விசேஷம் இது வித்தியாசம்: எள் ஏகாதசி!
எள் - சிறிய தானியம். கொள்ளுப்பேரன், பேத்திகளின் குழந்தைகளை எள்ளுப்பேரன், எள்ளுப்பேத்தி என்கிறோம்.பெரும்பாலோர், பேரன், பேத்திகளைப் பார்ப்பர். ஒரு சில யோகசாலிகளுக்கு தான் கொள்ளுப்பேரன், பேத்திகளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால், 80, 90 வயதில் எள்ளுப்பேரன், பேத்திகளைப் பார்க்கும் சந்தர்ப்பம் மட்டும் ஒருவருக்கு அமைந்து விட்டால், அவர் சொர்க்கத்தில் இருப்பது போல, சுகமான அனுபவத்தைப் பெறுவார்.இதை மனதில் வைத்து தான், பரந்தாமனின் பரமபதத்தை அடைய வழி வகுக்கும் விரதத்துக்கு, 'எள் ஏகாதசி' எனும், ஷட்திலா ஏகாதசி என, பெயர் வைத்தனர்.ஷட் என்றால், ஆறு. திலம் என்றால், எள். எள்ளை வைத்து, ஆறு விதமான சடங்குகளைச் செய்யும் நாளே, ஷட்திலா ஏகாதசி.நன்மைகளை செய்து, நல்லதை மட்டுமே மனதில் எண்ணும் ஒருவரே, பரமபதமாகிய சொர்க்கத்தை அடைய முடியும். இப்படி எல்லா நன்மையும் செய்து, தன் செல்வத்தை ஏழைகளுக்கு தானம் செய்தாள், ஒரு பெண். ஆனால், அன்னதானம் மட்டும் செய்யவில்லை.போதாக்குறைக்கு, ஒரு சமயம், அவளிடம் உணவு கேட்டு வந்த ஒரு பிச்சைக்காரனின் பாத்திரத்தில், களிமண் உருண்டையைப் போட்டாள். அந்த பிச்சைக்காரன் வேறு யாருமல்ல, பெருமாள் தான். இதன்பின், அவள் சாப்பிட அமர்ந்தாள். உணவு களிமண்ணாக மாறி விட்டது. பசி மயக்கத்தில் துாக்கம் வர, 'பரந்தாமா! இதென்ன சோதனை?' என்றாள்.அப்போது, கனவில் தோன்றிய பெருமாள், 'அம்மா! நீ, எல்லா தர்மமும் செய்தாய். ஆனால், அன்னதானம் செய்யாமல், உன் வீட்டுக்கு பிச்சைக்காரன் வடிவில் வந்த என்னை அவமதித்தாய். அதனால், இந்த துன்பம் நேர்ந்தது. இது நீங்க, தினமும் அன்னதானம் செய். அத்துடன், ஷட்திலா ஏகாதசி விரதமும் அனுஷ்டிக்க வேண்டும்...' என்றார்.அதன்படியே செய்து, சொர்க்கத்தை அடைந்தாள், அந்தப் பெண்.மாசி மாதம் தேய்பிறை ஏகாதசியே, ஷட்திலா ஏகாதசி. காலச்சுழற்சியில், இவ்வாண்டு தை மாதமே வருகிறது.இந்நாளில், சிறிது எள்ளை தண்ணீரில் கலந்தும், எள்ளை அரைத்து கிடைக்கும் பசையை, உடலில் தடவி, காலையில் குளிக்க வேண்டும். வெள்ளைத்துணியில் எள்ளை முடிந்து, நெருப்புக் குண்டத்தில் போட வேண்டும் அல்லது எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். ஏழைகளுக்கு எள் சேர்த்து சமைத்த உணவு அல்லது தனி எள் தானம் செய்ய வேண்டும். சிறிது எள்ளை சாப்பிட வேண்டும்; எள் கலந்த தண்ணீர் குடிக்க வேண்டும். மற்ற ஏகாதசி விரதங்களுக்குரிய விதிகளை அனுஷ்டிக்க வேண்டும். தேங்காய், கொய்யா ஆகியவற்றை பெருமாளுக்கு படைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த விரதத்தால் முன்னோர் ஆசி, குழந்தை பாக்கியம், செல்வ வளம் கிடைக்கும்; பரமபதத்தையும் அடையலாம்.- தி. செல்லப்பா