உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹிரியூர் தொகுதி இடைத்தேர்தல் பா.ஜ., - ம.ஜ.த., கருத்து மோதல்

ஹிரியூர் தொகுதி இடைத்தேர்தல் பா.ஜ., - ம.ஜ.த., கருத்து மோதல்

பெங்களூரு: ஹிரியூர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில், பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக திட்டம் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சராக இருந்த டி.சுதாகர், 65, கடந்த மே 10ல் மரணம் அடைந்தார். இதனால், அவர் எம்.எல்.ஏ.,வாக இருந்த சித்ரதுர்காவின் ஹிரியூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. சுதாகர் இறந்து ஆறு மாதங்களாகியும், ஹிரியூர் இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இடைத்தேர்தல் நடந்தால் காங்கிரஸ் வேட்பாளராக சுதாகர் மகன் சுஹாஸ் போட்டியிடுவது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. ஆனால் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் யார் போட்டியிடுவர் என்பதை முடிவு செய்வதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. ஹிரியூரில் 1952 முதல், 2023 வரை நடந்த 17 தேர்தல்களில் காங்கிரஸ் 12 முறையும், ம.ஜ.த., 2 முறையும், பிரஜா சோஷலிஸ்ட், சுயேச்சை, பா.ஜ., தலா ஒரு முறையும் வென்று உள்ளனர். இத்தொகுதியில் வேட்பாளர் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் ஒக்கலிகர் சமூக ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் இங்கு போட்டியிட, ம.ஜ.த., ஆர்வம் காட்டுகிறது. ம.ஜ.த., மாநில தலைவரும், மத்திய கனரக தொழில்துறை அமைச்சருமான குமாரசாமி பா.ஜ., மேலிட தலைவர்களுடன் பேசி வருகிறார். இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் அசோக் பெங்களூரில் நேற்று கூறுகையில், ''ஹிரியூர் தொகுதியில் பா.ஜ., வேட்பாளரை தான் நிறுத்த வேண்டும் என்று, மாநில பா.ஜ., தலைவர்கள் முடிவு செய்துள்ளோம். குமாரசாமியுடன் நான் பேசுவேன். எங்கள் கட்சி மேலிட தலைவர்களும், எங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வர் என்று நம்பிக்கை உள்ளது. இருப்பினும் கட்சி மேலிடம் எடுக்கும் இறுதி முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்,'' என்றார். ராம்நகரில் குமாரசாமி கூறுகையில், ''ஹிரியூர் தொகுதி நிலவரம் குறித்து, பா.ஜ., தலைவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வேட்பாளர் யார் என்பதில் பிரச்னை இல்லை. ஆனால் வெற்றி பெற வேண்டும். ''மக்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை இந்த இடைத்தேர்தல் முடிவு வெளிப்படுத்தும். மக்கள் நம்பிக்கையை பெறுவது பா.ஜ., - ம.ஜ.த., தொண்டர்கள் பொறுப்பு. பா.ஜ., தலைவர்களுடன் பேச நானும் தயாராக உள்ளேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி