சிறிய திருவடி!
பெருமாளை சுமப்பவர்கள் இருவர். ஒருவர், பெரிய திருவடி எனப்படும், கருடன். மற்றொருவர், திருவடி எனப்படும் அனுமன். சொல் வழக்கில், சிறிய திருவடி என்பர்.அதாவது, பெருமாளை முன்னதாகவே சுமப்பவர், கருடன். பெரியவர் என்ற வகையில் பெரிய திருவடி எனப்பட்டார். ராமாவதார காலத்தில் தான், பெருமாளை சுமந்தார், அனுமன். எனவே, இளமையை கருத்தில் கொண்டு, சிறிய திருவடி என்றனர். பெரிய, சிறிய என்ற சொற்கள், வயதை கொண்டு தானே தவிர, தகுதியால் இல்லை.பெருமாள் கோவில்களுக்கு உற்சவம் பார்க்க சென்றால், தினமும் ஒரு வாகனத்தில் பவனி வருவார். அதில், அனுமன் வாகனமும் ஒன்று. திருப்பதி உள்ளிட்ட எல்லா திருமால் தலங்களிலும், அனுமன் வாகனம் உள்ளது.கருடன், பெருமாளை சுமப்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. இதனால் தான், கருட சேவைக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், அனுமன் எப்போது, பெருமாளை சுமந்தார் என்பது பலரும் அறியாத செய்தி. வால்மீகி இதற்கு விடையளிக்கிறார்.வால்மீகி ராமாயணத்தில், இலங்கை சென்ற ராமனுக்கும், அவரது மனைவி சீதையை கடத்திய ராவணனுக்கும் போர் நடக்கிறது. ராமனின் தம்பி லட்சுமணன், வானரர் படைத்தலைவன் சுக்ரீவன், அனுமன் உள்ளிட்ட வீரர்களெல்லாம் அவனுடன் போரிட்டு பார்த்தனர். யாராலும் கொல்ல முடியவில்லை.எனவே, ராமனே நேரில் போர்க்களத்துக்கு சென்றார். உயர்ந்த தேரில் நின்றான், ராவணன். ராமன், தரையில் நின்று போரிட வேண்டி இருந்தது.அப்போது தான், அனுமன் முன் வந்து, 'ராமபிரானே, என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள். தங்கள் திருவடிகளை நான் தாங்கிக் கொள்கிறேன். கேடு கெட்ட ராவணன், தேரில் நிற்கிறான். நீங்கள் தரையில் நிற்பதா! அவனுக்கு இணையாக, நீங்கள் உயரமான இடத்தில் நின்றாக வேண்டும்.'அவனது தேரின் உயரத்துக்கு என் உருவத்தை உயர்த்திக் கொள்வேன். நீங்கள், என் மேல் அமர்ந்து உக்கிரத்துடன் போரிடுங்கள். ராவணன் என் மீது அம்புகள் பொழிந்தாலும், நான் அசர மாட்டேன். நீங்கள் என் மேல் அமர்ந்து போர் செய்யலாம்...' என்றார்.ராமனும், அவ்வாறே அமர்ந்து போர் செய்து, ராவணனின் அனைத்து ஆயுதங்களையும் நொறுக்கியதுடன், 'இன்று போய் நாளை ஆயுதங்களுடன் வா...' என்றார். போரின் போது, ஏராளமான அம்புகளை, அனுமன் மீது பாய்ச்சினான், ராவணன். அந்த வலியையும் பொறுத்து, ராமனின் திருவடிகளை தாங்கிக் கொண்டிருந்தார், அனுமன்.அனுமனை பெருமைப்படுத்த தான், இன்று வரை, எல்லா பெருமாள் கோவில்களிலும் அனுமன் வாகனத்தில் பெருமாள் பவனி வருகிறார். அது மட்டுமின்றி, கருடனுக்கு கிடைக்காத பெருமையாக, அனுமனுக்கு தனிக்கோவில்கள் ஏராளமாக உள்ளன.அனுமன் வாகனத்தை தரிசிப்பவர்களுக்கு திட மனதும், எதிலும் வெற்றியும் கிடைக்கும்.தி. செல்லப்பா