வளர்ச்சி பணிகள் நடக்காததற்கு துணை முதல்வரே காரணம்: சோமண்ணா
பெங்களூரு : ''பெங்களூரில் வளர்ச்சிப் பணிகள் நடக்காமல் இருக்க, துணை முதல்வர் சிவகுமார் காரணம்,'' என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா குற்றஞ்சாட்டி உள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:'கிரேட்டர் பெங்களூரு' திட்டத்தை கொண்டு வருவதன் மூலம், மாநகராட்சி தேர்தலை இன்னும் தாமதப்படுத்த பார்க்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில், நகரில் ஒரு சாலைப் பள்ளத்தை கூட மூடவில்லை.வளர்ச்சிக்கான எந்த அறிகுறியும் இல்லை. இதற்கு எல்லாம் துணை முதல்வர் சிவகுமார் தான் காரணம்.அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், இப்போது இருக்கும் மாநகராட்சியின் வார்டுகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவோம்.நான் பெங்களூரு நகர மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது, எனக்கு அனுபவம் குறைவாக இருந்தது. இப்போது அந்த துறை அமைச்சராக இருந்திருந்தால், நகரம் நல்லபடியாக மேம்பட்டிருக்கும்.கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, ரயில் சேவை தேவையா என்பது தொடர்பான விவாதம், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கவனத்தில் உள்ளது. விமான நிலையத்திற்கு, மெட்ரோ ரயில் திட்டமும் உள்ளது. இதனால் இரு ரயில் இணைப்புகள் தேவையா என்று ஆலோசித்து முடிவு எடுப்போம்.ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை, மாநில மக்களின் மனதை புண்படுத்தி உள்ளது. இந்த அறிக்கை மூலம் மக்களின் உணர்வுடன், அரசு விளையாட கூடாது. இந்த அறிக்கையை ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.வரும் 30ம் தேதி காலை 8:00 மணிக்கு, டில்லியில் பார்லிமென்ட் வளாகத்தில் பசவ ஜெயந்தி கொண்டாடப்படும். கர்நாடகாவில் பசவண்ணர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.