உள்ளூர் செய்திகள்

நான் ஏன் பிறந்தேன்? எம்.ஜி.ஆர். (2)

பேசும் திறன் அற்றோர், முகபாவம் மற்றும் அங்க அசைவுகளால், தங்கள் எண்ணங்களை வெளியிட முடியும்.ஒரு கலைஞனோ, தன் எண்ணங்களையும், உணர்வுகளையும், அவனது தொழில் மூலமாக, பேச்சு, எழுத்து மற்றும் பாடல் என வெளிப்படுத்தலாம்.இப்படி, தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த, ஒவ்வொரு மனிதனுக்குமே ஏதாவது ஒரு வழி, இருக்கவே செய்கிறது.என்னைப் பொறுத்தவரை, என் எண்ணம் மற்றும் உணர்வுகளை, என் தொழில் மூலமாகவும், அவ்வப்போது பேச்சு, எழுத்து மூலமாகவும் வெளிப்படுத்துகிறேன்.கலை, என் தொழிலாகவும், அரசியல், அதன் தொடர்ச்சியாகவும் என்னுடன் பிணைந்து விட்ட நிலையில், அவற்றின் மூலமாக என் எண்ணங்களை செயல்படுத்துகிறேன்.நிலத்து இயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு இனத்துஇயல்பது ஆகும் அறிவு.என்பதற்கேற்ப, கலை என்பது, அது சார்ந்த இடத்தின் இயல்புக்கு ஏற்ப அமையும் தன்மை உடையது.'கடவுள் உண்டு...' என்று நம்பும் கலைஞன் ஒருவன், தன் ஒன்பது சுவைகளின் (உணர்வுகள்) உதவியால், ஒரு கதாபாத்திரத்தின் மூலம், தன் கருத்தை வெளிப்படுத்த முடியும்.அதைப் போன்றே, 'கடவுள் இல்லை...' எனும் நடிகனும், அதற்குரிய கதாபாத்திரம் ஏற்று, தன் கருத்தை வெளிக்காட்ட முடியும்.இதைப் போன்றே, ஒவ்வொரு மனிதரும், தங்கள் வாழ்க்கையில், தாங்கள் மேற்கொண்டுள்ள குறிக்கோளுக்கும், அதோடு மோதுகிற சூழ்நிலைக்கும் இடையே, கதாபாத்திரங்களாக மாறி, தங்கள் உணர்வுகளை பயன்படுத்தி, பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர்.என் கடந்த கால வாழ்வைப் பற்றி சொல்வதென்றால், அது, என் வாழ்வோடு, நான் செய்த போராட்டம் என்றே கூறலாம். இப்போராட்டத்தில், நான் கருவிகளாக பயன்படுத்தியவை, பொறுமை, தன்னம்பிக்கை மற்றும் துணிவு!இம்மூன்றும் தான், எப்போதும் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளன. ஆனாலும், இம்மூன்றையும் நான் முழுமையாக பெற்று விட்டேனா என்பதை உறுதியாக கூற முடியாது.இப்போது, இத்தொடரை எழுத காரணமே, என்னிடம் எப்போதும் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிற இம்மூன்று குணங்களும், மற்றவர்களிடமும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதால் தான்!நான், மிகைப்படுத்தி, தற்பெருமையாக கூறுவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், அதுதான் உண்மை.நான் அனுபவித்த வேதனை, சந்தித்த சோதனைகள், என்னை வளைத்துக் கொண்ட சிக்கல்கள் என, என் மனதில் தழும்பேறி விட்ட காரணத்தால், 'எதையும் தாங்க முடியும்...' என்ற துணிவில், சில உண்மைகளை, வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்...ஒவ்வொருவருமே தன் தேவைக்கு, ஒரு எல்லை வைத்திருப்பர் அல்லது எல்லையாவது வகுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், ஒருவன், தன் வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்ளும் போது, அவனுள் எழும் ஆசை, பேராசையாக மாறி, அவனை வேறு திசைக்கு இழுத்துச் சென்று விடும்.'எனக்கு இது வேண்டும்...' என்பது ஆசை; 'எனக்கு மட்டும் தான் இது வேண்டும்...' என்பது பேராசை.'நான் வாழ வேண்டும்...' என்று கூறவும், நினைக்கவும், ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.'நான் மட்டும் தான் வாழ வேண்டும்...' என்றால், அவன், பிறருடைய உரிமையில் குறுக்கிடுகிறான் என்பது பொருள்.இந்த இரு வகையான கருத்துகளை, நன்கு உணர்ந்து, வாழ்க்கையை அமைத்துச் கொள்பவர்கள் எத்தனை பேரை இந்த உலகத்தில் நம்மால் பார்க்க முடிகிறது!ஆனால், என் வாழ்க்கையில், எனக்கு உதவி செய்ய முன் வந்த பெரும்பாலோர், தான் வாழ வேண்டும் என்று நினைத்தனரே அல்லாமல், 'தான் மட்டும் வாழ வேண்டும்...' என்று நினைக்கவில்லை. அப்படி அவர்கள் நினைத்திருந்தால், இன்று நான் இந்த உயரத்தை எட்டியிருக்க முடியாது.வாழ்க்கையில், எத்தனையோ பேரை சந்திக்கிறோம்; எவ்வளவோ நிகழ்வுகள் நிகழ்கின்றன. அத்தனை பேருமா, நம் எண்ணத்தில் நிலைக்கின்றனர்... சம்பந்தப்பட்ட எல்லா நிகழ்வுகளுமா, நம் நினைவில் நிற்கின்றன!நாம் சந்திக்கும் மனிதர்களில் நல்லவர், கெட்டவர் என்று யாராக இருந்தாலும் நம்மால் மறக்க முடியாதவர்களாக ஒருவர் மாறி விடுவதற்கு காரணம், அவர்களுடனான சந்திப்பினால் ஏற்படுகிற விளைவை பொறுத்தது.என் வாழ்க்கையில், நான் சந்தித்த நல்லவர்களில், ஏ.வி.ராமனும் ஒருவர்.இன்று, எங்கள் குடும்பத்தார் வசிப்பதற்கு, தமிழகத்தில் வீடு இருக்கிறது. ஆனால், முதன் முதலாக, தமிழகத்தில், அதுவும் சென்னையில், எங்களுக்கான ஒரு இடத்தை வாங்கியதை இப்போது எண்ணிப் பார்க்கிறேன்...என் அம்மாவுக்கு, தான் சாகும் போது, சொந்த வீட்டில் சாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவர் மரணத்தோடு போராடிய நேரம் அது!எப்படி அவருடைய ஆசையை நிறைவேற்றுவது, எங்கே போய் வீடு வாங்குவது என்று கவலை எங்கள் மனதை அரித்தது. ஆனால், எப்படியோ, என் அம்மாவினுடைய ஆசை நிறைவேறியது. அது, எங்களால் அல்ல; ஏ.வி.ராமன் எனும் பெரியவரின் நல்லெண்ணத்தால்!என் அம்மா எண்ணியபடியே, அவர் எந்த வீட்டில் இறந்தாரோ, அவ்வீட்டை, எங்கள் சொந்த வீடாக, உரிமையாக்கிக் கொண்டோம்.ஏ.வி.ராமனால், எங்களுக்கு உரிமையாக்கப் பட்ட, லாயிட்ஸ் வீதி வீடு, என் நினைவிலிருந்து அகலாத, பல நிகழ்ச்சிகளுக்கு, நிலைக்களனாக அமைந்தது.குறிப்பாக, அவ்வீடு, 'எங்களின் தாய் வீடு' என்ற, தனிச்சிறப்பை பெற்று விட்டதை எண்ணும் போது, நாங்கள் அடைந்த மன நிறைவுக்கு அளவில்லை. இதேபோன்று பல வீடுகளில் நாங்கள் குடியிருந்திருக்கிறோம். அங்கெல்லாம், துக்கத்தினால் மட்டுமல்ல; ஆனந்தத்தினாலும் கண்ணீர் உதிர்த்திருக்கிறோம் என்றாலும், நான் ஈடுபட்ட கலைத் துறையில், மிக மிக நெருக்கடியான காலங்களையும், அதைப் போன்றே, நல்ல திருப்பங்களையும் நான் இந்த இல்லத்தில் வாழ்ந்த போது சந்தித்திருக்கிறேன். — தொடரும்.நன்றி: கண்ணதாசன் பதிப்பகம், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !