| ADDED : ஆக 16, 2024 11:31 PM
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில், நாட்டின் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.60 சதவீதமாக குறைந்தது. இது முந்தைய காலாண்டில், 6.70 சதவீதமாக பதிவாகி இருந்தது. மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தொழிலாளர் கணக்கெடுப்பு விபரங்களில் கூறப்பட்டுள்ள தாவது:ஆண்கள் வேலைவாய்ப்பின்மை விகிதம், முந்தைய காலாண்டில் 6.10 சதவீதமாக பதிவான நிலையில். ஜூன் காலாண்டில், 5.80 சதவீதமாக குறைந்தது. இதற்கு மாறாக, பெண்கள் வேலைவாய்ப்பின்மை விகிதம், முந்தைய காலாண்டில் 8.50 சதவீதமாக பதிவான நிலையில், ஜூன் காலாண்டில், 9 சதவீதமாக அதிகரித்து இருந்தது.மேலும், 15 முதல் 29 வயதுக்குட்பட்ட வேலையில்லாத இளைஞர்களின் விகிதம், முந்தைய காலாண்டில், 17 சதவீதமாக பதிவாகிய நிலையில், ஜூன் காலாண்டில் 16.80 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த பிரிவிலும், வேலையில்லாத இளம்பெண்களின் விகிதம், முந்தைய காலாண்டை விட, ஜூன் காலாண்டில் அதிகரித்து உள்ளது.இதேபோல், தொழிலாளர் பங்கேற்பு விகிதம், முந்தைய காலாண்டில் 50.20 சதவீதத்தில் இருந்து, ஜூன் காலாண்டில் 50.10 சதவீதமாக குறைந்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.