கோவை:''இந்தியாவில், 31,000 கோடி ரூபாய் மதிப்பில் நறுமண பயிர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது,'' என, மத்திய நறுமணப் பொருட்கள் வாரிய செயலர் சத்யன் தெரிவித்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலை மற்றும் நறுமணப் பொருட்கள் வாரியம் சார்பில், ' வாங்குவோர் - விற்போர்' சந்திப்பு நிகழ்வு நேற்று பல்கலை அரங்கில் நடந்தது. இதில், மத்திய நறுமணப் பொருட்கள் வாரிய செயலர் சத்யன் தலைமை வகித்து நிகழ்ச்சிகளை துவக்கிவைத்து அவர் பேசியதாவது:நறுமணப் பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பயன்பாட்டில் நம் நாடு முதலிடத்தில் உள்ளது. நம் நாட்டில், 70க்கும் மேற்பட்ட நறுமணப் பயிர்கள் விளைவிக்கப்படுவது தனி சிறப்பு. வேறு எந்த நாடுகளிலும் இத்தனை வகைகள் உற்பத்தி செய்யப்படுவதில்லை.இந்தியாவில், 111 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. 31,000 கோடி ரூபாய் மதிப்பில் நறுமணப் பயிர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சீனா, அமெரிக்கா, தாய்லாந்து, மலேஷியா உள்ளிட்ட, 180 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதியில், 2030ம் ஆண்டுக்குள், 10 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பல்வேறு காரணங்களுக்காக, வெளிநாடுகளில் இருந்து நறுமணப் பயிர்கள் இறக்குமதி செய்து இங்கு மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நறுமணப் பயிர்கள் வாரியம் சார்பில், ஏற்றுமதி சார்ந்த சான்றிதழ்கள் பெறவும், தரச்சான்றிதழ் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு ஒத்துழைப்பு விவசாயிகள், ஏற்றுமதியாளர்கள், தொழில்முனைவோருக்கு வழங்கப்படுகிறது.இந்தியாவில், 9,000 பதிவு செய்யப்பட்ட நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். தமிழகத்தில், 1600 பேர் பதிவு செய்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்வில், மஞ்சள், மிளகு, ஜாதிக்காய், ஏலக்காய் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் பங்கேற்று ஆலோசனை மேற்கொண்டனர்.