உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை!

இறைவனை வழிபட எத்தனையோ திருவிழாக்களை கொண்டாடுகின்றனர். இதில், மிக வித்தியாசமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை அளிக்கும் வகையில், சிவபெருமானே உருவாக்கித் தந்த விழா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இத்திருவிழாவின் பெயர், 'முடவன் முழுக்கு!' பஞ்சாங்கத்தில், கார்த்திகை மாதம் முதல்நாளில், முடவன் முழுக்கு என, குறித்திருப்பதை பார்த்திருக்கலாம். அதென்ன, முடவன் முழுக்கு? காவிரிக்கரையோர மக்களுக்கு இதன் பெருமை தெரியும். இந்த புண்ணிய நதியின் கரையில் மாயூரம், மாயவரம் என பெயர் பெற்று, தற்போது மயிலாடுதுறையாக மாறி விட்ட புகழ் பெற்ற நகரம் உள்ளது. இங்கு, மாயூரநாத சுவாமி கோவில் உள்ளது. இவ்வூரிலுள்ள காவிரியில், ஐப்பசி மாதம் கடைசி நாள் நீராடி, மாயூரநாதரை வழிபட்டால், முக்தி என்னும் பிறப்பற்ற நிலை கிடைக்கும். இந்நாளை, கடைமுழுக்கு என்பர். இதற்காக திருவையாறை சேர்ந்த, நாதசர்மாவும், அவரது துணைவி அனவித்யாம்பிகையும் மாயவரம் வந்தனர். அவர்கள் வருவதற்குள் புனித நீராடல் நேரம் கடந்து விட்டது. இதே நாளில், கால்கள் வளைந்த நிலையிலுள்ள ஒருவரும், நேரம் கடந்து நீராட வந்தார். இதனால், மனம் வருந்திய அவர்கள் சிவனை வேண்டினர். அவர்களுக்கு காட்சியளித்து கார்த்திகை முதல்நாளும், காவிரியில் புனித நீராட நேரத்தை அதிகரித்து கொடுத்தார், சிவன். கால்கள் வளைந்து நடக்க சிரமப்படுபவர் களை, முடவன் என, சொல்லும் வழக்கம் முன்பு இருந்தது. இதனால், இந்த நிகழ்ச்சிக்கு, 'முடவன் முழுக்கு' என, பெயர் சூட்டப்பட்டது. முக்தி பெற்ற சர்மாவும், அனவித்யாம்பிகையும் சிவலிங்க வடிவம் பெற்றனர். இவர்களில், அனவித்யாம்பிகா லிங்கத்துக்கு சேலை அணிவிக்கப்படும் என்பது விசேஷ தகவல். இந்த நாள் மாற்றுத்திறனாளிகளுக்கு மரியாதை செய்யும் வகையில் கொண்டாடப்படுகிறது. அது மட்டுமல்ல. இந்த நாளில் உலகிலுள்ள, 66 கோடி தீர்த்த தேவதைகளும் காவிரியில் நீராட வருகின்றனர். இந்த தீர்த்தங்களை நான்கு வகையாகப் பிரிப்பர். தர்மராதி பிரதா தீர்த்தங்களில் நீராடினால், வாழ்வில் ஒழுக்கத்தை கடைபிடிக்கும் பக்குவம் வரும். ஞானப்பிரதா தீர்த்தங்கள், எது நல்லதோ அதை அறியும் ஞானத்தை மனிதர்களுக்கு தரும். பக்தி வைராக்ய பிரதா தீர்த்தங்கள், குடும்ப வாழ்வில் இருந்து விலகி, பக்தி மார்க்கத்திற்கு இழுத்துச் செல்லும். இவை அனைத்திலும் நீராடி, 'இந்த உலக வாழ்வு தற்காலிகமானது, இறைவனுடன் ஐக்கியமாவதே நிரந்தரம்...' என்ற மனப்பக்குவத்தை, முக்தி பிரதா தீர்த்தங்கள் கொடுக்கும். பிரதா என்றால் பாரம்பரியம், அந்தஸ்து என பொருள். இதனால் தான், பாரதத்தின் புண்ணிய தலங்களில் புஷ்கரம், மகாமகம், முடவன் முழுக்கு உள்ளிட்ட புனித தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த புனித குளி யலுக்கு இன்றே புறப்படலாமா! தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !