| ADDED : நவ 28, 2025 05:33 AM
பெங்களூரு: இரண்டு வாரங்களாக சரிவில் இருந்த தக்காளி விலை, திடீரென உயர்ந்துள்ளதால், விவசாயிகள் குஷி அடைந்துள்ளனர். கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி, தற்போது 80 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெங்களூரில் கடந்த இரண்டு வாரமாக, தக்காளி விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்தது. சரியான விலை கிடைக்காமல், விவசாயிகள் மனம் நொந்தனர். வாகன வாடகைக்கு தேவையான தொகையும் கிடைக்கவில்லை. இதனால் சாலையில் வீசிய சம்பவமும் நடந்தது. இதற்கிடையே, தக்காளி விலை திடீரென ஏறுமுகமாகிறது. இதற்கு முன் கிலோவுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை விற்கப்பட்டது. இப்போது, 80 ரூபாயாக அதிகரித்துள்ளது. தேவைக்கு ஏற்ற வரத்து இல்லாததே, விலை உயர்வுக்கு காரணம். சிக்கபல்லாபூர், கோலாரில் இருந்து பெங்களூருக்கு ஏராளமான லாரிகளில் தக்காளி வரும். சில நாட்களாக, கே.ஆர்.மார்க்கெட், யஷ்வந்த்பூர் உட்பட, அனைத்து மார்க்கெட்களிலும், எதிர்பார்த்த அளவில் தக்காளி வரவில்லை. தேவை அதிகரித்தும், வரத்து குறைந்ததால் விலை அதிகரித்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். கே.ஆர்.மார்க்கெட்டில் கிலோவுக்கு 60 ரூபாயாகவும், மற்ற பகுதிகளில் 80 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 'தக்காளி அதிகம் விளையும் மாவட்டங்களில், மழை, கடுங்குளிரால் தக்காளி விளைச்சல் பாழாகியுள்ளது. இதனால் வரத்து குறைந்துள்ளது. புதிய விளைச்சல் வரும் வரை, விலை குறையாது' என, வியாபாரிகள் கூறுகின்றனர்.