கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்பாக நீங்கள் அறிந்திருக்க வேண்டிய பல்வேறு அம்சங்களில் கடன் பயன்பாடு விகிதமும் முக்கியமானது. ஒவ்வொரு கிரெடிட் கார்டிலும் அனுமதிக்கப்பட்ட கடன் அளவு இருக்கிறது அல்லவா? அந்த அளவில், பயனாளிகள் பயன்படுத்திக் கொள்ளும் தொகை கடன் பயன்பாடு விகிதம் என கொள்ளப்படுகிறது. இந்த விகிதம் கடன் தகுதியை தீர்மானிக்கும் கிரெடிட் ஸ்கோர் மீது தாக்கம் செலுத்துவதால், இதை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். இதற்கான வழிகளை பார்க்கலாம்.கடன் விகிதம்:
அனுமதிக்கப்பட்ட கடன் வரம்பில், பயன்படுத்தப்படும் தொகை கடன் பயன்பாடு விகிதமாக அமைகிறது. உதாரணமாக, கார்டு கடன் வரம்பு 1 லட்சம் ரூபாய் என்றால், 20,000 பயன்படுத்தினால் கடன் பயன்பாடு 20 சதவீதமாக அமைகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகள் இருந்தால், அவை கூட்டாக கணக்கில் கொள்ளப்படும்.கடன் தாக்கம்:
ஒருவர் கார்டை பயன்படுத்தும் விதத்திற்கு ஏற்ப கடன் பயன்பாடு விகிதம் அமையும். இந்த விகிதம் கிரெடிட் ஸ்கோரை தீர்மானிக்கும் அம்சங்களில் ஒன்றாக கணக்கில் கொள்ளப்படுகிறது. பொதுவாக, குறைவான கடன் பயன்பாடு விகிதம், கிரெடிட் ஸ்கோரில் சாதகமான முறையில் தாக்கம் செலுத்துகிறது.அதிக விகிதம்:
அதே நேரத்தில் கடன் பயன்பாடு விகிதம் அதிகமாக இருந்தால் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். ஏனெனில், அதிக கடன் பயன்பாடு என்பது கடனுக்கான தேவை அதிகம் என்பதை உணர்த்துகிறது. இது, பயனாளி செலவுகளை கட்டுப்படுத்த முடியாதவர் என்பதையும் குறிப்பதால் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கிறது.சரியான அளவு:
பொதுவாக, கடன் பயன்பாடு விகிதம் 30 சதவீதம் அல்லது அதற்கு குறைவாக இருப்பது சாதகமாகக் கருதப்படுகிறது. கார்டு பயனாளியின் செலவு கட்டுப்பாட்டை இது உணர்த்துகிறது. எனவே, கார்டை பயன்படுத்தும் போது கடன் பயன்பாடு விகிதம் குறைவாக இருப்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.பலவித வழிகள்:
கடன் வரம்பை மனதில் கொண்டு செலவு செய்வதோடு, கடன் வரம்பை உயர்த்தும் வாய்ப்பு வழங்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்வது நல்லது. இது, கடன் பயன்பாடு விகிதம் குறைய உதவும். ஆனால், கிரெடிட் ஸ்கோரில் மற்ற அம்சங்களும் தாக்கம் செலுத்துவதை மனதில் கொள்ள வேண்டும்.