உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: பார்வதிக்கு பாடம் நடத்தியவர்!

ஜூன் 9 - வைகாசி விசாகம்ஓம் என்ற மந்திரத்தின் பொருள், தனக்கு தெரிந்திருந்தும், மகனின் மழலை மொழியால் அதை கேட்க ஆசைப்பட்டு, அவனிடம் உபதேசம் பெற்றவர், சிவன். முழங்காலிட, மகன் முருகன் அவருக்கு மந்திரப்பொருள் உரைத்த தலம், அறுபடை வீடுகளில் ஒன்றான, சுவாமிமலை. தந்தைக்கு மட்டுமல்ல, தாய் பார்வதிக்கும் முருகன் உபதேசம் செய்துள்ளார். அவரை மயிலாடுதுறை அருகிலுள்ள செம்பனார்கோவில், சுவர்ணபுரீஸ்வரர் கோவிலில் தரிசிக்கலாம்.ஒருமுறை சிவனின் சொல் கேட்காமல், அவரது மனைவி, பார்வதி, தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்கு சென்றாள். இதனால், அவள் மீது கோபமடைந்தார், சிவன். அப்போது, தன் தாய்க்கு நல்ல போதனைகளை எடுத்துச் சொன்னார், மகன் முருகன்.குடும்ப விஷயங்களில் கணவன் - மனைவி ஒற்றுமை அவசியம் என்பதை மையப்படுத்தி, இந்த போதனை அமைந்தது. இதை கேட்ட, பார்வதி, இளையவன் என்றாலும், நல்லுரைகளைத் தந்த மகனின் அறிவுரைகளை ஏற்று, அக்னியின் நடுவில் அமர்ந்து, தன் குணத்தை மாற்ற தவமிருந்தாள். செம்பொன் போல் ஆனாள்.அவ்வாறு அவள், தவமிருந்த தலம், செம்பனார் கோவில். செம்பொன்னார்கோவில் என்பதே மருவி செம்பனார் கோவில் ஆயிற்று.செம்பொன் என்றால், சுத்த தங்கம். சிவநிந்தனை செய்த பாவம் நீங்கி, கணவருடன் செம்பொன் போல் இணைந்தாள், பார்வதி. இங்குள்ள முருகன், குருவாக இருந்து அன்னைக்கு போதனை செய்ததால், கையில் அட்சர மாலையுடன் காட்சி தருகிறார்.மூலவர் சுவர்ணபுரீஸ்வரர், சுகந்த கும்பளாம்பிகையுடன் அருள்கிறார். இங்குள்ள சிவலிங்கம், பதினாறு இதழ்களையுடைய ஆவுடையாரில் நிறுவப்பட்டுள்ளது.சித்திரை அமாவாசை அன்றும், வைகாசி விசாகத்திலும் இங்குள்ள சூரிய தீர்த்த நீரை தலையில் தெளித்தால், சகல பாவ நிவர்த்தி ஏற்படும். முருகப்பெருமான் இத்தல சிவனை வழிபட்டு, தாருகாசுரனை வெல்லும் ஆற்றல் பெற்றார். எனவே, இவ்வூரை கந்தபுரி என்பர். தியானப் பயிற்சியை முதன் முதலாக துவங்குவோர், இத்தல முருகனை வணங்கி துவங்கினால், எளிதில் பயிற்சி பெற்று, பலனை முழுமையாக அடைவர்.சித்திரை 7 முதல் 18ம் தேதி வரை, 12 நாட்கள், சூரியக்கதிர்கள், மூலவர் மீது படும். இந்த, 12 நாட்களிலும், 'சவுர மகோற்சவம்' எனும் விழா கொண்டாடப்படும். சவுரம், என்பது சூரியனை குறிக்கும்.மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில், 8 கி.மீ., துாரத்தில், செம்பனார் கோவில் உள்ளது.தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !