| ADDED : பிப் 04, 2024 01:10 AM
புதுடில்லி:'பேடிஎம் பேமென்ட்ஸ்' வங்கி செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், அதற்கு காரணம் வங்கியில் ஒழுங்கற்ற கே.ஒய்.சி., விதிகளால் மேற்கொள்ளப்பட்ட பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றங்கள் தான் என செய்திகள் வருகின்றன.இது குறித்து விபரம் அறிந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்ததாவது:தணிக்கை அறிக்கை தொடர்பாக பேடிஎம் வங்கிக்கு எதிராக ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது. ஒழுங்கற்ற கே.ஒய்.சி., விதிகளால் மேற்கொள்ளப்பட்ட பல கோடி ரூபாய் பணப் பரிமாற்றங்களே இதற்கு காரணம். 1,000க்கும் மேற்பட்ட பயனர்கள் ஒரே பான் கார்டு எண்ணை தங்கள் வங்கிக் கணக்குகளுடன் இணைத்துள்ளனர். இது, சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்த கேள்விகளை எழுப்பியது. ரிசர்வ் வங்கியும், தணிக்கையாளர்களும் இதுகுறித்து சரிபார்க்கும்போது, பேடிஎம் வங்கி சமர்ப்பித்த தகவல்கள் பல இடங்களில் தவறாக இருப்பது கண்டறியப்பட்டது. குழுமத்தினுள் மற்றும் குழுமத்துக்கு தொடர்புடையவர்களுக்குள் நடந்த முக்கிய பரிவர்த்தனைகளை வெளியிடாதது குறித்த சந்தேககங்களும் எழுந்தன.மேலும், தாய் நிறுவனமான 'ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனத்துடனான தொடர்பின் அடிப்படையில், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் நிர்வாகத்தில் சில விதிமீறல்கள் இருப்பதையும் ரிசர்வ் வங்கி கண்டறிந்தது. தாய் நிறுவனத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள், தரவு காப்பு குறித்த கவலைகளையும் எழுப்பியது. இவை தான் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு அடிப்படை காரணங்களாக அமைந்தன.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த 'மார்கன் ஸ்டான்லி' நிறுவனம், பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ்' நிறுவனத்தின் பங்குகளை, 244 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. பேடிஎம் வங்கி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் நிலையில், இதை ஒரு நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி பங்குகளை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பின், இரண்டே நாட்களில் பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் விலை 36 சதவீத சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.