உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு— நான், 30 வயது பெண். எனக்கு ஒரு அக்காவும், அண்ணனும் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி விட்டது. எனக்கு திருமணமாகி, மூன்று ஆண்டுகளாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கர்ப்பமானேன். ஏழாவது மாதத்தில், குழந்தை, வயிற்றிலேயே இறந்து பிறந்தது. கர்ப்பக் காலத்தில், கணவரும், அவரது வீட்டினரும், என்னை சரியாக பரிசோதனைக்கு அழைத்துச் செல்லவில்லை; பொறுப்பாக கவனித்துக் கொள்ளவில்லை என, குற்றம் சாட்டுகிறார், அம்மா. உடல்நிலை தேற வேண்டும் என்று, என்னை, தன்னுடன் அழைத்து வந்து விட்டார், அம்மா. பிறந்த வீட்டுக்கு வந்த பின், என்னை கண்ணும், கருத்துமாக கவனித்துக் கொண்டார். விரைவிலேயே உடல்நிலை சீரானது. மேலும், அத்தை, பாட்டி என, உறவினர்கள் அருகிலேயே இருந்து, என்னை அக்கறையுடன் பராமரித்தனர். அவ்வப்போது, கணவருடன் போனில் பேசி வருவேன். உடல்நிலை நன்கு தேறிய பிறகும், என்னை கணவர் வீட்டுக்கு அனுப்பாமல் இருக்கிறார், அம்மா. கணவர் பலமுறை வந்து என்னை அழைத்தும், அவரோடு அனுப்ப மறுக்கிறார். போனில் பேசி, என் மனதை கலைத்து விடுவார் என்று, என் மொபைல் போனையும் வாங்கி வைத்துக் கொண்டார். விவசாயியான என் அப்பாவுக்கு, அம்மாவை மீறி எதுவும் சொல்ல இயலாத நிலை.'இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், பிறகு அனுப்பி வைக்கிறேன்...' என்கிறார், அம்மா. எனக்கு, கணவருடன் சேர்ந்து வாழ தான் ஆசை. கணவரது விருப்பமும் அதுவே.இனி, என்னை நன்றாக கவனித்து கொள்வதாக மாமனார் - மாமியார் சொல்லியும், அதைப் பற்றி பேசுவதையே தவிர்க்கிறார், அம்மா. என் அம்மாவுக்கு, இதை எப்படி புரிய வைப்பது? — இப்படிக்கு, உங்கள் மகள். அன்பு மகளுக்கு —உனக்கு ஒரு அக்காவும், ஒரு அண்ணனும் இருப்பதாக கூறுகிறாய். மூத்த மகள் கணவனை, மூத்த மகன் மனைவியை, அம்மா எப்படி கையாள்கிறார் என்பதை கவனி. பிரிக்கப் பார்த்து, அவர்கள் சுதாரித்து விலகிக் கொண்டனரா அல்லது உன் மீது மட்டும் விசேஷ பாசம் வைத்து, உன்னை மட்டும் தன்னுடன் தக்க வைக்க முயற்சிக்கிறாரா, அம்மா?இப்போதெல்லாம் பல திருமணங்கள் விவாகரத்தில் முடிய, மனைவியரின் அம்மாக்களே காரணம் என, ஆய்வு கூறுகிறது.ஏழாவது மாதத்தில் குழந்தை இறந்து பிறக்க, பல காரணங்கள் உள்ளன.குழந்தை மரணத்துக்கு மருத்துவக் காரணங்களை தவிர்த்து, கணவர் மற்றும் மாமனார் - மாமியார் மீது பழி போட ஒரு நியாயமும் இல்லை. ஒரு வேளை, அவர்கள் பக்கம் அலட்சியம் இருந்திருந்தால், குழந்தையின் மரணம், கணவரையும், மாமனார் - மாமியாரையும் மனதளவில் பெரிய அளவில் காயப்படுத்தி இருக்கும். மவுனமாய் அழுது கொண்டிருப்பர். கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசை உனக்கு இருக்கிறதல்லவா?உன் பெற்றோரிடம் தெளிவாக, அதேநேரம் ஆணித்தரமான குரலில், 'நான், கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். குழந்தை மரணத்தில் அவர்களின் அலட்சியம் காரணம் இல்லை என நம்புகிறேன். 'அலட்சியம் இருந்திருந்தாலும், அதை நான் மன்னிக்கிறேன். மாமனார் - மாமியார் மற்றும் கணவரை போன் பண்ணி வரச்சொல்கிறேன். அண்ணனும், அக்காவும் கூட வரட்டும். அனைவரின் முன்னிலையில், என்னை, என் கணவருடன் வழி அனுப்புங்கள்.'வரும் அவர்களிடம் எந்த தேவையற்ற பேச்சும் வேண்டாம். இத்தனை நாள் என்னை பராமரித்ததற்கு நன்றி. புகுந்த வீட்டுக்கு போனாலும், என் பிறந்த வீட்டு அபிமானம் தொடரும்...' என, கூறு.ஒரு வாரம் அவகாசம் கொடு. தகவல் தொடர்பு சரியில்லை என்றால், நீயே பாதுகாப்பாய் கிளம்பிப் போ. ஒரு ஆறு பவுண்டு ரோஜாக் குவியலை எந்தவித மருத்துவ பிரச்னையும் இல்லாமல் பெற்றெடுக்க, வாழ்த்துகிறேன்.— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !