உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  தெளிவான சிக்னலுக்கு காத்திருக்கும் ரூபாய்

 தெளிவான சிக்னலுக்கு காத்திருக்கும் ரூபாய்

ரூபாய் மதிப்பு நேற்றைய வர்த்தக முடிவில், சிறிய இறக்கத்துடனே காணப்பட்டது. இந்த வாரம் முழுவதும், இந்திய ரூபாய் மதிப்பு, ஒரு குறுகிய வரம்பிற்குள்ளேயே முடிவடைந்தது. அதாவது, கிட்டத்தட்ட மாற்றமில்லாமல் இருந்தது. நிப்டி 50 புதிய உச்சத்தை தொட்டபோதிலும், ரூபாய் மதிப்பில் பெரிய மாற்றம் இல்லை. தற்காலிகமான நிதி நகர்வுகளை மட்டுமே இது பிரதிபலிக்கிறது. உலகளாவிய மற்றும் உள்நாட்டு காரணிகளிலிருந்து தெளிவான சிக்னல்களுக்காக ரூபாய் காத்திருக்கிறது. குறிப்பாக, அமெரிக்க பெடரல் வங்கி, கடன் வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு, ஒரு வாரத்திற்கு முன் 30 சதவீதமாக இருந்த நிலையில், அது தற்போது 84 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, 100-ஐ தாண்டியிருந்த டாலர் குறியீடு, தற்போது 99.50-ஐ நோக்கி சரிந்துள்ளது. டாலர் பலவீனமடையும்போது, வளர்ந்து வரும் சந்தை நாணயங்கள் உட்பட இந்திய ரூபாய்க்கும் ஆதரவு கிடைக்கும். பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்திற்கு கீழ் உள்ளதால், வட்டி விகித குறைப்புக்கு வழிவகுக்கிறது. இருப்பினும், பொருளாதார வளர்ச்சி வலுவாக இருப்பதால், வட்டி விகிதங்களை குறைப்பதற்கான அவசரம் குறைவாகவே உள்ளது. எனவே, வரும் டிசம்பர் 5ல் நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை அறிவிப்பில் கவனம் திரும்பியுள்ளது. ரூபாய் மதிப்பை நிலைநிறுத்துவதற்காக, ரிசர்வ் வங்கி டாலர்களை விற்பனை செய்வதாக, சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. குறுகிய காலத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 88.90 - 89.80 என்ற வரம்பிற்குள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 88.80 - 89.00 ரூபாய் ஒரு வலுவான ஆதரவு நிலையாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !