புதுடில்லி:ஜூலை மாதத்துக்கான மின்சார வாகன விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு. மின்சார பயணியர் கார் விற்பனையை தவிர, மற்ற வகை வாகனங்களின் விற்பனை, நல்ல வளர்ச்சியை கண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை குறித்து, வாகன முகவர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மனீஷ் ராஜ் சிங்கானியா தெரிவித்துஉள்ளதாவது:ஜூலை மாத மின்சார வாகன விற்பனை 53.52 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், 1.16 லட்சம் மின்சார வாகனங்கள் விற்பனை ஆன நிலையில், இந்த ஜூலையில் 1.79 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன சந்தையில், மின்சார வாகனங்களின் சந்தை பங்கு, 7.40 மற்றும் 57.60 சதவீதமாக உயர்ந்துள்ளன. இது, இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு மற்றும் தேவை அதிகரிப்பை சுட்டிக்காட்டுகிறது. பயணியர் கார் சந்தையில், மின்சார கார்களின் பங்கு, எந்த மாற்றமும் இன்றி 2.40 சதவீதமாக தொடர்கிறது.வர்த்தக வாகன சந்தையில், மின்சார வாகன பங்கு 1.02 சதவீதத்தை எட்டி உள்ளது. மின்சார போக்குவரத்து ஊக்குவிப்பு திட்ட நீட்டிப்பு மற்றும் கவர்ச்சிகரமான சலுகைகள் ஆகியவை, விற்பனையை உயர்த்தி உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வாகன வகை ஜூலை 2024 ஜூலை 2023 வளர்ச்சி (%)
இரு சக்கர வாகனம் 1,07,016 54,616 95.94மூன்று சக்கர வாகனம் 63,665 53,873 18.18பயணியர் கார் 7,541 7,768 2.92 (குறைவு)வர்த்தக வாகனம் 816 364 124.20மொத்தம் 1,79,038 1,16,621 53.52