| ADDED : நவ 19, 2025 09:04 AM
பெங்களூரு: “நாங்கள் புதுடில்லியில் இருப்பவர்களின் அடிமை இல்லை,” என கூறி, காங்கிரசாரை பா.ஜ., - எம்.எல்.சி., சி.டி.ரவி மறைமு கமாக விமர்சனம் செய்துள்ளார். அவர் அளித்த பேட்டி: நாங்கள் புதுடில்லியில் இருப்பவர்களின் அடிமை இல்லை. முதல்வர் சித்தராமையாவிடம் அதிகாரம் இருந்திருந்தால், அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிக்க ஏன் டில்லி செல்ல வேண்டும்? அமைச்சரவை மாற்றத்திற்கு பணம் ஏதாவது வாங்கப்படுகிறதா? அதனால் தான் அமைச்சரவை மாற்றம் தள்ளிப் போகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. பாகல்கோட்டில் கரும்பு விவசாயிகள் போராட்டம் பல நாட்களாக நடந்து வருகிறது. கரும்பு விவசாயிகளுக்கு ஆதார விலையாக 1 டன்னுக்கு 3,550 ரூபாய் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. மத்திய அரசின் ஆதார விலையை கணிசமாக உயர்த்தி, கரும்பு விவசாயிகளுக்கு பல மாநில அரசுகள் வழங்கி உள்ளன. ஆனால், கர்நாடகாவில் மத்திய அரசு நிர்ணயித்த ஆதரவு விலையை விட குறைவாகவே வழங்கப்படுகிறது. இதனாலே, போராட்டம் வெடித்தது. மாநில அரசின் பணி என்ன? விவசாயிகளை வீதியில் இறங்கி போராட வைப்பது தான் அரசின் வேலையா? மாநில அரசு ஒரு முடிவு எடுத்தால், அதை நிறைவேற்ற போராட வேண்டும். விவசாயிகள் விஷயத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை எப்படி நிறைவேற்றுவது என காங்கிரஸ் அரசு, அண்டை மாநிலங்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தால், கலவரம் வெடிக்கும். இது நல்லதற்கல்ல. இவ்வாறு அவர் கூறினார்.