| ADDED : ஆக 21, 2024 12:45 AM
புதுடில்லி: எரிபொருளுடன் எத்தனால் கலப்பை அதிகரிக்கும் மத்திய அரசின் இலக்கிற்கு கரும்பை அதிகமாக பயன்படுத்த வேண்டியிருக்கும் என கிரிசில் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வகையில், பெட்ரோலுடன் கச்சா எண்ணெய் கலப்பை 2025க்குள் 20 சதவீதமாக உயர்த்துவது என, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு முதல் எத்தனால் கலப்பு விகிதம் சீராக அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிரிசில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சர்க்கரை அடிப்படையிலான எத்தனால் வினியோகத்தில் மூன்றில் ஒரு பங்கை கொண்ட 17 சர்க்கரை ஆலைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், இந்த ஆண்டு கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கரும்பில் இருந்து எத்தனால் உற்பத்தி கிட்டத்தட்ட 250 கோடி லிட்டராக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தானியங்களில் இருந்து எத்தனால் உற்பத்தி அதிகரித்துள்ளதால், கரும்பில் இருந்து குறைந்த உற்பத்தியை இது ஈடு செய்யும். வரவிருக்கும் 2025 சீசனில் மொத்த சர்க்கரை உற்பத்தி 3.35 கோடி டன்னாக இருக்கும் எனவும், நுகர்வு தோராயமாக 2.95 கோடி டன்னாக இருக்கும் எனவும், இந்த பருவத்தின் இறுதிக்குள் சர்க்கரை கையிருப்பு ஆரோக்கியமானதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது-. நுகர்வு போக கூடுதலாக இருக்கும் 40 லட்சம் டன் சர்க்கரை எத்தனால் உற்பத்திக்கு பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படலாம். மீதமுள்ள எத்தனால் தேவைக்கு தானியங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படலாம். நடப்பு சீசனில் இதன் உற்பத்தி மதிப்பீடு 380 கோடி லிட்டராக உள்ளது. தானியங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனால், அடுத்த சீசனுக்குள் கிட்டத்தட்ட 600 கோடி லிட்டராக கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.