உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: நடக்காததும், நடக்க வேண்டுமா?

டிச., 14 - ஆதித்ய ஹஸ்தம்'இனி இந்த காரியம் நடக்கவே நடக்காது, இந்தப் பொருள் கிடைக்கவே கிடைக்காது. அவ்வளவு தான், முடிந்து விட்டது...' என்று கை விட்டதெல்லாம், கை கூட வேண்டுமென்றால், ஒரு குறிப்பிட்ட நாளைத் தேர்வு செய்து, சூரிய பகவானையும், குல தெய்வத்தையும் வழிபட வேண்டும். அப்படிப்பட்ட அரிய நாட்களில் ஒன்று தான், ஆதித்ய ஹஸ்தம். அலப்ய யோக தினம் என, குறிப்பிட்ட நாட்கள் எப்போதாவது வரும். இது எப்போது வரும் என்றால், சூரியன் தனக்குரிய திதியான சப்தமியிலோ, தனக்கு பிடித்த நட்சத்திரமான ஹஸ்தத்திலோ, அவருக்குரிய ஞாயிற்றுக்கிழமை அன்றோ இருக்க வேண்டும். சூரியனுக்கு பானு, ஆதித்யன் போன்ற, பெயர்கள் உண்டு. திதியுடன் இணைந்திருந்தால், பானு சப்தமி என்பர். நட்சத்திரத்துடன் இணைந்திருந்தால், ஆதித்ய ஹஸ்தம் என்பர். ஹஸ்தம் என்றால் கைகள். சூரியனுக்குரிய கைகள், அதன் ஒளிக்கிரணங்கள் தான். இந்த நாளில் தான், நடக்கவே நடக்காது, கிடைக்கவே கிடைக்காது என, கை விட்டுப் போன காரியங்கள் நிறைவேற, சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரியனை வணங்குவதற்குரிய முக்கிய ஸ்லோகம், ஆதித்ய ஹ்ருதயம். இது, ராமபிரானுக்கு, அகத்தியர் போதித்தது. துளசி ராமாயணத்தில், ராவண வத காட்சியை அழகாக சொல்லியிருப்பார், துளசிதாசர். 'ராவணன் மீது எத்தனை பாணங்களை எய்தாலும், எழுந்து விடுகிறான். அவன் அழிவது சாத்தியமே இல்லை...' என, ராமபிரான் மனமொடிந்து நம்பிக்கை இழந்திருந்த நேரத்தில், அகத்தியர் வந்தார். 'குலதெய்வ வழிபாடு செய்யாமல், எந்த முயற்சியும் வெற்றி பெறாது. நீ, ரகு--சூரிய குலத்தில் பிறந்தவன். எனவே, உன் குலதெய்வமான சூரியனை நான் உபதேசிக்கும் ஸ்லோகத்தை சொல்லி வழிபடு...' என்றார். அந்த ஸ்லோகங்களின் தொகுப்பு தான், ஆதித்ய ஹ்ருதயம். ராமன், இந்த ஸ்லோகத்தை சொல்லி முடிக்கவும், ராவணனின் தம்பி விபீஷணன் வந்தான். 'ராமா! நீ என் அண்ணனைக் கொல்வது சாத்தியமல்ல. ஏனெனில், அவன் உன் பத்தினியும், லட்சுமி தாயாரின் அவதாரமும் ஆன, சீதையை மனதில் நினைத்திருக்கிறான். அந்த நினைவு அவன் அடி வயிற்றில் இருந்து, இதயத்திற்கு செல்கிறது. தாயாரை தவறாகவே மனதில் நினைத்தாலும், அவருக்கு நன்மை தானே நடக்கும். எனவே, தாயாரின் நினைவை அவன் மனதை விட்டு அகற்று...' என்றான். புரிந்து கொண்டார், ராமன். ராவணனின் அடி வயிற்றை நோக்கி அம்புகளை எய்தார். வலி தாங்காத ராவணன், ஒரு கணம், தாயாரை மறந்தான். அதைப் பயன்படுத்தி, பத்து தலைகளையும் அம்புகளைப் பாய்ச்சி அறுத்தெறிந்தார். முடியாது என, நினைத்தது சுபமாக முடிந்தது. வரும், 14ம் தேதி, ஞாயிறு அன்று, ஹஸ்த நட்சத்திரம் இணைகிறது. இந்த ஆதித்ய ஹஸ்த நாளில், அனைவரும் ஆதித்ய ஹ்ருதயம் மற்றும் துர்க்கை, காளி, பைரவர் உள்ளிட்ட உக்கிர தேவதை ஸ்லோகங்களைச் சொல்லி, குலதெய்வம் கோவிலுக்கும் சென்று வழிபட்டால் நடக்காததும் நடக்கும். - தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !