புதுடில்லி,:மூலிகை மற்றும் மசாலா பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவை, பத்துமடங்கு வரை அதிகரித்துக்கொள்ள எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், அனுமதித்திருக்கும் செய்தி வெளியாகி உள்ளது.இந்திய மசாலா பொருட்கள் சிலவற்றில் அளவுக்கு அதிகமாக 'எத்திலீன் ஆக்சைடு' பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதாக கூறி சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகள் அவற்றின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவை, இந்திய மசாலா பொருட்கள் குறித்த விசாரணையில் இறங்கி உள்ளன.வெளிநாடுகளில் தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில், உள்நாட்டில், மசாலா பொருட்கள் தயாரிப்பில், இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய விதிமுறைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது ஒருபுறமிருக்க, மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லி அளவுக்கான அனுமதியை, ஆணையம் அண்மையில் தளர்த்தி உள்ளது. இந்த பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லிகளுக்கான, எம்.ஆர்.எல்., எனும் அளவு, முன்பு கிலோ ஒன்றுக்கு, 0.01 மில்லி கிராமாக இருந்தது. ஆனால் தற்போது, கிலோ ஒன்றுக்கு, 0.1 மில்லி கிராமாக பத்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு, ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த தளர்வானது, ஏற்றுமதி சந்தைகளில், இந்திய மசாலா பொருட்களை நிராகரிப்பதற்கு வழிவகுக்கும் எனவும், இது வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் எனவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.