திண்ணை!
ஆர்.சீனிவாச மூர்த்தி எழுதிய, பாரத ரத்னா எம்.ஜி.ஆர்., களஞ்சியம் நுாலிலிருந்து:அக்., 20, 1962ம் ஆண்டு, சீனா - இந்தியா போர் ஆரம்பித்தது. சீன ராணுவம், நயவஞ்சகமாக, லடாக் - மக்மோகன் எல்லைகள் வழியாக இந்தியாவில் நுழைந்து, இடங்களை பிடிக்கத் துவங்கியது.போர் நடத்த பணம் தேவை என்பதை உணர்ந்த அன்றைய பிரதமர் நேரு, 'ராணுவத்திற்கு உதவி செய்ய பெரும் அளவில் யுத்த நிதியை அள்ளித் தாருங்கள்...' என, வானொலியில் வேண்டுகோள் விடுத்தார்.இதைக் கேட்ட எம்.ஜி.ஆர்., சிறிதும் தாமதிக்காமல், நிதியாக, 75 ஆயிரம் ரூபாய் கொடுக்க முன் வந்தார். அதில், முதல் தவணையாக, 25 ஆயிரம் ரூபாயை காசோலையாக தர விரும்பினார்.யாரிடம் கொடுப்பது என யோசித்த, எம்.ஜி.ஆர்., காமராஜரிடம் ஒப்படைக்க உடனே புறப்பட்டு விட்டார்.காமராஜர், வெளியூர் பயணத்திற்காக, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் செல்கிறார் என, தகவல் கிடைத்தது.உடனே, எழும்பூர் ரயில் நிலையம் சென்றார், எம்.ஜி.ஆர்.,ரயிலுக்குள் அமர்ந்திருந்த காமராஜரிடம், எம்.ஜி.ஆர்., வந்துள்ள தகவல் கூறப்பட்டது. ஆச்சரியப்பட்டு, உடனே ரயிலிலிருந்து இறங்கி, எம்.ஜி.ஆரை சந்தித்தார், காமராஜர்.அவரிடம் காசோலையை வழங்கினார், எம்.ஜி.ஆர்.,ரயில் நிலையம் வந்திருந்த பத்திரிகையாளர்களிடம், 'இந்த செய்தி புகைப்படத்துடன் நாளைய நாளிதழ்களில் வரணும்...' என்றார், காமராஜர்.'எம்.ஜி.ஆர்., தனக்கு விளம்பரம் கிடைக்க, அப்படி செய்தார்...' என, காங்கிரசில் இருந்த சில நடிகர்களும், பத்திரிகையாளர்களும் அவதுாறு பேசினர்.இது, காமராஜர் காதுக்கு சென்றது.'முதன் முதலில் போர் நிதி கொடுத்தவர், எம்.ஜி.ஆர்., இது மெய்யான சங்கதி. இதனால், அவருக்கு விளம்பரம் கிடைச்சா, நமக்கு என்ன நஷ்டம்கிறேன். அவர், 'செக்' கொண்டு வந்து கொடுத்தபோது, நானே பிரமித்து விட்டேன்.'கொடுக்கணும்ன்னு நினைச்சதும் உடனே கொடுத்துட்டார். அதை எங்க கொடுத்தா என்ன, சும்மா இருங்கிறேன். நீ எவ்வளவு கொடுத்தே, எப்ப கொடுத்தே, கொடுப்பியா, மாட்டியான்னு தெரியல. சும்மா ஏன் கிண்டல் செய்யணும்; கொடுக்கிறவனையும் ஏன் துரத்தணும்...' என, பொரிந்து தள்ளினார், காமராஜர்.பிறகு தான் இந்த விஷயம் அடங்கியது. மீதி தொகையை, பின்னர் காசோலையாக கொடுத்தார், எம்.ஜி.ஆர்.,***புதுச்சேரி, பிரெஞ்சுகாரர்களிடம் அடிமைப்பட்டு இருந்தபோது நடந்த நிகழ்வு இது:புதுச்சேரியில், 1746ல், கவர்னராக பதவி வகித்து வந்தார், டூப்ளே.தை வெள்ளிக்கிழமை, மாலை, 7:00 மணிக்கு, கொக்கேத் என்ற பிரெஞ்சு சிப்பாய், தன் வீட்டிலிருந்து புறப்பட்டு, மீராப் பள்ளியிலே உள்ள தோட்டத்திற்கு சென்று, சாராயம் குடித்தான்.திரும்பி வரும்போது, ஒரு வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றான். கதறியபடி வெளியே ஓடினாள், அப்பெண்.உருவின கத்தியோடு பின் தொடர்ந்தான், அந்த சிப்பாய். அந்தப் பெண் ஓடிப்போய் பக்கத்து வீட்டில் புகுந்து, கதறி அழுதாள்.தெருவில் கூட்டம் கூடி விட்டது. குடிகாரனை பிடித்து, சரமாரியாக அடித்தனர், தெருவாசிகள். அவனிடமிருந்த கத்தியையும், பிரம்பையும் பிடுங்கினர்.அடித்த அடியில் அவன் மண்டை உடைந்தது. இனிமேல் பிழைக்க மாட்டான் என்ற நிலை. விஷயம், கவர்னர் டூப்ளே காதுக்கு சென்றது.'தமிழன் வீட்டுக்குள்ளே வெள்ளைக்காரன் புகுந்து, பெண்டு பிடிக்கப் போனால், அவர்கள் சும்மா இருப்பரா, நல்ல வேலை செய்தனர்...' என்று கூறினாராம், கவர்னர். - நடுத்தெரு நாராயணன்