உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம் - துரோணர் கோவில்!

'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற சொற்றொடர் யாரைக் குறித்து பிறந்தது தெரியுமா? மகாபாரதத்தில் குரு ஸ்தானத்தில் போற்றப்பட்ட துரோணாச்சாரியார் குறித்து தான்.குருகுலத்தில் படித்த போது, தன் நண்பன் துருபதன் கொடுத்த வாக்குறுதியை நம்பி ஏமாந்தவர், துரோணர்.பிற்காலத்தில், துரோணர் கஷ்டப்படும் பட்சத்தில் அவருக்கு செல்வம் வழங்குவதாக உறுதியளித்திருந்தான், துருபதன். ஆனால், மன்னனான பிறகும் அதைச் செய்யவில்லை, துருபதன். இதனால், துருபதனைப் போல, தானும் மன்னர் போல வாழ்வது என்ற உறுதியெடுத்தார், துரோணர்.பாண்டவர்களும், கவுரவர்களும் சிறுவர்களாக இருந்தபோது, ஒரு கிணற்றில் விழுந்த பூப்பந்தை எடுக்க முயற்சித்தனர். அப்போது, அவ்வழியே வந்தார், துரோணர்.'அம்பெய்து அதை எடுக்கலாமே...' என, துரோணர் அவர்களிடம் சொல்ல, 'அம்பெய்தால் பந்து சிதைந்து விடுமே...' என்றான், அவர்களில் மூத்தவனான, தர்மன்.சிரித்தார், துரோணர்.பூப்பந்தை விட மெல்லிய தர்ப்பைப்புல் அம்புகளைச் செய்தார். அவற்றில் ஒன்றை பந்தின் மேல் எய்தார்; பின், மற்ற அம்புகளை வரிசையாக அம்புகள் மேல் எய்து, கயிறு போல மாற்றினார். கைக்கு எட்டும் துாரத்துக்கு கயிறு வந்ததும், அதை இழுத்தார். பந்து மேலே வந்து விட்டது. சிறுவர்கள் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்பது இதைத்தான்.குழந்தைகளின் தாத்தா பீஷ்மருக்கு, துரோணர் பற்றி ஏற்கனவே தெரியும். அவரையே, தன் பேரன்களுக்கு குருவாக்கினார். இப்போது, துரோணர், ராஜகுருவாகி, நண்பன் துருபதனுக்கு நிகராகி விட்டார்.ஏகலைவன் என்ற இளைஞன், திறமைசாலி என்றாலும், பிறப்பு காரணமாக, அவனுக்கு துரோணரிடம் வில் வித்தை கற்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும், அந்த வித்தைகளை துாரத்தில் இருந்து கவனித்து, அர்ஜுனனை விட திறமைசாலியானான். துரோணரின் உருவத்தை சிலையாய் வடித்து, குரு வணக்கம் செய்து, பயிற்சியைத் தொடர்ந்தான். இந்த நிகழ்வின் அடிப்படையில், துரோணருக்கு 1872ம் ஆண்டில், ஹரியானா மாநிலம் குரு கிராமத்தில் (முந்தையப் பெயர் குர்கான்) கோவில் கட்டினார், சிங்கபாரத்.துரோணரின் மனைவி, சீத்தலாதேவியைத் தாயாக கருதியவர், இவர். சீத்தலாதேவிக்கு இங்கு ஏற்கனவே கோவில் இருக்கிறது. எனவே, தன் தாயின் கணவருக்கும் கோவில் கட்ட எண்ணி, நில தானம் செய்தார். இரண்டே அறைகள் கொண்ட சிறிய கோவில் கட்டப்பட்டு, துரோணர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.இந்த கோவில், இம்மாநில மக்களிடமே பிரபலமாகவில்லை. எனவே, அரசு நடவடிக்கை எடுத்து, குர்கான் என்ற ஊரின் பெயரை குருகிராம் என மாற்றியது. இந்தக் கோவிலைக் கவனித்து வருபவர்கள், கோவில் அமைந்துள்ள, சுபாஷ் நகர் என்ற பகுதியை 'குரு துரோணாச்சார்யா நகர்' என, மாற்ற முயற்சித்து வருகின்றனர்.டில்லியிலிருந்து, 40 கி.மீ., துாரத்தில் குருகிராம் உள்ளது. சுபாஷ்நகர் பஸ் நிலையம் அருகில், குறுகிய தெருவில் கோவில் உள்ளது. அருகில் சீத்தலமாதா கோவில் பெரிய அளவில் இருக்கிறது. ஹரியானா சென்றால், இந்த கோவில்களுக்குச் செல்ல தவறாதீர்கள்.- தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !