உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கட்டணமின்றி சிகிச்சை பெற காப்பீட்டில் புதிய விதிகள்

கட்டணமின்றி சிகிச்சை பெற காப்பீட்டில் புதிய விதிகள்

புதுடில்லி: ஜி.ஐ.சி., என்னும் ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில், அனைத்து மருத்துவமனைகளிலும் பணமின்றி சிகிச்சை பெறும் திட்டத்தை நேற்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக இனி பாலிசிதாரர்கள் தங்கள் காப்பீட்டு நிறுவனத்தின் நெட்வொர்க்கின் கீழ் இல்லாத பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், அதற்கு பணம் செலுத்தத் தேவையில்லை. அவர்களின் காப்பீட்டு நிறுவனமே அந்த பணத்தை செலுத்தி விடும். தற்போது வரை உள்ள நடைமுறைகளின்படி, காப்பீட்டு நிறுவனங்களின் நெட்வொர்க்கின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மட்டுமே காப்பீட்டு நிறுவனங்கள் சிகிச்சைக்கான பணத்தை மருத்துவமனைகளுக்கு வழங்கும். மாறாக, பிற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் பாலிசிதாரர் தனது கையிலிருந்து பணத்தை செலவு செய்ய வேண்டும். அதன்பிறகு, பல சிரமமான நடைமுறைகளை பின்பற்றிய பின்னரே, காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து தாங்கள் செலவழித்த பணத்தை பெற முடியும். இந்த சூழலை தவிர்த்து நடைமுறையை எளிதாக்கவே, ஜி.ஐ.சி., தற்போது இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, அவசர சிகிச்சையின்போது சிகிச்சை பெறத் துவங்கிய 48 மணி நேரத்துக்கு உள்ளாக காப்பீட்டு நிறுவனத்துக்கு மருத்துவமனை குறித்த தகவலை வழங்க வேண்டும். மேலும் காப்பீட்டு நிறுவனத்தின் வழிகாட்டு தல்களில், ஏற்கனவே பணமில்லா சிகிச்சை ஏற்றுக்கொள்ளப்படும் என்ற விதி இருந்தால் மட்டுமே இந்த வசதியை பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி