உள்ளூர் செய்திகள்

தொடரும் உறவுகள்!

''போன் அடிக்கிறது காதுல விழலியா, யார்னு பாருங்க. இதால என் துாக்கமே போச்சு,'' துாக்கம் கலைந்த எரிச்சலில் கத்தினாள், சார்மி. பத்தாவது முறையாக மொபைல் போன் சிணுங்கியது.''நீயே யார்னு பாரு, சார்மி...'' என்றான், ராகவ்.பாதி ராத்திரியில் மொபைல் போன் அடித்தாலே, ராகவின் மனம் படபடக்கும். போனை எடுத்து பேசவே, பயந்து நடுங்குவான். எரிச்சலோடு போனை எடுத்தாள், சார்மி. ''ஹலோ, யாரு? ஓ அப்படியா... அவர் இங்க தான் இருக்காரு குடுக்கிறேன், பேசுங்க.'' ''இந்தாங்க, உங்க சித்தப்பா தான். நீங்க, எதை நினைச்சு போன் எடுக்கலியோ, அது நடக்கல. தைரியமா பேசுங்க,'' எரிச்சலும், கேலியும் கலந்த வார்த்தைகளை கொட்டினாள், சார்மி.''ஹலோ... நான் தான் சொல்லுங்க,'' என்றான், ராகவ்.''தம்பி, நான் சித்தப்பா பேசறேன்பா. உன் அப்பாவுக்கு நினைவு தவறிடுச்சு. டாக்டர் இனி தாங்காதுன்னு சொல்லிட்டாரு. அண்ணன், கடைசியா உன் பேரச் சொல்லித்தான் புலம்பறாரு. இந்த ஒருமுறை மட்டும் வந்தா, கடைசியா பார்த்துட்டு போய்டலாம்பா,'' சித்தப்பாவின் நா தழுதழுத்தது.''சரி, சித்தப்பா... நான் உடனே கிளம்பறேன்,'' என சொல்லி, போனை, 'கட்' செய்தான். ''என்னாச்சு, திரும்ப உங்க அப்பாவுக்கு முடியலேன்னு வரச்சொல்றாங்களா?''''அப்பாவுக்கு நினைவு தவறிடுச்சாம். கடைசியா ஒருமுறை வரச்சொல்றாங்க, சார்மி,'' என்றான்.''நாம இருக்கிறது லண்டன்ல, நினைச்ச நேரத்துல ஓட முடியாதுன்னு இன்னுமா புரியல, ராகவ். ஏற்கனவே உங்க அப்பாவுக்கு முடியல, முடியலேன்னு ஊருக்கு ஓடி, கடைசில ஏமாந்து போய் தானே திரும்பினோம். ஏகப்பட்ட, 'லீவ்' எடுத்தாச்சு, அதெல்லாம், 'ஓவர் டைம்' செஞ்சு தான் முடிக்கிறோம்ன்னு நினைவில்லையா?'' என்றாள்.எதை ஏமாற்றம் என்கிறாள்... அப்பா உயிர் பிழைத்ததையா... தன்னை விட படிப்பிலும், பணத்திலும் உயர்ந்த அவளை எதிர்த்துப் பேச, அவனால் முடியவில்லை. என்ன செய்வது, சாதாரண குடும்பத்தில் பிறந்து, வாழ்வின் உயரத்தை எட்டிப் பிடித்து, கார், பங்களா என, வாழத் துடித்த அவனால், அவளை எதிர்க்க முடியவில்லை. காலத்தின் கட்டாயம்.''சரி டார்லிங், என்னால வர முடியாது. குழந்தைகளுக்கு ஸ்கூல், எனக்கு வேலை இருக்கு. நீங்க போயிட்டு வாங்க,'' என்றாள், சார்மி. எப்படியோ அவளிடம் அனுமதி வாங்கி, விமானத்தில் பயணித்தபோது, அப்பாவின் நினைவுகளும் அவனோடு பயணித்தது. அம்மாவின் தோள் சாய்ந்து உறங்கும் குழந்தைகளை பார்க்கும் போதெல்லாம், அவனுக்கு அப்பாவின் நினைவு தான் வரும்.அவன் குழந்தையாய் இருக்கும்போதே இறந்து விட்ட அம்மாவை, போட்டோவில் தான் பார்த்திருக்கிறான். எல்லாமே அப்பா தான். அவனுக்காகவே, அப்பா இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை.'ஏம்பா அருணாசலம், கையில குழந்தையை குடுத்துட்டு, உன் பொஞ்சாதி கண்ணை மூடி, ஓராண்டு ஓடிடுச்சு. என்னால இன்னும் எத்தனை காலம் இருந்து, உனக்கு வடிச்சுப் போட முடியும்.'நான் கண்ணை மூடறதுக்குள்ள, உனக்கு ஒரு கல்யாணத்தை முடிச்சுட்டேன்னா, நிம்மதியா போய் சேருவேன்...' என்று, அவர் அம்மா புலம்பத் துவங்கிய அடுத்த நாளே, சமைக்கத் துவங்கி விட்டார், அப்பா. யார் எவ்வளவு சொல்லியும் செவி சாய்க்கவில்லை. 'போதும் போதும், எனக்கு ஒரு பொஞ்சாதியும், ஒரு புள்ளையும்...' என்று, முற்றுப்புள்ளி வைத்து விடுவார்.ராகவின் பயணங்கள் பெரும்பாலும், அப்பாவின் தோள் மீது தான் இருக்கும். 'அப்பா, பட்டாம்பூச்சிப் பாரேன் எப்படி பறக்குதுன்னு...''நாமளும் பறக்கலாமா, ராகவ்?' 'அப்பா, நம்மாளும் பறக்க முடியுமா?''ம்... அப்பா தோள கெட்டியா புடிச்சுக்க...' என்றபடி கைகளை விரித்து, நுனிக் காலால் எம்பி எம்பி குதித்தபடி ஓடுவார். அப்பாவின் தோளை பிடித்தப்படி வயிறு வலிக்க, குலுங்கி குலுங்கி சிரிப்பான், ராகவ்.படிப்பை முடித்தப் பின், வேலைக்காக விண்ணப்பித்த போது, வெளிநாட்டு மோகம் அவனையும் பிடித்துக் கொண்டது.வெளிநாட்டு கம்பெனியின் உள்நாட்டு கிளையில் வேலையும், சார்மியின் நட்பும் கிடைத்தது. வெளிநாட்டு ஆசை இருவரையும் வாழ்வில் ஒன்றிணைத்தது. அப்பாவின் சம்மதத்தோடு, திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் வேலைக்கு அமர்ந்த சமயம், அடிக்கடி அப்பாவைப் பார்க்க கிராமத்திற்கு ஓடி வருவான். மும்பைக்கு மாற்றலான பின், அப்பாவைப் பார்ப்பது ஆண்டுக்கு ஒருமுறை ஆனது. வெளிநாட்டுக்குப் போகும் ஆசையை மறந்திருந்தான், ராகவ். ஆனால், சார்மி மறக்கவில்லை. வெளிநாடு போக, கம்பெனி தேர்வு செய்த ஆட்களில், ராகவும் ஒருவன்.'வெளிநாடெல்லாம் வேணா, சார்மி. இங்கேயே நல்ல வேலை, சம்பளம் எல்லாம் கிடைக்குது. ஆண்டுக்கு ஒரு முறையாவது, நம்ம பெத்தவங்களை போய் பார்த்துக்கலாம். அங்க போனா அதெல்லாம் முடியாது...' என்றான்.'நான் உங்களை கல்யாணம் பண்ணினதுக்கு காரணமே, வெளிநாட்டுக்கு போகலாம்கிற ஆசையில தான், ராகவ். புரிஞ்சுக்கோங்க, நீங்க மட்டுமில்ல, நானும், என் அப்பாவை முதியோர் இல்லத்துல சேர்த்துட்டு தான் வரப்போறேன்!'கடல் கடந்து வந்திருந்தாலும் அப்பாவோடு தினமும், 'வீடியோ காலில்' பேசுவான், ராகவ். 'தம்பி, வாரா வாரம் எண்ணெய் தேய்ச்சு குளிக்க மறந்துடாத. குளிச்சப் பின்னாடி குளிர்ச்சியா எதுவும் சாப்பிடாத; மிளகு ரசம் வெச்சு சுடு சாதத்தோட சேர்த்து சாப்பிடு. வேலை வேலைன்னு துாக்கத்த கெடுத்துக்காத. பொண்டாட்டி, பிள்ளைகளை அன்பா பார்த்துக்கோ...' என்று அன்போடு சொல்லும் அப்பா, கேலி பொருளாகிப் போனார். அப்பா பேசத் துவங்கும் முன்பே, அவர் பேசுவதை ஒப்பிப்பாள், சார்மி. ராகவிற்கு, இந்தக் கேலி பேச்சு அறவே பிடிக்கவில்லை. வேலை அதிகம் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்தி கொண்டு, அப்பாவோடு பேசுவதை குறைத்துக் கொண்டான்.பார்ட்டி, சினிமா என்று நேரத்தை செலவிட தெரிந்த அவனால், அப்பாவிடம் பேச நேரமில்லாமல் போனது.சார்மியும், குழந்தைகளும், விடுமுறை நாட்களில் சினிமா, ஹோட்டல், பார்க், பங்ஷன் என்று பொழுதை ஜாலியாக போக்கிக் கொண்டிருந்தனர். 'என்ன சார்மி, உன் கணவர் யார் கூடயும் ஓட்டாம, எப்பவும் தனியாவே இருக்காரு...' 'அது ஒண்ணுமில்லடி, அவர், அப்பா பிள்ளை. சொந்தம், பந்தம்ன்னு, குடும்பத்தினர் மீது அவருக்கு பாசம் அதிகம். இப்பெல்லாம் இங்க இருக்கறதே அவருக்குப் பிடிக்கிறதில்ல. எப்ப சொந்த ஊருக்கு ஓடுவோம்ன்னு இருக்காரு. என்னோட பிடிவாதத்துல தான் அவரை பிடிச்சு வெச்சிருக்கேன்...''இங்க தான் வேலை, பணம், வாழ்க்கை எல்லாம் இருக்கு? இந்த வாழ்க்கையை விட்டுட்டு அங்க போய் என்ன பண்ண போறாராம்?''வேறென்ன, விவசாயம் தான்...'இதைக் கேட்டு, சார்மியின் தோழிகள், ஓவென்று வாய் விட்டு சிரிப்பர். 'பெரிய படிப்பு, வெளிநாட்டு வாழ்க்கை எல்லாம் வேணும். இங்க வந்த பின்னரும், அப்பா, சொந்தம் எல்லாமே வேணும்ன்னா எப்படி? மனுஷ குணமே எப்ப வேணா, எப்படி வேணா மாறும். விடு, அவர் எப்போதுமே அப்படித்தான்...' என்பாள், சார்மி.சார்மிக்கு எப்போதும், 'கொஞ்சம் வேலை, அதிக, 'என்ஜாய்' என்று பொழுதை போக்கும் குணம் உண்டு. அதற்கு நேர் எதிரானவன், ராகவ். இதனாலேயே பல சமயம், இருவருக்கும் பல சமயங்களில் முட்டிக்கொள்ளும். விட்டுக் கொடுத்து சமாதானம் ஆவதும், சார்மியை சமாதானப் படுத்துவதும், ராகவ் தான்.கிராமத்திற்குப் போய், அப்பாவைப் பார்த்த இரண்டே நாளில், நினைவு திரும்பாமலேயே மரணத்தைத் தழுவினார். தகவல் தெரிந்த உடன், மகன்களோடு வந்திருந்தாள், சார்மி. ராஜ மரியாதையோடு அப்பா அருணாசலத்தின் இறுதி மரியாதையை நடத்தி வைத்தான், ராகவ். 'செத்தாலும் நம் அருணாசலம் மாதிரி, ராஜ மரியாதையோட சாக குடுத்து வெச்சுருக்கணும்...' என ஆச்சரியப்பட்டனர், ஊரார்.''ராகவ், நாம வந்து, 10 நாள் ஆச்சு, நாளைக்கு கிளம்பலாமா?''''இல்ல சார்மி. எனக்கு இங்க முக்கியமான வேலை இருக்கு. ஒரு வாரம் ஹோட்டலில் அறை எடுத்து தங்கலாம். அந்த வேலை முடிஞ்ச உடனே கிளம்பிடலாம்.'' ''ஒரு வாரமா... ஏற்கனவே, 10 நாள், 'லீவ்' அதிகம் ஆயிடுச்சு. பசங்க படிப்பு என்னாகுறது யோசிக்க மாட்டீங்களா?''''ஒண்ணும் ஆகாது சார்மி,'' என சொல்லி சென்றவன், ஓயாமல் சுற்றிக் கொண்டிருந்தான். முகத்தில், தாடி மண்டிக் கிடந்தது. இரவு, 12:00 மணியைக் கடந்தும், ராகவ் வரவில்லை; சார்மியின் மனதில் பயம் தெரிந்தது. 'எல்லார் வீட்லயும் பெரியவங்க சாகறது சாதாரண விஷயம் தான். 'லவ் பெயிலியர்' ஆன மாதிரி ஏன் தாடியோட இருக்கீங்க?' நேற்று கேட்டது, நினைவுக்கு வந்தது. ஏதாவது, விபரீத முடிவு எடுத்திருப்பானோ... மனம் பயந்து நடுங்கியது. கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, ஓடி வந்தாள். ''எங்க போயிட்டீங்க, இவ்வளவு நேரம் நான் பயந்தே போயிட்டேன் தெரியுமா?''''நம் புள்ளைங்களோட தாத்தாவை கூட்டிட்டு வரப்போனேன்.''''உங்க, சித்தப்பாவை கூட்டிட்டு வரப்போனீங்களா, ராகவ்?”'''இல்ல. உங்க அப்பாவை கூட்டிட்டு வரப்போனேன், சார்மி. என்னோட வெளிநாட்டு ஆசை, அப்பா சாகும்போது, அவருடன் இல்லாம பண்ணிடுச்சு. அந்த தப்ப நீயும் பண்ணிடக் கூடாதுன்னு தான், இவரை அழைச்சுட்டு வந்தேன்.''அவருக்கும், விமான டிக்கெட் எடுத்தாச்சு. 'டாக்டர் சர்டிபிகேட்' கூட வாங்கிட்டேன். அப்பாவுக்கு வேண்டியதெல்லாம் வாங்கியாச்சு. அதுக்குத் தான் இவ்வளவு அலைச்சல். அப்பாவை வண்டியில் உட்கார வெச்சுட்டு வந்திருக்கேன். வாங்க, எல்லாரும் போய் அவரை அழைச்சுட்டு வரலாம்.'' தனக்குப் புரியாத, தன் அப்பாவின் அன்பை புரிய வைத்த, கணவனை எண்ணி நெகிழ்ந்தாள், சார்மி. இனி, பெரியவர்களை அரவணைக்கும் நோக்கத்தோடு, தந்தையை அழைக்க ஆசையோடு சென்றனர்.கண்மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !