத்தை துவக்கி வைப்பார், நாரதர். கல்வியா, செல்வமா, வீரமா எது பெரிது என்ற கலகத்தைத் துவக்கி, முடிவில், மூன்றும் ஒன்றுக்கு ஒன்று துணை நிற்க வேண்டும் என்ற கருத்தில் முடிப்பார். சரஸ்வதி சபதம் கதை, வாத்தியார் நடராஜன் என்பவரால் எழுதப்பட்டது. ஏ.பி.நாகராஜன் குழுவினர், அதை மேடை நாடகமாக நடத்தினர். அவர் திரைப்படத் துறைக்கு வந்து, திருவிளையாடல் திரைப்பட வெற்றிக்குப்பின், புராண, இதிகாசத்தின் பக்கமாக தமிழ் திரையுலகை பயணிக்கச் செய்தார். அப்போது, தான் நடத்திய அந்த நாடகத்தை சீவி, சிங்காரித்து பட்டுச்சட்டை போட்டு பளபளப்பாக்கி, தன் தமிழ் மணம் கமழும் வசனங்களால் மெருகேற்றி, சிறந்த திரைக்காவியமாக்கி நம்மை எல்லாம் மகிழ்வித்தார்.அந்த நடராஜன் வாத்தியாரே உயிரோடு இருந்து, சரஸ்வதி சபதம் படத்தை பார்த்தால், இது, தான் எழுதிய கதை இல்லை என்றே சொல்லி இருப்பார். ஆனாலும், மூலக்கதை நடராஜ் வாத்தியாருடையது என்பதை மறக்காத, ஏ.பி.நாகராஜன், அவரது பேரனை கண்டுபிடித்து, பெரிய தொகையை கொடுத்தார். அதன் மூலம், மனசாட்சி உள்ள மனிதர் என்பதையும் நிரூபித்தார்.சரஸ்வதி சபதம் படத்தின் கதைப்படி, சரஸ்வதியின் அருள் பெற்ற புலவனை, லட்சுமியின் அருள் பெற்ற நாட்டின் அரசி, யானையைக் கொண்டு மிதித்துக் கொல்லச் சொல்லும் இறுதிக்கட்ட காட்சி படம் பிடிக்கப்பட வேண்டும்.புலவனின் கைகளும், கால்களும் சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டிருக்கும். யானை, புலவனை மிதிக்க வரும் போது, அறிவு திறமையால் தன்னை மிதிக்காமல் திரும்பிச் செல்ல செய்ய வேண்டும்.இதற்காக ஒரு வாரமாக, சீதா எனும் யானையை வைத்து ஒத்திகை பார்க்கப்பட்டது. இறுதியாக, சிவாஜியை வைத்து உண்மையான படப்பிடிப்பு நடைபெற்றது.'இந்தக் காட்சியை சற்று மாற்றி எடுக்கலாமா...' என்று சிவாஜியிடம் கேட்டாராம், ஏ.பி.என்., ஆனால், 'இதுதான் நன்றாக இருக்கிறது. அப்படியே எடுப்போம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்...' என்றாராம், சிவாஜி. யானை நன்றாக நடித்து, படப்பிடிப்பு நல்லவிதமாக முடிய வேண்டுமென்ற பரபரப்பு, ஒவ்வொருவர் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது. படப்பிடிப்பு நல்லவிதமாக நடந்து முடிந்தால், பிள்ளையாருக்கு, 1,000 தேங்காய் உடைப்பதாக, சிவாஜியின் மனைவி கமலாம்மாவும், இயக்குனர் ஏ.பி.நாகராஜனின் மனைவியும் வேண்டிக் கொண்டனர். படப்பிடிப்பு நல்லவிதமாக முடிந்து, 2,000 தேங்காய் பிள்ளையாருக்கு உடைக்கப்பட்டது.சரஸ்வதி சபதம் படத்தில்...— தொடரும்தமிழ் மொழி தவிர, பிறமொழியில் திரைப்படங்களை இயக்கியதில்லை. ஏ.பி.என்., ஆனால் அவரது பல படங்கள் பிறமொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவிளையாடல் படம், சீவலீலு என்ற பெயரில் தெலுங்கிலும் கன்னடத்தில், சிவ லீலா விலாசா என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. அந்தந்த மொழிகளிலும் அப்படத்திற்கு பெரும் வரவேற்பு இருந்தது.*****ஏ.பி.நாகராஜனின், வடிவுக்கு வளைகாப்பு படத்தில் நடித்தார், நடிகை சாவித்ரி. அப்போது, அவரைப் பார்க்க வந்த, நடிகர் ஜெமினி கணேசனுக்கும், நாகராஜனுக்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது. 'நாகராஜன் சரளமாக பேசுவார். என்னை, மாப்ளே என்று, அவர் அன்பொழுக அழைக்கும் அழகே அழகு...' என்று, பேட்டி ஒன்றில், ஏ.பி.என்., பற்றி, பதிவு செய்திருந்தார், ஜெமினி கணேசன். ஏ.பி.நாகராஜனின், திருவருட்செல்வர், சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் நடித்தார், ஜெமினி கணேசன்.*****நன்றி: அல்லயன்ஸ் கம்பெனி.- கார்த்திகேயன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !