| ADDED : ஜூன் 18, 2024 04:25 AM
புதுடில்லி : நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் காரணமாக, பயணங்கள் குறைந்ததால், நடப்பு ஜூன் மாதத்தில், டீசலின் தேவை 4 சதவீதம் சரிந்துள்ளதாக, எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் ஆரம்ப கட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. எரிபொருள் விற்பனை சந்தையில், கிட்டத்தட்ட 90 சதவீதத்தை, அரசுக்கு சொந்தமான மூன்று எண்ணெய் நிறுவனங்கள் வைத்திருக்கின்றன. இவற்றின் பெட்ரோல் விற்பனையானது, ஜூன் மாதத்தின் முதல் பாதியில் 14.20 லட்சம் டன்னாக இருந்தது. கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், 4.60 சதவீதம் குறைந்து உள்ளது.டீசல் விற்பனையும் 3.90 சதவீதம் சரிந்துள்ளது. நாட்டில் அதிகம் நுகரப்படும் எரிபொருளான டீசலின் தேவை தொடர்ந்து குறைந்து வருகிறது. மே மாதத்தில் 1.10 சதவீதமும், ஏப்ரலில் 2.30 சதவீதமும், மார்ச்சில் 2.70 சதவீதமும் டீசல் விற்பனை குறைந்துள்ளது.தேர்தல் பிரசாரம், கோடைகால அறுவடை காலம், சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வாகன ஏ.சி.,யின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக சரிவை சந்தித்து உள்ளது.