விசேஷம் இது வித்தியாசம்: தமிழ்க்கடவுள் என்பது ஏன்?
பிப்., 11 - தைப்பூசம்மற்ற தெய்வங்களுக்கு இல்லாத பெருமையாக, முருகனை தமிழ்க்கடவுள் என்கிறோம். ஒரு மொழியின் பெயரால், சிறப்பு பெற்றவர், முருகன். இந்த பெருமை இவருக்கு எப்படி வந்தது தெரியுமா? புராணக்கதை ஒன்று இதை விளக்குகிறது. கயிலாய மலையில், தன் துணைவியரான பார்வதி மற்றும் கங்காதேவியுடன் வீற்றிருந்தார், சிவபெருமான். அவர்கள் முன், சின்னஞ்சிறுவனான முருகப்பெருமான், சிவ கணங்களுடன் ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது, சிவனின் கழுத்திலிருந்த நீல நிற விஷ உருண்டை, அவரது கண்ணில் பட்டது. ஓடிச்சென்று, சிவனின் மடியில் ஏறி, அதைப் பிடித்து விளையாடினார், குழந்தை முருகன். இந்த காட்சி கண்டு, தேவர்களெல்லாம் பரவசத்தில் ஆழ்ந்தனர். அப்போது, முருகனின் மொழியறிவை சோதிக்க எண்ணினார், சிவன்.முருகனிடம், 'உனக்கு, உமா தேவி, கங்கா தேவி இருவரில் யாரை பிடிக்கும்?' எனக் கேட்டார், சிவன்.தமிழில் வல்லமை பெற்றவராயிற்றே, முருகன்! அவர் என்ன பதில் சொல்லப் போகிறாரோ என, அனைவருக்கும் பதட்டம். ஏனெனில், யாராவது ஒருவரை சொல்லி, இன்னொரு தேவி கோபித்துக் கொண்டால் என்னாவது என்ற காரணம் தான். ஆனால், முருகன் என்ன பதில் சொன்னார் தெரியுமா?'எனக்கு அறன் மாதாவைப் பிடிக்கும்...' என்றார், முருகன். இதுகேட்டு, இரண்டு தேவியருமே மகிழ்ச்சி கொண்டனர்.சுற்றி நின்றவர்கள் விழித்தனர்.'இருவர் பெயரில் ஒருவரைச் சொல்லாமல், மூன்றாவதாய் ஒரு பெயர் வருகிறதே... யார் அந்த தேவி?' என்று குழப்பம்.தன்னையே பிடிக்கும் என, பிள்ளை சொல்லி விட்டதாக மகிழ்ந்திருந்தாள், பார்வதி தேவி. தன்னைத் தான் சொல்கிறான் என்ற சந்தோஷத்தில் இருந்தாள், கங்கா தேவி.இருவரும் மகிழக் காரணம், அந்தச் சொல்லுக்குரிய பொருள் தான். 'அறன்' என்ற சொல்லுக்கு அறம், தர்மம் என்று பொருள். பார்வதி தேவிக்கு, அறம் வளர்த்த நாயகி, தர்ம சம்வர்த்தினி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இதனால், தன்னையே குறிப்பிட்டதாக அவள் கருதினாள். இதே சொல்லுக்கு 'தண்ணீர்' என்ற பொருளும் உண்டு. அதாவது, 'அறு' என்ற சொல்லில் இருந்து பிறந்தது, அறம். அறுக்கும் கருவியை அறம் என்பர். தன்னில் மூழ்கியவர்களின் பாவங்களை அறுப்பவள், அறன் மாதாவான கங்கா தேவி. இதனால், நீர் வடிவான தன்னையே பிடிக்கும் என, முருகன் சொன்னதாக நினைத்துக் கொண்டாள், கங்கை. 'சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா?' என்று கேட்டு அவ்வையிடம், தன் தமிழ்ப் புலமையை வெளிப்படுத்திய முருகன், தன் தாய்மார்களிடத்தும், தமிழறிவை வெளிப்படுத்தியுள்ளார்.தைப்பூச நன்னாளில், இந்த தமிழ்க்கடவுளின் அருளைப் பெறுவோம். தமிழின் பெருமையைப் போற்றுவோம்.தி. செல்லப்பா