உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம் - நரைமுடி பெருமாள்!

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள், அர்ச்சகர் ஒருவரை காப்பாற்ற, சவுரி முடியுடன் காட்சி தந்தார்.ஆண்டாளின் தலை முடி ஒட்டிய மாலையை அணிந்த பெருமாள், அவளையே துணைவியாக அடைந்து, லீலை நிகழ்த்தியதும் தமிழகத்தில் தான். இதே போல், ராஜஸ்தான் மாநிலத்தில், தன் பக்தனுக்காக தன் கார்குழலை வெள்ளை முடியாக்கி, அற்புதம் செய்துள்ளார், ஜெகந்நாதப் பெருமாள். இவர், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அருள் பாலிக்கிறார். உதய்பூரில், 400 ஆண்டுகளுக்கு முன், மகாராணா ஜெகத்சிங்கின் ஆட்சி நடந்தது. விஷ்ணு பக்தரான இவர், பெருமாளுக்கு, இங்கு கோவில் கட்ட விரும்பினார். அந்தக் காலத்திலேயே, 15 லட்சம் ரூபாய் செலவழித்து, பிரமாண்ட கோவில் கட்டப்பட்டது. இதைக் கட்டி முடிக்க, 25 ஆண்டுகள் ஆனது. சுவாமிக்கு, ஜெகந்நாதர் என பெயர் சூட்டினார், மன்னர். இங்கு பணி செய்யும் அர்ச்சகர்களை, 'தேவகன்' என்பர். நம்மூரில் பூசாரி என்பதைப் போல! அவ்வாறு பணி செய்த அர்ச்சகர் ஒருவர், தினமும் நடை சாத்தும் போது, சுவாமிக்கு சாற்றிய மாலையை, தன் தலையில் வைத்துக் கொண்டு, பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து செல்வார். ஒருமுறை, அவர் கிளம்பும் வேளையில், மன்னர், தரிசனத்துக்கு வருவதாக தகவல் வந்தது. நடை சாத்தும் நேரம் என்பதால், சுவாமியின் கழுத்தில் இருந்த ஒரே மாலையை, தன் தலையில் வைத்திருந்தார், தேவகன்.மன்னருக்கு பிரசாதமாக கொடுக்க, இந்த மாலை மட்டுமே இருந்ததால், அவசர அவசரமாக மீண்டும் சுவாமியின் கழுத்திலேயே, அந்த மாலையை போட்டு விட்டார், தேவகன்.அப்போது, அவர் தலையிலிருந்த இரண்டு நரை முடிகள், மாலையில் ஒட்டிக் கொண்டன. சுவாமி தரிசனம் செய்த மன்னருக்கு, மாலையை பிரசாதமாக தந்தார், தேவகன். மாலையை கழுத்தில் அணிந்த மன்னர், அதில், நரைமுடிகள் ஒட்டியிருப்பதைப் பார்த்து, தேவகனைக் கடிந்து கொண்டார். 'மன்னா... எனக்கேதும் தெரியாது; சுவாமியின் தலையில் உள்ள நரைமுடி தான் ஒட்டியிருக்கிறது...' என்றார், தேவகன்.'எங்கே சுவாமியின் தலையைக் காட்டும்...' என்று சன்னிதிக்குள் புகுந்தார், மன்னர். அங்கே, ஒளி வெள்ளத்தில் வெள்ளை வெளேரென தலை மிளிர காட்சியளித்தார், பெருமாள். அதிர்ந்த மன்னர், தேவகனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். 'பக்தனுக்காக, நரை முடி தரித்த நாராயணா! நீயே இந்த ஜெகத்திலுள்ள அனைவர் வாழ்வையும், உன் ஒளிரும் தலை முடி போல் பிரகாசமாக்க வேண்டும்...' என்று வேண்டினார்.இக்கோவில் கருவறைக்குள் செல்ல, 32 படிகள் ஏற வேண்டும். மூன்று அடுக்குகள் கொண்ட இக்கோவில் கோபுரம், 79 அடி உயரம் கொண்டது.விநாயகர், சிவபார்வதி, துர்க்கை, லட்சுமி, கருடன் சன்னிதிகளும் உள்ளன. நரை முடியுடன் காட்சி தந்த இந்த நம்பியைத் தரிசிக்க, உதய்பூர் சென்று வாருங்கள்!தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !