UPDATED : நவ 17, 2026 12:00 AM | ADDED : நவ 16, 2026 08:00 PM
சர்ஜாபுரா: ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை, மீட்க சென்ற நபரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். பெங்களூரு ரூரல் மாவட்டம் ஆனேக்கல் தாலுகாவின் கல்குன்டே அக்ரஹாரா கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாஸ், 40. இவரது மனைவி கவிதா, 35. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்கிடையே அவ்வப்போது சண்டை நடக்கும். இதனால் மனம் வருந்திய கவிதா, ஆனேக்கல்லின், முகளூரில் உள்ள தெற்கு பினாகினி ஆற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் இவரது உடல் நீரில் மிதப்பதை பார்த்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த சர்ஜாபுரா போலீசார், பெண்ணின் உடலை வெளியே எடுப்பதற்காக, மாலுாரில் இருந்து மஞ்சுநாத் என்பவரை வரவழைத்தனர். அவர் நேற்று காலை ஆற்றில் இறங்கி, பெண்ணின் உடலை வெளியே எடுக்க முற்பட்ட போது, மஞ்சுநாத்தும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தீயணைப்பு படையினர் இருவர் உடல்களையும் தேடுகின்றனர்.