குற்றம் குற்றமே!
ஊத்துக்கோட்டை ஆந்திரா, 'பார்டரில்' ஏராளமான மதுக்கடைகள். கடைகளின் மேல், 'சீரியல் செட்' விளக்குகளின் அலங்காரம். எல்லைப் பலகை, பார்க்கும் விதத்தில் இருந்தது. அதை ஒட்டி ஒரு கார் தேங்கி நின்றது.காருக்குள் விவேக். தாடி, மீசை என்று முடிந்தவரை, தன்னை மாற்றிக் கொண்டிருந்தான். அவனே காரை ஓட்டி வந்திருந்தான். காருக்குள் இருந்தபடியே சந்தோஷோடு தொடர்பு கொள்ளப் பார்த்தான். அப்போது, பெரியபாளையம் தாண்டி, சந்தோஷின் போலீஸ் கார் வந்தபடி இருந்தது.விவேக்குக்கு சந்தேகம் வந்து, தப்பி விடக்கூடாது என்பதற்காக, பி.எம்.டபிள்யூ., காரை ஏற்பாடு செய்திருந்தனர். அதில், சந்தோஷ் மற்றும் இரு சிவில் உடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுடன் வந்து கொண்டிருந்தார், சந்திரமோகன். சந்தோஷின் போன் ஒலிக்கவும், அதை வாங்கிப் பார்த்தார். விவேக், முன்பு பேசிய அதே எண்கள். ''அவன் தான் கூப்பிடறான். என்னன்னு கேள். இன்னும், 30 நிமிஷத்துல, 'பார்டரு'க்கு வந்துடுவோம்னு சொல். அதுக்கு மேல ஒரு வார்த்தை கூட பேசக் கூடாது,'' என்று, கண்டிப்பான குரலோடு போனைத் தர, அவனும், ''ஹலோ...'' என்றான்.''சந்தோஷ், நான் தான். இனி போன்ல பேச ஆரம்பிக்கும் போது, 'ஹலோ'ன்னு ஆரம்பிக்காத. நம்ப, 'அண்டர்வேர்ல்டு'ல அதை யாரும் பயன்படுத்த மாட்டோம். 'யெஸ் சுப்ரீம்'ன்னு ஆரம்பி.'' ''சரிங்க சார்.'' ''இப்ப எங்க வந்துக்கிட்டிருக்க?'' ''பெரியபாளையம் பிரிட்ஜை தாண்டிட்டேன். அரை மணி நேரத்துல அங்க இருப்போம்.'' ''குட், நான், எல்லைப் பலகை அருகே தான் நிக்கிறேன். கருப்பு கலர் மாருதி ஆல்ட்டோ.'' ''மாருதி ஆல்ட்டோவா?'' ''ஆமாம், சிம்பிளான காரைத்தான், போலீஸ் பெருசா சந்தேகப்படாது. இந்த மாதிரி நிறைய இருக்கு. நீ வா, நான் உனக்கு நிறைய சொல்லித் தரணும். ஆமா, அந்த மகாத்மா கிழவனை போலீஸ், கைது பண்ணிடுச்சா?'' ''யாரை சார் சொல்றீங்க?'' ''யாரா... அதான் உன்னோட இப்போதைய புதிய அப்பன்; என் அப்பாவோட பங்குதாரர்; திடீர்ன்னு திருந்திட்ட உத்தமர், கிருஷ்ணராஜைத்தான் சொன்னேன்.'' ''ஓ, அவரையா... ஆமாம் சார், அவரை போலீஸ் வந்து கைது பண்ணிடுச்சு.'' ''என்ன, 'டல்'லாவே பேசற... நீ, இனி கோடீஸ்வரன். அது மட்டுமில்ல, உன் மூலமா தான், நான் இனி எல்லா வேலையும் பண்ணப் போறேன். 5 கிலோ, 'கோகைன்' -- 5 கிலோ, 'பிரவுன் சுகர்'ன்னு ஏகப்பட்ட ஐட்டங்கள், ஒரு ரகசிய இடத்துல இருக்கு. ''அதை சிலோனுக்கும், வெஸ்ட் பெங்காலுக்கும் அனுப்பணும். அது, எங்க இருக்கு... எப்படி அனுப்பணும்ன்னு எல்லாம், நேரில் சொல்றேன். நான் இவ்வளவு நேரம் போன்ல பேசி இருக்கக் கூடாது. நீ, ஒன்றை நல்லா தெரிஞ்சுக்கோ. இந்த போன் எவ்வளவு, 'ப்ரெண்ட்லி'யோ அவ்வளவுக்கு, 'எனிமி'யும் கூட!''நம் பேச்செல்லாம் ஒரு, 'சாப்ட்வேர் டிஸ்க்'ல, பதிவாகி கொண்டே இருக்கும். 'சைபர் க்ரைம்'காரங்களுக்கு அதை எப்படி வெளியே எடுக்கணும்ன்னு நல்லா தெரியும். அதனால், ரகசியம் எதையும் போன்ல பேசிடக் கூடாது. எல்லாத்துக்கும், 'கோட் வேர்ட்' இருக்கு. நான் சொல்லித் தரேன். ''உதாரணத்துக்கு, கல்கட்டான்னா, 'ஸ்டோன் கட்டர்'ன்னு, 'கோட் வேர்ட்'ல சொல்லணும். இப்படி நிறைய இருக்கு. வா, நீ தான் இனி தமிழ்நாட்டோட எங்க ஏஜென்ட்...'' என்று, சந்தோஷிடம் பொங்கி வழிந்தான், விவேக்.சந்திரமோகனை பார்த்தபடி நெளிந்தான், சந்தோஷ்.'பேசு, பேசு...' என்று, ஜாடை காட்டினார், சந்திரமோகன்.''ரைட், நேர்ல பேசுவோம்; எதுக்கும் யாராவது பின்தொடர்ந்து வர்றாங்களான்னு கவனி. இந்த, 'இன்டர்போல்' போலீஸ், அழகா ஓட விட்டு பிடிக்கிறதுல கில்லாடிங்க. நாம தான் சூதானமா இருந்துக்கணும். சரி, வைச்சுடறேன்,'' என்று, போன் இணைப்பை துண்டிக்க, சந்திரமோகனை அதிர்வு குறையாதபடி பார்த்தான், சந்தோஷ். ''எல்லாத்தையும் கேட்ட தானே... எப்படிப்பட்ட, சர்வதேச கடத்தல் கும்பல் கையில, நீ சிக்கி இருக்கேன்னு தெரியுதா?'' என்று, கேட்டார். மவுனமாய் வெறித்தான். ''நீ, கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்க. அதான், உன் பொண்டாட்டி வடிவத்துல வந்து, உன்னை காப்பாற்றி இருக்கு. பேராசையுள்ள உனக்கு, நியாயமா வாழ்ந்தா போதும்ங்கிற ஒரு பொண்டாட்டி; நினைச்சு, சந்தோஷப்படு. ''அப்புறம், இப்ப மாட்டப் போற, விவேக், அவன் அப்பன் தாமோதர், அந்த கிருஷ்ணராஜ்... இவங்க எல்லாரும், இனி, எந்த காலத்துலயும் வெளி உலகத்தை பார்க்க முடியாது. மலேஷியன் போலீசும் இவங்களை தேடிக்கிட்டு இருக்காங்க. அந்த அரசாங்கத்திடம், நம்ப நாடு மாறியெல்லாம் கிடையாது. சிக்கிகிட்டா, துாக்கு தான்.''வளைகுடா நாடுகளில், 'ஷூட்டிங் ஆர்டரே' கூட உண்டு. உலகமே, போதை மருந்து கடத்தலை தடுக்க, போராடிக்கிட்டு இருக்கு. இவனோ, 'கோகைன், பிரவுன் சுகர்'ன்னு தவளை மாதிரி வாயைக் கொடுத்து, உன்னை இழுக்கிறான் பார். ''நீ, கடைசி வரை ஒத்துழைச்சா தான், உன்னை விடுதலை பண்ண முடியும். மேலும், நீ தான் பிடிச்சு கொடுத்தேன்னு சொல்லி, 'ரிவார்டும்' வாங்கி தர முடியும். 'ரிவார்டு' எவ்வளவு தெரியுமா?'' சஸ்பென்சுடன் கேட்டார், சந்திரமோகன். ''எவ்வளவு சார்?'' மிக சோர்வான குரலில் கேட்டான், சந்தோஷ். ''குறைஞ்சது, 25 லட்சம் ரூபாய் இருக்கும். ஒரு கோடி ரூபாய் வரை கூட கிடைக்கலாம். ஏன்னா, இவங்க ஒட்டுமொத்த உலகமும் தேடற கிரிமினலுங்க. அப்புறம் எனக்கும், 'பிரமோஷன்' கிடைக்கும். 'இன்டியன் இன்டர்போல் ஹெட்'டாவே நான் ஆக வாய்ப்பு இருக்கு...'' சந்திரமோகன், சொல்ல சொல்ல, சந்தோஷின் முகத்தில் பெரிய மாற்றம். அந்த ஒரு கோடி ரூபாய் என்ற தகவல், அவனை நிமிர்த்தியது. ''நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் சார்,'' என்று, அவர் கைகளைப் பிடித்தான், சந்தோஷ். குரோம்பேட்டை, 'சாரதா சைல்ட் ஹோம்!' அதன் நிர்வாகியான சுவாமி சைதன்ய பரமானந்தா முன், தனஞ்ஜெயனும், குமாரும் அமர்ந்திருந்தனர். அவர் பழைய பதிவேட்டை புரட்டி, அந்த டிசம்பர், 25ம் தேதியையும் எட்டிப் பிடித்து, அந்த பக்கத்தை பார்த்துவிட்டு மலர்ச்சியோடு நிமிர்ந்தார்.'சுவாமி...' என்று, தனாவும், குமாரும் கூட ஆர்வமாகினர். ''நீங்க தேடி வந்த அந்த ஆண் குழந்தை பற்றிய விபரம் தெளிவா இருக்கு. கார்ப்பரேஷன் ஸ்வீப்பர் சங்கரலிங்கம் பேரும் இந்த, 'என்ட்ரி'யில இருக்கு. ஆனா...'' என்று, சற்று இழுத்தார். ''என்ன சுவாமி, சந்தோஷத்தை கொடுத்துட்டு, ஆனான்னு, அதிர்ச்சியும் கொடுக்கறீங்க?'' படபடப்போடு கேட்டான், தனஞ்ஜெயன்.''அந்த குழந்தையை அப்பவே ஒருத்தர் வந்து, சட்டப்பூர்வமா தத்து எடுத்துக்கிறதா சொல்லி, அதுக்கான நடைமுறைகள் எல்லாம் முடிச்சு, எடுத்துக்கிட்டு போயிட்டாங்க. இப்ப அந்த குழந்தைக்கு, 27 வயசாகணும்.''நல்லவேளை, அந்த குழந்தையை ஒப்படைக்கும் போது, பெற்றோருடன் சேர்த்து புகைப்படம் எடுத்து வெச்சிருக்கோம். இதெல்லாம் எங்க நடைமுறை வழக்கம். வேணும்ன்னா, அந்த புகைப்படத்தை காட்டறேன். ''அப்போது, அந்த பெற்றோர் கொடுத்த முகவரியும் இருக்கு. அவங்களை, நாங்க, 16 வருஷம், கண்காணிப்போம். அந்த குழந்தையை அவங்க தான் வளர்க்குறாங்களா... இல்லை, குழந்தை கடத்தல்காரங்களுக்கு வித்துட்டாங்களான்னு பார்க்கணுமில்ல?''இதெல்லாமே, குழந்தை தத்தெடுப்புக்கான விதி...'' என சொல்லியபடி, எழுந்து போய், பீரோவை திறந்து, முகவரி பதிவு லெட்ஜரையும், ஆல்பத்தையும் எடுத்து வந்தார், சுவாமி சைதன்ய பரமானந்தா. தனஞ்ஜெயன், குமார் இருவரிடமும் ஒருவித துடிப்பு. அவர் முதலில் புகைப்படத்தை காட்டினார். அந்த நாளைய கலர் புகைப்படம். சற்று மங்கலாக இருந்தது. அதைப் பார்த்த, தனஞ்ஜெயன், குமார் இருவருக்குமே, 'திக்'கென்றது. அதில்...எல்லை பலகையை ஒட்டி நின்றது, சந்தோஷ் வந்த கார். சற்று துாரத்தில், விவேக்கின் கார். காரின் வலதுபுற கண்ணாடி வழியாக, சந்தோஷ் இறங்கி வருவதைப் பார்த்தான், விவேக்.காருக்குள் சந்திரமோகனும், மற்ற இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களும் தலையை குனிந்து, காரில் யாருமில்லாத ஒரு தோற்றத்தை உருவாக்கியிருந்தனர். அதனால், விவேக்கிடம் எந்த சந்தேகமும் எழவில்லை.காரின் கதவை திறந்து, மெல்ல வெளியில் வந்தான், விவேக். அவனை முதலில், சந்தோஷுக்கு அடையாளம் தெரியவில்லை. வெறிக்க வெறிக்க பார்த்தான். ''என்ன, சந்தோஷ்... என்னை அடையாளம் தெரியலியா?'' என்று கேட்கவும் தான், சந்தோஷுக்கு புரிந்தது. ''சார், நீங்களா?'' ''நானே தான். இனி, இப்படி எல்லாம் தான், நான் சுத்தியாகணும். எல்லாம் அந்த மலேஷியா ராமகிருஷ்ணன் செய்த வேலை. சித்திரவதை பண்ணியே எல்லா உண்மைகளையும் மலேஷியன் போலீஸ் கறந்துட்டாங்க. போகட்டும், நீயும் இப்ப மாறிட்டியே. உன், பி.எம்.டபிள்யூ., கார், மிடுக்கான, 'சூட்'டுன்னு அசத்தறியே?'' ''எல்லாம் நீங்க போட்ட பிச்சை சார்.'' ''இப்படி எல்லாம் நெஞ்சை நக்காதே. 'சென்டிமென்ட்ஸே' நம்ப குரூப்புக்கு ஆகாது. போலீஸ்ல மாட்டிக்கிட்டா, அடுத்த நொடி செத்துடணும். அதுக்கு தோதா எப்பவும் கையில ஒரு, 'பாய்சன் டேப்ளட் - சயனைட்' இருக்கணும். அதை வாயில் போட்ட, 10வது நொடி, ஆளை சாச்சுடும்.'' ''அப்ப, அந்த மலேஷியா ராமகிருஷ்ணன், ஏன் சார் அப்படி சாப்பிடலை?'' ''இன்டர்போல் கைது செய்ததும், வாய்க்கு பிளாஸ்திரி போட்டுடுவாங்க. நாம கோலத்துல பாய்ஞ்சா, அவங்க தடுக்குல பாய்வாங்க. அவங்களை நீ என்னன்னு நினைச்ச?'' ''இப்படி பயமுறுத்தினா எப்படி சார்?''''பயமுறுத்தல எச்சரிக்கிறேன். பார்த்தேல்ல, என் அப்பா, அந்த கிருஷ்ணராஜ்ன்னு, சகலரையும் துாக்கிட்டதை? 'டிவி'ல இப்ப அவங்க தான் ஹாட் நியூஸ்,'' சொல்லியபடி, தன் மொபைல் போனில், செய்தி சேனல் ஒன்றை காட்டினான். அதில், 'சர்வதேச கடத்தல் மன்னர்கள் கைது. ஒருவர் தப்பி ஓட்டம்!' என்ற தலைப்புச் செய்தி. அதை காட்டியபடியே, ''சரி, வா... உன் கார்ல போய், 'ஏசி'யில உட்கார்ந்து பேசுவோம். இந்த ஆல்ட்டோவுல, 'ஏசி எபெக்ட்'டாவே இல்லை,'' என்று சந்தோஷ் வந்த, பி.எம்.டபிள்யூ., காரை நோக்கி நடந்தான், விவேக். காரை நெருங்கி கதவைத் திறந்த நொடி, துப்பாக்கி முனையை காட்டியபடி நிமிர்ந்தார், சந்திரமோகன். விவேக், திரும்பி ஓட முயற்சித்த நொடி, இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களும் மறுபுறத்தில் குதித்து வந்து, துப்பாக்கியை நீட்டினர். அதில் ஒருவர், விவேக்கின் இரு கைகளையும் மடக்கி பிடித்தார். விவேக், சந்தோஷைப் பார்த்தான். ''சாரி சுப்ரீம்...'' என்றான், சந்தோஷ். சில மாதங்கள் சென்ற நிலையில், கோர்ட் அளித்த விசேஷ ஜாமினில், 'அப்ரூவராக' வெளியே வந்தார், கிருஷ்ணராஜ். தனஞ்ஜெயன் சொன்னது போல, குற்ற உணர்வுகள் நீங்கிய நிலையில், அவர் உடல் நிலையிலும், நல்ல மாற்றங்கள். 'வீல் சேரில்' கோர்ட்டுக்கு வெளியே வந்தவர், எங்கே தன் மகன் என்று தான், முதலில் தேடினார். தனஞ்ஜெயன், குமாரை அவர் முன் நிறுத்தி, ''சார், உங்க மகன் இவன் தான். இந்த உண்மை அந்த அனாதை ஆசிரமத்துக்கு போனப்ப தான் தெரிய வந்தது.''குமார், 'அடாப்டட் சைல்டு'ன்னு எனக்கும் தெரியாது. ஏன், அவனுக்கே தெரியாது. அந்த அளவு இவனை, தான் பெற்ற மகனாவே கருதி வளர்த்திருக்காங்க இவன் அப்பா, அம்மா,'' என்றதும், அவர்களும் அவர் முன் வந்தனர். கிருஷ்ணராஜ் அவர்கள் காலில் விழப்போனார். குமாரோ அதை தடுத்தவனாக, ''சார், சாரி அப்பா... இவங்களும் நம்ப கூடவே இருக்கட்டும்ப்பா...'' என்றான்.கண்ணீர் மல்க நின்றிருந்த, கார்த்திகாவை அருகில் அழைத்த குமார், அவள் கையை, தனாவின் கையோடு சேர்த்துப் பிடித்து, ''அப்பா... தனா, இனி உங்க மாப்பிள்ளைப்பா,'' என்றான். அதைக்கேட்டு பூரித்தார், கிருஷ்ணராஜ். ''தனஞ்ஜெயன், நீ மாப்பிள்ளை மட்டுமல்ல, நீயும், என் இன்னொரு மகன் மாதிரி தான்,'' என்று, அவன் கைகளை பற்றி, ஆனந்த கண்ணீர் விட்டார். அந்த கோர்ட் வளாகம், அபூர்வமாக ஒரு அதிசயம் போன்ற அந்த நிகழ்வுகளால் சிலிர்த்து நின்ற நிலையில், 'மீடியாகாரர்'கள் சுற்றி வளைக்க துவங்கினர்.''இங்க, இப்ப எதுவும் வேண்டாம். 'ஸ்பெஷல் பிரஸ் மீட் அரேஞ்ச்' பண்றேன். அங்க, சார் எல்லாம் சொல்வார்,'' என்றான், தனஞ்ஜெயன். கோர்ட்டுக்கு சந்தோஷும், அவன் மனைவி சுமதியும், குழந்தைகளுடன் வந்திருக்க, அவர்களையும் அருகில் அழைத்து, கைகளைப் பற்றி மகிழ்ந்தார், கிருஷ்ணராஜ். ''நாம எல்லாருமே இனி ஒண்ணு. என் குற்றங்கள் அவ்வளவுக்கும் அது தான் பரிகாரம்,'' என்றார். ஆமோதிப்பது போல, விண்ணிலிருந்து மழைச்சாரல் உதிர ஆரம்பித்தது. - முற்றும்இந்திரா சவுந்தர்ராஜன்இந்த தொடரை புத்தகமாக பெற 18004257700 என்ற டோல் ப்ரீ எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.