எது பெருமை?
''ஏய்... இவனெல்லாம் என்னப்பா பெரிய பணக்காரன்! எல்லாம் சேர்த்து ஒரு பத்து லட்சம் தேறுமா? இதெல்லாம் ஒரு பணமா?''சவரன் பதினைஞ்சு ரூபாய்க்கு விற்ற காலத்துலயே, என் முப்பாட்டன் ஆஸ்தி மூணு லட்சம், இப்பவும் வயசுல பெரியவங்கள விசாரிச்சுப் பாரு... கதை, கதையாய்ச் சொல்லுவாங்க. பேச வந்துட்டிங்க, பொல்லாத பேச்சு...'' என்று, எரிச்சலாக வார்த்தைகளைத் துப்பினான், மாரிமுத்து.நண்பர்கள் வட்டத்தில் அமைதி ஏற்பட்டது.அவர்கள், சமீபத்தில் மலேஷியா சென்றிருந்த சுப்ரமணியத்தின் குடும்பத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.வெகு சாதாரணக் குடும்பம். ஐ.டி.ஐ., படித்து, பக்கத்து டவுனில் சிறிய கடை எடுத்து ரேடியோ, 'டிவி' பழுது பார்த்துக் கொண்டிருந்தான், சுப்ரமணியன்; கடும் உழைப்பாளி. அதிர்ஷ்டவசமாக ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்து, மலேஷியாவில் நல்ல வேலை; நல்ல சம்பளம்.மாதா, மாதம் கணிசமான தொகையை ஊருக்கு அனுப்பிக் கொண்டிருந்தான். குடும்பமும் அக்கறையுடன் அந்தப் பணத்தை தோட்டம், நஞ்சை, புஞ்சைகளில் முதலீடு செய்து பெருக்கிக் கொண்டிருந்தது.அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது தான் கோபம் வந்து விட்டது மாரிமுத்துவுக்கு. குறுக்கிட்டு, பேசியவர்கள் வாயை அடைக்கப் பார்த்தான்; ஆனால், பிறரின் பரிகாசத்துக்கு ஆளானது தான் மிச்சம்.''இன்னும் எத்தனை காலத்துக்குத் தான், உன் முப்பாட்டன் காலத்துப் பெருமையை பேசிகிட்டிருப்ப. முப்பது வருஷமா பேசிகிட்டுத் திரியறயே... வாய் வலிக்கலையா? கேட்டுக் கேட்டு எங்களுக்கு பாதி காது செவிடாப் போச்சேடா,'' என்றான், நண்பன் ஒருவன்.''பழைய நினைப்புடா பேராண்டி, பழைய நினைப்புடா,'' என, பாடினான், இன்னொரு நண்பன் ஆறுமுகம்.''முப்பாட்டன் வச்சிருந்தது, மூணு லட்சம் ரூபாய். பாட்டன் காலத்துல அது மூவாயிரமாச்சு. உங்க அப்பா காலத்துல முன்னுாறாகி, உனக்கு வந்து சேர்ந்தது மூணு ரூபாய்.''ஒரு ரூபாய்க்கு வீடு கட்டி, ஒரு ரூபாய்க்கு கல்யாணம் கட்டி, மிச்சம் ஒரு ரூபாயில வாழ்க்கைய ஓட்டிகிட்டிருக்கே. இதைப் பெருமையா வேற சொல்லிக்கிற பாரு.''ஊர்ல எல்லாம் பூமியிலிருந்து ராக்கெட் வுடுவான். அது வானத்துக்குப் போகும். உங்க முப்பாட்டன் ராக்கெட்டை தலைகீழாய் வுட்டாரு போல. எல்லாம் பூமிக்குள்ள போயிருச்சு...'' என்று கலாய்த்தான், மற்றொரு நண்பன்.சடக்கென்று எழுந்து, துண்டை உதறித் தோளில் போட்டு, விருட்டென்று கிளம்பி விட்டான், மாரிமுத்து. திடுக்கிட்ட ரவிச்சந்திரன், எழுந்துப் போய் மாரிமுத்துவைத் தடுத்தான்.''ஏன், மாரிமுத்து கோவிச்சுகிட்டியா? நண்பர்கள் சும்மா தமாஷ் பண்ணினாங்க. இப்படி நமக்குள்ள ஒருவரையொருவர் கால் வாரிக்கிறது சகஜம் தானே! கொஞ்சம் முன்பு, என்னையும், நான் பார்க்கிற ஹோட்டல் சமையல் வேலையையும் கூட எல்லாரும் கிண்டல் பண்ணிச் சிரிக்கலையா! டேக் இட் ஈஸி...''ஒரு வருஷம் கழிச்சு ஊருக்கு வந்திருக்கேன். இரண்டு நாள் ஆச்சு. நாளைக்கு ஊருக்குப் போயிடப் போறேன். அடுத்து எப்போ ஊருக்கு வருவேனோ...''பழைய நண்பர்கள், பழகிய நண்பர்கள்ன்னு நாலு பேர், 'கெட் டு கெதர்' மாதிரி இந்த ஆற்றங்கரையில் உட்கார்ந்து சந்தோஷமாய் பழைய நினைவுகளைப் பகிர்ந்துகிட்டிருக்கோம். நீ இப்படி பாதியில போறது சரியா? பேச்சு உன்னைப் புண்படுத்தியிருந்தால், அவர்கள் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். சபைக்குத் திரும்பு,'' என்றதும், திரும்ப வந்து அமர்ந்தான், மாரிமுத்து.மாரிமுத்துவை சமாதானப்படுத்தும் வகையில், அவன் டம்ளரில், 'சரக்கு' அதிகம் ஊற்றப்பட்டது. ஒரு பிடி காரா பூந்தியும் சலுகையாக கொடுக்கப்பட்டது.ஒரே மூச்சில் டம்ளரை காலி பண்ணி விட்டு, ''இவங்கெல்லாம் ஒண்ணு சொல்லிட்டாங்கன்னு எனக்கு வருத்தமில்லை. நண்பர்களாய் இருந்துகிட்டும் என்னை சரியா புரிஞ்சிக்கலையேன்னு தான் கோபம்.''என்னைப் போல ‚ பணக்கார பரம்பரைல வந்தவங்க இந்த ஊர்ல எவனும் கிடையாது. இப்போ தன்னைப் பணக்காரன்னு சொல்லிக்கறவங்க எல்லாரும், என் பாட்டன் பண்ணைல கூலி வேலை பார்த்தவங்கதான்.''எனக்குத் தெரிஞ்சு, எங்க அப்பாவுக்குக் கை கட்டி வேலை செய்ஞ்சுகிட்டிருந்த ஆள் தான், சுப்ரமணியோட அப்பனும், ஆத்தாளும். அப்படியிருக்கும் போது என்னை மட்டம் தட்டி, அவனை உசத்திப் பேசினால், கோபம் வராதா...''ராத்திரியில நம்ம கண்ணுக்கு சூரியன் தெரியலைங்கறதுக்காக, அது இல்லேன்னு ஆயிடுமா. இன்னைக்கு என் பாட்டன், முப்பாட்டன், அப்பன் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், அவங்க வாழ்ந்த வாழ்க்கை இல்லேன்னு ஆயிருமா?''எங்கப்பா வேட்டியிலிருந்து சிந்தின பணத்துக்கு இணையாகுமா, அந்த சுப்ரமணி சொத்து... நீ சொல்லு ரவி,'' என்று, மாரிமுத்து தொடர்ந்து பேசவும், கடுப்பாகிப் போன சக நண்பர்கள், ரவிச்சந்திரனை முறைத்தனர்.''அவன் தான் போய்த் தொலையறேன்னு சொன்னானே... விட்டுத் தொலையாம இழுத்து வச்சு, எங்களையெல்லாம் இம்சை பண்றயாடா. பொழுது விடிஞ்சால், நீ புறப்பட்டுப் போயிடுவே.''வருஷத்துக்கு ஒருநாள் வந்துட்டுப் போறதால, இவன் பேச்சு உனக்கு வேடிக்கை; வருஷம் பூராவும் கேட்டுக் கேட்டு சலிக்கறது, எங்கள் வாடிக்கை. ஒரு சராசரி மனுஷனான இவன்கிட்ட பேச முடியுமாடா? பரதேசி... இவன் சம்சாரம் கூலி வேலை செய்ஞ்சு குடும்பத்துக்குச் சோறு போடுது பாவம்.''இவன் வயனமா தின்னுகிட்டு, ரிஷி மாதிரி தாடியும், அரை வேட்டியும் கட்டிகிட்டு ஊர் திரியறான். 'வாடா... எதனா வேலைல உட்கார்த்தறம். உழைச்சு நாலு காசு சம்பாதிச்சு குடும்பத்துக்கு கொடுடா...'ன்னா...''இவன், 'என் முன்னோர் வாழ்ந்த வாழ்வென்ன... இருந்த இருப்பென்ன... அவங்க வம்சத்துல வந்த நான் கேவலம் அஞ்சு, பத்துக்கு கை கட்டி ஒருத்தன் முன்னால நிக்கறதா... அதுக்கு நாண்டுகிட்டுச் சாகலாம்'ன்னு சொல்வான்.''அதையாவது செய்யறானான்னா... அதுவும் இல்லை. இவனுக்குப் போய் நீ சப்போர்ட் பண்ணிகிட்டு,'' என்று நண்பன் ஒருவன் சொல்லச் சொல்ல, ரவிச்சந்திரனுக்கு, வேதனையாகி விட்டது.ரவிச்சந்திரனுக்கு மட்டுமல்ல; இப்போது மாரிமுத்துவிடம் வம்பு பண்ணிக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் தெரியும். மாரிமுத்து சொல்வது எதுவும் பொய் இல்லை. பணக்கார வம்சம் தான் அவனுடையது.படிக்கும் நாளில் மாரிமுத்து கூட, வில் வண்டியில் தான் பள்ளிக்கு வந்தான். அவன் போட்டு வந்த சட்டை, செருப்பு, புத்தகப் பை என, எல்லாமே புதுசு, விலை உயர்ந்தது. 'இன்டர்வெல்'லில் மாரிமுத்துவைச் சுற்றிதான் பையன்கள் திரிவர்; அவன் வாங்கித் தரும் தின்பண்டத்துக்காக. அவனும் சளைக்காமல் வாங்கிக் கொடுத்திருக்கிறான்.எல்லாம் மாயமாகி விட்டது ஒருநாளில்.மாரிமுத்து தலையெடுக்கும் போது அவன் குடும்பம், காலிப் பெருங்காய டப்பா ஆகிவிட்டது. சொத்துக்களை இழந்த சோகத்தில் காலமாகி விட்டார், அவன் அப்பா.மீதமிருந்த ஒன்றிரண்டு காணிகளை அடகு வைத்தும், விற்றும், அவனது கல்யாணம் வரைக்கும் தாக்குப் பிடித்தாயிற்று. பிறகு வெறுமையும், வறுமையும் தான்.அப்போதே மாரிமுத்து மயக்கம் கலைந்து, ஏதாவது வேலைத் தேடி சம்பாதிக்கத் துவங்கியிருந்தால், ஓரளவுக்கு சுதாரித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், அவனுள் ஆழப் புதைந்து போன சில விஷயங்கள், அவனை அவ்வாறு செயல்பட விடவில்லை.இன்னமும், தான் ஒரு செல்வச் சீமான் வீட்டு வாரிசு. எட்டு திக்கும் பட்டொளி வீசிப் பறக்குது, நம் குலப் பெருமை. அதற்கு இழுக்கு வருவதுபோல் நாம் நடந்து விடக்கூடாது என்ற எண்ணம் பீடித்துக் கொண்டது அவனை. நண்பர்களும், நல்ல மனசு கொண்டவர்களும், அவ்வப்போது சில உதவிகள் செய்து வந்தனர்.இவர்கள் எல்லாம் தனக்குச் செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பது போல, மாரிமுத்து நினைக்கத் துவங்கியது தான், விபரீதத்தின் உச்ச கட்டம். இதேநிலை நீடித்தால், மாரிமுத்து ஒருநாள் உண்மையாகவே முழு பைத்தியமாகி விடக்கூடும் என யூகித்தான், ரவிச்சந்திரன். போதை தெளிந்த பின், மாரிமுத்துவிடம் தெளிவாகப் பேசிவிடுவது என்று தீர்மானித்தான்.மறுநாள் காலை மாரிமுத்துவைத் தேடி போனான், ரவிச்சந்திரன். ''மாரிமுத்து... நான் ஊருக்கு கிளம்பறேன்,'' என்றான், ரவிச்சந்திரன்.சோம்பலாய் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்திருந்த மாரிமுத்து நிமிர்ந்து உட்கார்ந்து, ''மறுபடி அடுத்த வருஷம் தானா?'' என்று கேட்டான்.''அவசியத்தைப் பொறுத்து... இடையிலும் வரலாம்; இரண்டு வருஷம் கூட ஆகலாம்...''''என்னமோப்பா... நீ வரும் போது தான் கொஞ்சம் ஆறுதலாயிருக்கு. இங்குள்ளவங்கெல்லாம் முன்ன மாதிரி இல்லே. எங்க அப்பா காலத்ல...''''மாரிமுத்து... ப்ளீஸ். உன் அப்பா பத்தியும், தாத்தா, பாட்டன், பூட்டன் பத்தியும் நீ புதுசா சொல்லி எனக்கு தெரிய வேண்டுமா! நான் ஒரு கேள்வி மட்டும் கேட்கறேன். முன்னோர் பெருமை பத்திப் பேசியே உன் ஆயுள் முடிஞ்சு போகும்.''உனக்கு அடுத்து உன் சந்ததி, உன்னைப் பத்தியும் பெருமையாய் பேசணும்ன்னு உனக்குத் தோணலியா? அப்படிப் பெருமையாய்ப் பேச என்ன செய்திருக்கே நீ? வீட்டுக்காவது பயனுள்ளவனாய் இருக்கணும். இல்ல, நாட்டுக்காவது பயனுள்ளவனாய் இருக்கணும்.''மனுஷனா பிறந்தால் ஏதேனும் அடையாளம் விட்டுட்டுப் போக வேணாமா, வாழ்ந்து போனதுக்கு அடையாளம் வேணாமா? 'இது என் அப்பா சம்பாதிச்சுக் கொடுத்த வீடு, இது என் அப்பா கொடுத்த செல்வம், எங்க அப்பா இந்த சாதனையைச் செய்தார், அந்த நல்ல காரியத்தை செய்தது என் அப்பா...' அப்படின்னு உன் பிள்ளைகள் சொல்லிக்கற மாதிரி ஏதாவது ஒண்ணைச் செய்யக் கூடாதா?''காலம் முழுசும் பழம்பெருமை பேசியே வாழ்ந்தவர் எங்க அப்பான்னு அவங்களால பெருமை பட்டுக்க முடியுமா... சொல்லு. போதும் மாரிமுத்து... நீ சொல்லிச் சொல்லி உங்கள் தலைமுறைப் பெருமை நீர்த்துப் போச்சு.''நாமளே நம்மை புகழ்ந்துக்கறது அல்ல பெருமை; நாலு பேர் சொல்லணும், புகழணும். இதை மனசுல வை. இதைச் செய், அதைச் செய்ன்னு உனக்கு நான் அறிவுரை சொல்லப் போறதில்லை; ஆனால், எதையாவது செய்டா.''நண்பர்களே உன்னை கேலி பண்றதைப் பார்க்க வேதனையாயிருக்கு தெரியுமா? அடுத்து எப்போ ஊருக்கு வர்றேன்னு கேட்டேல்ல. நீ மாறிட்டே, உன் சொந்தக் கால்ல நிக்கற அளவு உருப்படியா உழைக்க ஆரம்பிச்சிட்டேன்னு என்னைக்கு என் காதுக்கு சேதி வருதோ... அன்னைக்கு வரேன்டா உன்னைப் பார்க்க...'' என, ‚ நண்பனின் கைகளைப் பற்றி சொல்லிவிட்டு விடை பெற்றான், ரவிச்சந்திரன்.ஓராண்டு ஓடியிருந்தது...ரவிசந்திரன் வேலை பார்த்த ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சி. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. 100 பேருக்கு, 'பபே' உணவு, ரவிச்சந்திரன் தலைமையில் தயாராயிற்று. தேநீர் விநியோகத்துடன், 6:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. ஹோட்டல், நகரின் மையத்தில் சகல வசதிகளுடன் அமைந்திருந்ததால், தினமும் பல்வேறுபட்ட நிகழ்ச்சி அங்கு நடந்து கொண்டிருக்கும். அது போல் இதுவும் ஒன்று என்று தான் நினைத்தான், ரவிச்சந்திரன்.அச்சமயம், அங்கு வந்த நண்பன் ஆறுமுகத்தை பார்த்து, ''ஆறு... எங்கே ரொம்ப துாரம்?'' என்றான்.''விஷயம் தெரியாதா... இன்னைக்கு மாரிமுத்துவுக்கு பாராட்டு விழா. அவனுக்குத் துணையா தான் வந்திருக்கிறேன். நாம் பைத்தியக்காரன்னு நினைச்ச மாரிமுத்து, அவன் அப்பன், பாட்டன் செய்யாத சாதனையைச் செய்துபுட்டான்.''ஒற்றை ஆளாக, ஊரைச் சுற்றி சுத்தம் பண்ணி, ஆயிரத்தோரு மரக்கன்று நட்டுபுட்டான். இதைக் கேள்விபட்டு தாசில்தார், கலெக்டர்ன்னு ஊருக்கு வந்துட்டாங்க. பாராட்டி பணமெல்லாம் கொடுத்தாங்க. பேப்பர்ல எல்லாம் வந்திச்சே!''இப்போ, 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம்' அவனை வரவழைச்சிருக்கு. அவனை பாராட்டி, நட்ட மரக்கன்றுகளை வளர்ப்பதற்கான ஆலோசனை, அதற்கான உதவியெல்லாம் செய்யப் போறாங்களாம். மாரிமுத்து மேடைல உட்கார்ந்திருக்கான்,'' என்றான், ஆறுமுகம்.ரவிச்சந்திரனுக்கு சந்தோஷத்தில் கண்ணீர் வந்தது.'ஏழு தலைமுறைக்கும் பெயர் நிலைக்கிறாப்ல சாதிச்சுட்டானே, நண்பன்...' என்ற பெருமையோடு, மேடை நோக்கி நடந்தான், ரவிச்சந்திரன்.எஸ். சந்திரபோஸ்