இது உங்கள் இடம்!
அவசரம் வேண்டாம்!உறவினரின் மகனுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குழந்தைப்பேறு இல்லை என்பதை, பெருங்குறையாக கருதினான், அவன். மருத்துவ ஆலோசனைகளை பெறாமலேயே, மனைவிக்கு தான் மலட்டுத்தன்மை என்று, அடித்துக் கூறினான். அதையே காரணமாகக் கூறி, விவாகரத்து செய்து வைக்குமாறு, தன் பெற்றோரை வற்புறுத்தினான்.விவாகரத்து விஷயத்தில் அவசரப்பட வேண்டாமென, மனைவியும், பெற்றோரும், உறவினர்களும், எவ்வளவோ அறிவுறுத்தியும் கேட்கவில்லை. விடாப்பிடியாக முரண்டுபிடித்து, விவாகரத்தும் பெற்றுக் கொண்டான்.பிரிந்த தம்பதி, தங்களுக்கான வேறு வேறு துணையையும் தேடிக் கொண்டனர்.அடுத்த ஆண்டிலேயே, அவனுடைய முன்னாள் மனைவி, இரண்டாம் கணவர் மூலம் குழந்தை பெற்று, தாயாகி விட்டார். ஆனால், இவனோ, பல கட்ட மருத்துவ பரிசோதனையில், குழந்தை பெற இயலாதவன் என்பது தெரிய வர, இரண்டாம் மனைவி, அவனை விவாகரத்து செய்து போய் விட்டாள்.அவசரப்பட்டு விவாகரத்து முடிவெடுத்த தன் தவறை எண்ணி, இப்போது வருந்துகிறான். ஆரம்பத்திலேயே மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ளாத, தன் முட்டாள்தனத்தை நினைத்து, அழுது புலம்பி, மன உளைச்சலில் தவித்து, மன நல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்து வருகிறான்.நண்பர்களே... குடும்ப வாழ்வில் பிரச்னைகள் ஏற்படுவது சகஜம். எந்தப் பிரச்னைக்கும், தீர்வு என்பது நிச்சயமாக உண்டு என்பதையும், திடமாக நம்புங்கள். விவாகரத்து விஷயத்தில் மட்டுமின்றி, எந்த விஷயத்திலும் அவசரப்படாமல், நிதானத்தை கடைபிடியுங்கள்!-வெ.பாலமுருகன், திருச்சி.வித்தியாசமான முயற்சி!தெரிந்த இளைஞர் ஒருவர், வட மாநில நபர் நடத்தி வரும், சிமென்ட் பூந்தொட்டி செய்யும் கூடத்திற்கு, வேலைக்கு சென்றார்.'போயும் போயும், ஹிந்திக்காரனிடம் வேலைக்கு சேர்ந்துள்ளான். புத்தி பேதலித்து போய் விட்டது போல...' என கூறி சிரித்தனர், அவனது நண்பர்கள்.ஒருநாள், புதிய வீடு ஒன்றில், அந்த இளைஞன், பூந்தொட்டி, 'ஆர்டர்' எடுத்தான். அதை பார்த்து, 'நீ 'ஆர்டர்' எடுக்கிறாய். பதவி உயர்வு பெற்று விட்டாய் போலும்...' என, கேட்டேன்.'இப்போது, அங்கு வேலை செய்யவில்லை. ஒரு ஆண்டு, அந்த வட மாநில நபர்களிடம் வேலை செய்தேன். அந்த நபரின் உதவியாலும், என் சொந்த முயற்சியாலும் இப்போது தனியே பூந்தொட்டி செய்யும் கூடம் அமைத்துள்ளேன்.'நான் கூடம் அமைத்துள்ள இடம், அவர்களது கூடத்திலிருந்து, 10 கி.மீ., துாரத்தில் இருக்கிறது. இதனால், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்களிடம் உதவியாளராக தான் சேர்ந்தேன். நாட்கள் செல்ல செல்ல, அச்சில் சிமென்ட் போட்டு பூந்தொட்டி வார்ப்பதை பழகிக் கொண்டேன்.'அத்தோடு, அவர்களுடன் பேசி, ஹிந்தியும் கற்றுக் கொண்டேன். இப்போது, சரளமாக ஹிந்தி பேசுகிறேன். எட்டாவது வரை மட்டுமே படித்த நான், இப்போது மாதம், 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன்...' என்றார்.பணம் சம்பதிப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது. படிப்பு மட்டும் தான் என்றில்லை.கவுரவம் பார்க்காமலும், விடா முயற்சியோடும், வித்தியாசமான சிந்தனையும் கொண்டிருந்தால், வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்லலாம் என்பதை, அந்த இளைஞர் மூலம் தெரிந்து கொண்டேன்.ப.சிதம்பரமணி, கோவை.'ஹீரோ'ன்னு சொல்லி, 'ஜீரோ' ஆக்கிடாதீங்க!நண்பரின் மகன், நன்றாக படிப்பவன்; தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கி, இரண்டு மூன்று ரேங்குகளில் வருவான். ஆள், அழகாக சினிமா, 'ஹீரோ' போல் இருப்பான். உடன் படிக்கும் மாணவர்களும், சில ஆசிரியர்களும், 'ஹீரோ ஹீரோ' என்று கூப்பிட்டு, உசுப்பேற்றி, அவன் மனதில், 'மாடலிங்' மற்றும் நடிப்பு ஆசையை துாண்டி விட்டனர்.அதனால், அடிக்கடி விதவிதமாக, போட்டோ, வீடியோ மற்றும் குறும்படம் எடுப்பது என்று கிளம்பியதால், படிப்பில் ஆர்வம் குறைந்தது. இன்ஜினியரிங் கோர்சில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தவன் மனதில் எழுந்த, 'ஹீரோ' ஆசையால் படிப்புக்கு, 'குட் பை' சொல்ல முடிவெடுத்தான். மாணவனின் மீதான அக்கறையால், இந்த சேதியை கேள்விப்பட்ட பேராசிரியர் ஒருவர், அவன் தந்தையிடம், 'மாடலிங், நடிப்பு என்பதெல்லாம் மண் குதிரையைநம்பி ஆற்றில் இறங்குவது போல,முட்டாள் தனமான செயல். அந்தத்துறையில் சாதிப்பதற்கு, மிகவும், 'ரிஸ்க்' எடுக்க வேண்டும்.'நன்றாக படித்து, டிகிரி வாங்கி, நல்ல வேலையில் சேர்ந்து விட்டால், வாழ்க்கை முழுவதும் பிரச்னை இல்லை. உங்க மகன் இப்ப ஆசைப்படறான்னு ஓ.கே., சொல்லிட்டிங்கன்னா, பிற்காலத்தில் அவன் இதில் வெற்றியடைய முடியலைன்னா, மனசு உடைஞ்சு போயிடுவான். தற்கொலை எண்ணம் கூட வந்துரும்.'அப்போ, அவன் உங்களையே குறை சொல்லவும் வாய்ப்பு உள்ளது. அதனால, அவனுக்கு,'கவுன்சிலிங்' கொடுத்து, மனசை மாத்துங்க...' என்று,'அட்வைஸ்' செய்திருக்கிறார்.அதன்படி, கொஞ்சம் அதட்டலாகவும், அன்பாகவும், 'அட்வைஸ்' செய்து, படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, படிப்பைத் தொடர, வழி காட்டினார், அவனது அப்பா.இப்போது அவன், ஆர்வமுடன் படிக்க ஆரம்பித்து விட்டான். நல்ல வழிகாட்டி கிடைத்தால், வாழ்க்கை சுபிட்சமாக ஆகும்.எ.எஸ். யோகானந்தம், கலிங்கியம், ஈரோடு.