உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: சீதையின் பரிசை நொறுக்கி எறிந்தவர்!

சீதையின் பரிசை நொறுக்கி எறிந்தவர்! டிச.,19 - அனுமன் ஜெயந்தி சீ தாராமரின் தீவிர பக்தர், சீதையை இலங்கையிலிருந்து மீட்க பெரும்பங்கு வகித்தவர் யாரெனக் கேட்டால் குழந்தையும் சொல்லும், அனுமன் என்று! தன்னை மீட்க உதவிய அனைவருக்கும், ராமர் பட்டாபிஷேகத்தின் போது பரிசுகளை வழங்கினாள், சீதா. அனுமனுக்கு ஒரு ரத்தின மணி மாலையை பரிசளித்தாள். அது, சாதாரண மாலையல்ல. வருணனால், ராவணனுக்கு பரிசாக அளிக்கப்பட்டது. அதை, ராவணனின் தம்பி விபீஷணர், சீதைக்கு பரிசாகக் கொடுத்தார். அதை, அனுமனுக்கு பரிசாக கொடுத்தாள், சீதா. அதை கையில் வாங்கினார், அனுமன். ஒவ்வொரு மணியாக ஆய்வு செய்து பார்த்தார். திருப்பித் திருப்பி கவனமாக ஆராய்ந்தார். அவ்வளவு தான், வந்ததே கோபம். ஒவ்வொரு மணியாக நொறுக்கி எறிந்தார். சிலவற்றை வாயில் போட்டு பற்களால் கடித்து நொறுக்கினார். இதைப் பார்த்த சபையினர் அதிர்ச்சிக்குள்ளாயினர். 'சீதையின் கையால் பரிசு பெறுவது எவ்வளவு பாக்கியம். பூஜைக்குரிய அந்தப் பரிசை இப்படி செய்து விட்டானே இந்த வானரன்...' என கொதித்தனர். புத்திசாலியான, அனுமன் இப்படி செய்வார் என சற்றும் எதிர்பார்க்காத, விபீஷணர், ரொம்பவே வருத்தப்பட்டார். அழகான ஒரு மாலையை இந்த, வானரன் நொறுக்கி விட்டான் என, தனக்குள் சொல்லிக் கொண்டார். மற்ற அரசர்களுக்கும், அனுமனிடம் கேள்வி கேட்க துணிவில்லை. இருந்தாலும், அவர்களது முகத்தில் பெரும் அதிருப்தி தென்பட்டது. அனுமனிடம், 'சீதாபிராட்டி தந்த பரிசை ஏன் அழித்தீர். நீர், பிராட்டியை அவமதித்து விட்டீர். இதற்கு நீர் விளக்கம் தந்தே தீர வேண்டும்...' என, ஒரு சிற்றரசர் மட்டும் தைரியமாகக் கேட்டார். அவரிடம், 'நான் இந்த கற்களில், ராமநாமம் பொறிக்கப்பட்டிருக்கிறதா என சுற்றி சுற்றி ஆய்வு செய்து பார்த்தேன். கடுகளவில் கூட, அது பொறிக்கப்படவில்லை. ராமநாமம் இல்லாத பொருளால் எனக்கென்ன பயன்? எனவே, அதை நொறுக்கி விட்டேன்...' என்றார், அனுமன். அனுமனின் பக்தியைக் கண்டு சிலிர்த்துப் போன ராமன், 'ஆஞ்சநேயா! உனக்கு தர தகுதியான பரிசு என்னிடம் ஏதுமில்லை. எனவே, என்னையே பரிசாகப் பெற்றுக் கொள்...' என்றவாறே, அனுமனின் கைகளில் படுத்தார். இந்தக் காட்சியைக் கண்டு சிலிர்த்து நின்றனர், அவையோர். அனுமனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவரது கண்களில் மட்டும் தானா... நம் கண்களிலும் கண்ணீர் துளிர்க்கத்தானே செய்கிறது! தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !