உள்ளூர் செய்திகள்

விசேஷம் இது வித்தியாசம்: மகாபலி நல்லவனாக வளர்ந்தது எப்படி?

ஆக., 26 - ஓணம் அசுர குலத்தினரில் ஒரு சிலரை தவிர, மற்றவர்கள் நல்லவர்களாக இருப்பதில்லை. இவர்களது வம்சத்தை, தைத்தியர்கள் என்பர். திதி என்ற தாய்க்கு பிறந்ததால், அவளது பெயரால், தைத்தியர் என்ற பெயர் ஏற்பட்டது. தாயின் குணம் மோசம் என்றால், பிள்ளைகள் எப்படி வளர்வர் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.காஷ்யபர் என்ற முனிவருக்கு அதிதி, திதி என்ற இரண்டு துணைவியர். அதிதியின் பிள்ளைகள் தன் தாய், தந்தையைப் போல நற்குணத்துடன் வளர்ந்து, அமிர்தம் பெற்று சாகாவரம் பெற்றனர். இது கண்டு, திதிக்கு பொறாமை.'நீங்களும் அமிர்தம் பெற்று அமரத்துவம் என்னும் சாகாவரம் பெறுங்கள்...' என, பிள்ளைகளைத் துாண்டி விட்டாள், திதி. ஆனால், அமரத்துவம் பெறுவதற்கான அடிப்படை குணங்களைக் கற்றுக் கொடுக்கவில்லை. தந்தை காஷ்யபரின் அறிவுரையையும் ஏற்கவில்லை, பிள்ளைகள். இதற்கு காரணமும், திதி தான். கணவனின் சொல்லை மீறி, பிள்ளைகளைக் கட்டுப்பாடின்றி வளர்த்தாள். விளைவு, அவர்கள் அசுர குணங்களுடன் வளர்ந்து, அசுரர்கள் என்றே பெயர் பெற்று விட்டனர். ஆனால், சேற்றில் முளைத்த செந்தாமரையாக அசுர குலத்தில் பிறந்தான், பிரகலாதன்.இவன், திதிக்குப் பிறந்த, இரண்யகசிபு என்ற அசுரனின் மகன். திருமாலை தன் தெய்வமாக ஏற்றவன். எப்போதும், அவன் வாயில், 'நாராயணா' என்ற திருநாமமே ஒலிக்கும். இது, இரண்யனுகசிபுவுக்குப் பிடிக்கவில்லை. தன்னையே தெய்வமாக அறிவித்தான். இதை கண்டு கொள்ளாமல், இறுதி வரை நாராயணனையே வணங்கி வந்தான், பிரகலாதன்.தன் தந்தை, நரசிம்ம அவதாரம் எடுத்த, திருமாலால் கொல்லப்பட்ட பிறகு, அரசனானான், பிரகலாதன். அவனுக்கு, விரோசனன் என்ற மகன் பிறந்தான். விரோசனனின் பிள்ளை, மகாபலி. அதாவது, பிரகலாதனின் பேரன். தன் பேரனை நற்குணங்களுடனும், பக்தி மார்க்கத்திலும் வழி நடத்தினான், பிரகலாதன். எனவே, தாத்தாவின் நல்ல குணங்கள் அனைத்தும் பேரனை ஒட்டிக் கொண்டது. அவன் அரசப்பொறுப்பு ஏற்றதும், நாட்டு மக்களை கண் போல பாதுகாத்தான். வாக்கை காப்பாற்றுவதில் அவனுக்கு நிகர் அவனே.திருமால், வாமனராக வந்து மாணவர்களுக்கு வேதம் கற்றுத்தர, மூன்றடி நிலம் தர முடியுமா என்று கேட்டார். தருவதாக வாக்களித்து விட்டான், மகாபலி. ஆனால், அதைத் தடுத்தார், அவனது குரு, சுக்ராச்சாரியார்.'கொடுத்த வாக்கை காத்தே தீருவேன்... என்ற மகாபலி, தன் தலையையே கொடுத்து வாக்கைக் காத்தான். 'என் தலையை அடமானம் வைத்தாவது, உன் கடனை அடைத்து விடுகிறேன்...' என்று சொல்லும் வழக்கு, இதிலிருந்து தான் பிறந்தது.குழந்தைகளை நல்ல குணங்களுடன் வளர்க்க வேண்டும் என்பது தான், ஓணம் நாயகன் மகாபலியின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !