உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இரண்டாக பிரிந்த 127 ஆண்டு சாம்ராஜ்யம் சுமுகமாக பிரித்து கொண்ட வாரிசுதாரர்கள்

இரண்டாக பிரிந்த 127 ஆண்டு சாம்ராஜ்யம் சுமுகமாக பிரித்து கொண்ட வாரிசுதாரர்கள்

ஒரு வணிகத்தை பிரிப்பது என்பது சாமானியமான விஷயமல்ல. பெரும்பாலும் அது சுமூகமாக நடந்து முடிவதில்லை. அம்பானிகள் விஷயத்தில்கூட இது நடந்தது. அனில் அம்பானிக்கும், முகேஷ் அம்பானிக்கும் இடையே சொத்து பிரச்னை பெரிதாக எழுந்து, கடைசியில் அவர்களது தாயார் கோகிலாபென் தலையிட்டு, முடித்து வைக்கப்பட்டது.ஆனால், எந்த ஒரு பிரச்னையும் பெரிதாக எழாமல் கோத்ரெஜ் எனும் சாம்ராஜ்யம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. கிட்டத்தட்ட 127 ஆண்டுகளுக்கு முன்பாக, பூட்டு தயாரிப்பின் வாயிலாக தனது வணிகத்தை நிலைநாட்டியது 'கோத்ரெஜ்' நிறுவனம். அதன்பின், பல துறைகளில் அது கால்பதித்தது. இந்நிலையில், தற்போது அந்த வணிகங்களை தங்களுக்கிடையே பிரித்துக்கொள்ள, கோத்ரெஜ் நிறுவனரின் வாரிசுதாரர்கள் முடிவு செய்துள்ளனர். கடந்த 1897ம் ஆண்டு, அர்தேஷிர் கோத்ரெஜ் மற்றும் அவரது இளைய சகோதரர் பிரோஜ்ஷா கோத்ரெஜ் ஆகிய இருவரும் இணைந்து 'கோத்ரெஜ்' நிறுவனத்தை துவக்கினர். பூட்டு தயாரிப்புக்கு முன்னதாக வேறு சில வணிகங்களில் ஈடுபட்டு வந்தபோதிலும், அவை எதுவும் அவர்களுக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இறுதியில் பூட்டு வணிகத்தில் இறங்க, அதுவே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 'கோத்ரெஜ் நவ்டால்' பூட்டுகள் இன்றளவும் பிரபலமானவை. இதன்பின் ரசாயனங்கள், மரச்சாமான்கள், ரியல் எஸ்டேட், வீடு மற்றும் தனிநபர் பராமரிப்பு, கனரக பொறியியல், சரக்கு கையாளுகை, விண்வெளி, உள்கட்டமைப்பு, உணவு, வேளாண் பொருட்கள் என கோத்ரெஜ் சாம்ராஜ்யம் பரந்து விரிந்தது.மும்பையின் மிகப்பெரிய நிலபிரபுக்களில் கோத்ரேஜ் குடும்பத்தினரும் அடங்குவர். மும்பையில் கிட்டத்தட்ட 3,400 ஏக்கர் நிலம் இவர்கள் வசம் உள்ளது. இதில் 3,000 ஏக்கர் நிலம் ஒருசேர உள்ளது. இதுவே, ரியல் எஸ்டேட் வணிகத்தில் கோத்ரெஜ் நிறுவனம் தீவிரமாக ஈடுபட, முக்கியக் காரணமாக அமைந்தது. இந்நிறுவனம் உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் கால்பதித்துள்ளது. வளர்ந்து வரும் சந்தைகளான ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பில் நிறுவனம் முன்னிலை வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோத்ரெஜ் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த சகோதர - சகோதரிகள், தங்களுக்கிடையே இந்த வணிகங்களை பிரித்துக்கொள்ள தற்போது முடிவு செய்துள்ளனர். வெவ்வேறு வணிகங்களின்மீது குடும்பத்தினரிடையே உள்ள வேறுபட்ட ஆர்வத்தை கருத்தில்கொண்டு, இந்த முடிவு சுமூகமாகவே எடுக்கப்பட்டுள்ளதாக கோத்ரெஜ் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 'கோத்ரெஜ் அண்டு பாய்ஸ் தயாரிப்பு நிறுவனம்', நவல் கோத்ரெஜின் பிள்ளைகளான ஜாம்ஷெட் கோத்ரெஜ் மற்றும் ஸ்மிதா கிருஷ்ணா ஆகியோரது குடும்பங்களின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 'கோத்ரெஜ் என்டர்பிரைசஸ் குழுமம்' என்ற பெயரின் கீழ் இயங்க உள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத இந்நிறுவனம் விண்வெளி, விமான போக்குவரத்து, பாதுகாப்பு, கட்டுமானம் உள்ளிட்ட பல துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ஜாம்ஷெட் கோத்ரெஜ் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கோத்ரெஜின் ஐந்து நிறுவனங்களும் புர்ஜோர் கோத்ரெஜின் பிள்ளைகளான ஆதி மற்றும் நாதிர் ஆகியோரது குடும்பங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்தமாக 'கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம்' என்று அழைக்கப்பட உள்ளது. இக்குழுமத்திற்கு நாதிர் கோத்ரெஜ் தலைவராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறியுள்ள வாரிசுரிமையை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து நிறுவனங்களிலும் அதற்கேற்ப குடும்பத்தாரின் பங்கு உரிமைகள் மாற்றியமைக்கப்படும் என்றும்; இதுதொடர்பாக பங்குச் சந்தை ஒப்புதலுக்கு காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு பிரிவினருமே 'கோத்ரெஜ்' பிராண்டின் பெயரை தொடர்ந்து பயன்படுத்துவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்தேஷிர் கோத்ரெஜ் மற்றும் அவரது இளைய சகோதரர் பிரோஜ்ஷா கோத்ரெஜ் இணைந்து கடந்த 1897ம் ஆண்டு 'கோத்ரெஜ்' நிறுவனத்தை துவங்கினர்

நிறுவனர்கள் அர்தேஷிர் பிரோஜ்ஷா (குழந்தைகள் இல்லை)இளைய சகோதரர் பிரோஜ்ஷா கோத்ரெஜ் -க்கு (நான்கு மகன்கள்) சோரப் தோசா புர்ஜோர் நவல் (குழந்தைகள் இல்லை) ரிஷாத் (திருமணமாகாதவர்) ஆதி நாதிர் ஜாம்ஷெட் கோத்ரெஜ் ஸ்மிதா கிருஷ்ணா கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் கோத்ரெஜ் என்டர்பிரைசஸ் குழுமம் (கோத்ரெஜ் அண்டு பாய்ஸ்) தன்யா துபாஷ் நிசாபா கோத்ரெஜ் பிரோஜ்ஷா கோத்ரெஜ் புர்ஜிஸ் சோரப் ஹோர்முஸ்ஜி நவ்ரோஸ் கோத்ரெஜ் ரைகா கோத்ரெஜ் நிரிகா ஹோல்கர் ப்ரீயன் கிருஷ்ணா பைரி -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி