உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: வெள்ளி நாக்கு காணிக்கை!

அக்., 01 - சரஸ்வதி பூஜைசில குழந்தைகள் நன்றாகப் படிப்பர். ஆனால், பேச்சுத்திறன் குறைவாக இருக்கும். சிலருக்கு திக்குவாய் அமையும். இப்படி பேச்சுத்திறன் குறைவாக உள்ளவர்கள், திறமையாக பேச, ராஜஸ்தான் மாநிலம், சிகோரி மாவட்டம், அஜாரி கிராமத்திலுள்ள சரஸ்வதி மாதா கோவிலில் வழிபாடு நடக்கிறது. பிரார்த்தனை பலித்தவுடன், சரஸ்வதி தாய்க்கு வெள்ளியில் செய்த நாக்குகளை காணிக்கையாக அளிக்கின்றனர். மார்க்கண்டேய மகரிஷிக்கு இளமையிலேயே மரணம் என, விதி இருந்தது. அவரது, 16வது வயதில் மார்க்கண்டேயரை துரத்தினார், எமதர்மராஜன். சிவ பக்தரான மார்க்கண்டேயர், சிவனை சரணடைந்தார். சிவனருளால், எமதர்மனின் பிடியிலிருந்து தப்பி, சிரஞ்சீவி எனும் பிறப்பு, இறப்பில்லா நிலையை அடைந்தார். அவரது வேண்டுதலின்படி, அவ்விடத்திலேயே தங்கினார், சிவன். அவருக்கு மார்க்கண்டேயரின் பெயரையே சூட்டி, மார்க்கண்டேஸ்வரர் என அழைத்தனர், பக்தர்கள். இந்த சம்பவம் நிகழ்ந்தது, அஜாரி என்ற இடத்தில் என்கின்றனர், பக்தர்கள். மார்க்கண்டேஸ்வரரை வழிபட்டால், முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரம்மாவின் துணைவியான சரஸ்வதியும் இங்கு இருந்தாள். சிவனை விட, சரஸ்வதிக்கே முக்கியத்துவம் பெருகியது. சரஸ்வதி குடி கொண்ட இந்த ஊருக்கு, அஜாரி என்ற பெயர் வந்த காரணம் சுவையானது. இது ஒரு ஜப்பானிய சொல். ஜப்பான் மொழியில், அஜாரி என்றால், மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் மூத்த ஆசிரியர் எனப் பொருள். உலக மக்களுக்கே கல்வியை அளிப்பவள், சரஸ்வதி. இந்த வகையில், சரஸ்வதி கோவில் கொண்ட இந்த ஊருக்கு அஜாரி என்ற பெயர், மிகப் பொருத்தமாக உள்ளது. சமஸ்கிருதத்தில் புலமை பெற, இத்தலத்து சரஸ்வதியை வழிபட்டுள்ளார், மகாகவி காளிதாசர். இந்த சரஸ்வதியை வழிபட்டே, பல மொழிகளை கற்கும் வல்லமையைப் பெற்றார், சமண மத துறவியான, சாந்தி சூரி. இதையடுத்து, பல மொழி அறிவு பெற விரும்புவோர், இத்தலத்து சரஸ்வதிக்கு சிறப்பு பூஜை செய்யும் வழிபாடு துவங்கியது. இந்த பூஜைக்காக புத்தகங்கள், பேனா, பென்சில் ஆகியவற்றை காணிக்கையாக வழங்குகின்றனர். இது, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப் படுகிறது. பேச்சுத்திறமை பெற வேண்டி பிரார்த்தனை பலித்தவர்கள், வெள்ளி நாக்குகளை அளிக்கின்றனர். வெள்ளி வாங்க வசதி இல்லாதவர்கள், வெள்ளை நிற உலோகங்களால் ஆன சாதாரண நாக்குகளை காணிக்கை செலுத்துகின்றனர். சென்னை- - ஜோத்பூர் ரயிலில் சென்றால், பிந்த்வாரா ஸ்டேஷனில் இறங்கலாம். இங்கிருந்து, அஜாரி கோவிலுக்கு, 8 கி.மீ., துாரம் உள்ளது. ஆமதாபாத் வழியாக வேறு ரயிலிலும் செல்லலாம். உதய்ப்பூருக்கு விமானத்தில் சென்று, 96 கி.மீ., கடந்தாலும் அஜாரியை அடையலாம். தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !