பங்கார்பேட்டை: கடனை திருப்பி செலுத்த பணம் தர மறுத்ததால் தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகாவின் விஜயநகர் லே - அவுட்டில் வசித்தவர் வெங்கடகிருஷ்ணபாபு, 70. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் வினேஷ்கர், நான்கு ஆண்டுகளாக, பெங்களூரில் தனியாக வசிக்கிறார். இளைய மகன் சீமேஷ்கர், 35, தன் தந்தையுடன், பங்கார்பேட்டை விஜயநகர் லே - அவுட்டில் வசிக்கிறார். சீமேஷ்கர் பல இடங்களில், 75,000 ரூபாய் அளவில் கடன் வாங்கினார். கடன்காரர்கள் நெருக்கடி கொடுத்தனர். எனவே, தந்தை வெங்கடகிருஷ்ணபாபுவிடம் பணம் கேட்டு, தொந்தரவு செய்தார். தந்தை பணம் கொடுக்க மறுத்தார். இதே காரணத்தால் இருவருக்கும், அவ்வப்போது சண்டை நடந்தது. ஆகஸ்ட் 29ம் தேதியன்று இரவு தந்தைக்கும், மகனுக்கும் பண விஷயமாக, காரசார வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த சீமேஷ்கர், இரும்புத்தடியால் தந்தையின் தலையில் பலமாக தாக்கினார். பலத்த காயமடைந்த தந்தை, பெங்களூரின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந்தார். பீதியடைந்த சீமேஷ்கர், தன் மீது சந்தேகம் வராமல் இருப்பதற்காக, அண்ணனுக்கு போன் செய்து, மர்மகும்பல் வீட்டுக்குள் நுழைந்து தந்தையை கடத்த முயற்சித்தது. அதன் பின் அவரை தாக்கிவிட்டு தப்பியதாக நாடகமாடினார். அண்ணனும் பங்கார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். சுற்றுப்பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்ததற்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. குடும்பத்தினரிடமும் விசாரித்தனர். சீமேஷ்கரிடம் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதால் அவரிடம் தீவிரமாக விசாரித்த போது, தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.