உள்ளூர் செய்திகள்

நம்மிடமே இருக்கு மருந்து - முருங்கை!

எப்போதும் ஒருவித மன அழுத்தத்துடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோயின்றி வாழவும், தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடு அதிகரிக்கவும் மருந்து மற்றும் இயற்கை வயாகராவாக இருக்கிறது, முருங்கை. முருங்கையில், 90க்கும் அதிகமான சத்துகளும், மருத்துவ குணங்களும் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. முருங்கையின் அனைத்து பாகங்களுமே, அதீத மருத்துவ குணங்களைக் கொண்டது. ஆயுர்வேத மருத்துவம் முருங்கையை பற்றி குறிப்பிடும் போது, இது, 300 விதமான நோய்கள் வராமல் தடுக்கவும், 67க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தவும் பயன்படுவதாக கூறுகிறது. உடலுக்கு தேவையான முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றில் அடங்கியிருக்கின்றன. மற்ற உணவுகளை விட இதில், 25 மடங்கு அதிகமாக இரும்புச்சத்து இருக்கிறது. மேலும், வைட்டமின் பி, பி2, சி, புரதம், நார்ச்சத்து, கால்சியம், ஜிங்க், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இன்று குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரத்த சோகை பிரச்னை உள்ளது. குறிப்பாக, பெரும்பாலான கர்ப்பிணிகளுக்கு இந்தப் பாதிப்பு உண்டு. ரத்த விருத்தி குறைந்திருப்பவர்கள் மட்டுமல்ல அனைவரும், வாரத்தில் இரண்டு நாள் இந்தக் கீரையை சாப்பிட்டால், ரத்த சோகை வராமல் தடுக்கலாம். அதிக அளவு இரும்புச்சத்து கொண்ட இந்த முருங்கையால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க துவங்கும்.கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தவும், கருப்பையின் வளர்ச்சியைச் சீராக்க செய்வதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. விந்து எண்ணிக்கையில் குறைபாடு இருக்கும் ஆண்களுக்கும் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. மேலும், பாலுாட்டும் தாய்மாருக்கும், குழந்தைக்குமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. வயிற்றுப்புண், தொண்டைப்புண், கண் சம்பந்தமான நோய், சிறுநீரகப் பிரச்னை மற்றும் வயிற்றில் இருக்கும் புழுக்களை அழிப்பதிலும் உதவுகிறது, முருங்கைக்காய்.முருங்கை இலையில் கால்ஷியமும், மெக்னீசியம் சத்துக்களும் அதிகமாக இருப்பதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலுவூட்டுகிறது. குழந்தைகளுக்கு வளரும் பருவத்திலேயே இதைக் கொடுத்து வந்தால், கால்ஷியம் பற்றாக்குறையின்றி வளர்வர். இதயத்துக்கு வலுவூட்டுவதோடு, சீராக செயல்படவும் வைக்கிறது. வாயுத்தொல்லையை அண்டவிடாமல் செய்வதோடு, சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, சைனஸ் மற்றும் சளித்தொல்லை பிரச்னைகளுக்கும் முருங்கை நல்ல மருந்தாக இருக்கும். இவையெல்லாம் தவிர, உடல் எடையைக் குறைப்பதிலும், முதுமையைத் தடுப்பதிலும், சருமத்துக்கு அழகூட்டுவதிலும், கண்பார்வை பலமடையவும், மூட்டு வலி குறையவும், கூந்தல் வளர்ச்சிக்கும் என, பல மருத்துவ குணநலன்களை கொண்டிருக்கிறது. முருங்கைப்பூவைச் சுத்தம் செய்து கஷாயமாக்கி குடித்து வந்தால், உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றின் செயல்பாடுகளும் சமமாக இருக்கும். முருங்கைப்பூ பொடி, நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். அவற்றையும் வாங்கி பயன்படுத்தலாம். தொகுப்பு: மாணிக்ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !