மும்பை: ரிசர்வ் வங்கி, மோசடி இடர் மேலாண்மை தொடர்பாக, வங்கிகளுக்கான அதன் வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, இனி கடனை திருப்பிச் செலுத்தாதவரின் கணக்கை, மோசடி கணக்காக அறிவிப்பதற்கு முன்பு, வங்கிகள் அவர்களுடைய நிலை குறித்து எடுத்துரைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு
இதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு மார்ச் மாதத்தில், மோசடி கணக்குகள் குறித்து வழங்கிய தீர்ப்பை கருத்தில்கொண்டு, வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, இனி, தனிநபரையோ அல்லது நிறுவனத்தையோ மோசடியாளர் என்று வகைப்படுத்துவதற்கு முன், வங்கிகள் இதுகுறித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மேலும், அவர்களுக்கு தங்களது நிலை குறித்து எடுத்துரைக்க, வாய்ப்பு வழங்க வேண்டும். இதுவரை உள்ள நடைமுறையின்படி, கடனைத் திருப்பிச் செலுத்தாதவருக்கு, இந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. நியாயமான வாய்ப்பு
இந்நிலையில், வங்கிகளின் தன்னிச்சையான செயல்பாடுகளைத் தவிர்க்கவும்; இதுபோன்ற வாடிக்கையாளர்களுக்கு நியாயமான வாய்ப்பு வழங்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.வங்கிகளில் மோசடிகளை முன்கூட்டியே கண்டறிவதற்கும் தடுப்பதற்கும், சட்ட அமலாக்க முகவர் மற்றும் மேற்பார்வையாளர்களிடம், சரியான நேரத்தில் புகார் செய்வதற்குமான வழிமுறைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.