| ADDED : மார் 17, 2024 01:45 AM
புதுடில்லி:தொலைதொடர்பு உபகரணங்களின் திருட்டு அதிகரித்து வருவதையடுத்து, அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு, உரிய தீர்வு காண உதவ வேண்டும் என, தொலைதொடர்பு சேவை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுகுறித்து, இந்திய செல்லுலார் ஆபரேட்டர் சங்கம், தொலைதொடர்புத்துறை செயலர் நீரஜ் மிட்டலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: செயல்பாட்டில் இருக்கும் தொலைதொடர்பு உபகரணங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இதில் மத்திய அரசு தலையிட வேண்டும். இத்திருட்டினால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் இழப்பும், கூடுதல் செலவும் ஏற்படுகிறது. ரிமோட் ரேடியோ யூனிட் மற்றும் பேஸ்பேண்ட் யூனிட் ஆகியவை திருடப்படும் கருவிகளில் அதிகமாகும்.இது போன்ற திருட்டு சம்பவங்கள், கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இது சேவை வழங்குபவர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்திஉள்ளது. இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும். தேசிய தலைநகர் பகுதி, ராஜஸ்தான், அசாம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த குற்றச்சம்பவங்களின் விகிதாசாரம் அதிகமாக உள்ளது. நாடு முழுதும் பதிவாகும் திருட்டு சம்பவங்களில் 50 சதவீதம், மேற்கண்ட மாநிலங்களின் 31 மாவட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திருடப்பட்ட உபகரணங்கள் சில, வெளிநாட்டு இணையதளங்கள் வாயிலாக விற்கபடுவதாக சந்தேகம் உள்ளது. மத்திய அரசு இப்பிரச்னையில் தலையிட்டு உரிய தீர்வு காண உதவ வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளது.